வேலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு அருகிலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் விற்பனை அமோகமாக நடப்பதால், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புகையிலை, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளது.ஆனால், வேலூர் மாவட்டத்தில் பெட்டி கடைகளில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுபோன்ற போதை பொருட்களுக்கு பள்ளி, கல்லூரி மாணவர்களும் அடிமையாகி வருவதாக பெற்றோர் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘வேலூர் மாவட்டத்தில் சமீப காலமாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை அதிகரிக்க தொடங்கியுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் 100 மீட்டர் தொலைவில் சிகரெட் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் பெட்டி கடைகளில் சிகரெட் மட்டுமின்றி தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களும் விற்பனை அமோகமாக நடக்கிறது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகளும், காவல்துறையினரும் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.சிகரெட் பாக்கெட் அட்டைகளில் 70 சதவீதம் அளவிற்கு புற்றுநோய் பாதிப்பை விளக்கும் வகையில் எச்சரிக்கை விளம்பரம் செய்ய வேண்டும். இந்த விளம்பரத்தை அனைவரும் பார்த்து விழிப்புணர்வு அடைய சிகரெட்டுகளை பாக்கெட்டுடன் மொத்தமாக விற்பனை செய்ய வேண்டும். தனித்தனியாக விற்பனை செய்யக்கூடாதுஎன்பது உள்ளிட்ட விதிமுறைகள் உள்ளன. ஆனால், சிகரெட்டுகள் விதிமீறி தனித்தனியாக விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விழிப்புணர்வு புகைப்படம் அச்சிடுவதில் பயனில்லை. இதுகுறித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.