“போகுது போகுது பூசணிக்கா.. சிக்குது சிக்குது சுண்டக்கா” என்று கூறப்படுவதுபோல மணலை சுரண்டி வாரிச்செல்லும் டாரஸ் லாரிகளைவிட்டு விட்டு மாட்டு வண்டிகளை பிடித்து கடத்தலை தடுப்பதாக கணக்கு காட்டுகிறது காவல்துறை. இதன்மூலம் வருவாய் ஈட்டுகிறது வருவாய்த்துறை.

விழுப்புரம் மாவட்டத்தில் ஆண்ட, ஆளுகின்ற கழக நிர்வாகிகளால் கடந்த காலங்களில் மணல் சுரண்டப்பட்டு ஆறுகள் காலியானது. இதன் மூலம் பலனடைந்தோர் கோடிகளில் புரள சிறுகட்டுமான பணிகளுக்கு மணல்எடுத்து பிழைப்பு நடத்தும் குடியானவர்களை குற்றவாளியாக்குகின்றனர் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, காவல்துறையினர்.

நீர்வளம் பாதிக்காத வகையில் ஆறுகளில் மணல் இருக்கும் இடங்களை ஆராய்ந்து பொதுப் பணித்துறையின் நீர்வள ஆதாரத்துறை தெரிவிக்கும். பின் சுரங்கம்மற்றும் கனிமவளத் துறையினர் மணல் எடுக்க குவாரி அமைத்து கட்டணம் பெற்று அனுமதிப்பர்.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 3 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் கிராமப்புறங்களில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு வீடுகட்டிக் கொள்வதற்கான உத்தரவுகளை பயனாளிகளின் முகவரிக்கே பதிவஞ்சலில் அனுப்பி வைத்தார். மாவட்டத் திற்கு 2017-18 ஆம் ஆண்டிற்கு ஒதுக்கப்பட்ட 19,069 வீடுகளில் முதற்கட்டமாக 5158 பயனாளிகளுக்கு இப்படி உத்தரவு அனுப்பப்பட்டது. பயனாளிகள் விரைந்து வீடுகளை கட்டிட வேண்டுமெனவும் ஆட்சியர் இந்நிகழ்ச்சியில் கேட்டுக்கொண்டார்.

குருவிக் கூண்டு வீடு!

ஆட்சியரின் உத்தரவை உதாசீனப்படுத்தும் வகையில் உளுந்தூர் பேட்டை வட்டத்தில் இப்படி அரை செண்ட் அளவில் (கழிப்பறை சேர்த்து 269 சதுரஅடி) சிறு வீடு உள்ளிட்ட கட்டுமான பணிகளுக்கு மாட்டுவண்டிகளில் மணல் எடுக்க அனுமதிக்க மறுத்து கவுரவமாக உழைத்துபிழைக்க விடாமல் குடியானவர் களை குற்றவாளியாக்கி கைது செய்து சிறையிலடைக்கின்றனர் வருவாய் மற்றும் காவல்துறையினர். பலவகைகளில் இதில் காசுபார்க்கும் பணியும் நடக்கிறதாம்.

உளுந்தூர்பேட்டை பகுதியில் திருநாவலூர், உளுந்தூர் பேட்டை, உள்ளிட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட களத்தூர், வைப்பாளையம், சேந்தமங்கலம், நைனார்குப்பம், கூ.கள்ளக்குறிச்சி, சேந்தநாடு, ஆரியநத்தம், உடையானந்தல், களமருதூர், களவனூர், பிள்ளையார்குப்பம், செல்லூர், நெமிலி, அயன்வேலூர்… என ஏராளமான கிராமங்களில் மணல் எடுக்கும் பணியில் மாட்டுவண்டி வைத்தி

ருப்போர் ஈடுபடுகின்றனர். இவர்களின் முக்கிய கோரிக்கைஎன்னவென்றால் கெடிலம் ஆற்றின் ஓரப் பகுதிகளான உடையானந்தல், வைப்பாளையம், கிழக்குமருதூர் ஆகிய இடங்களில் மாட்டுவண்டிகளில் மணல்அள்ள உரிமம் வழங்க வேண்டும்என்பதுதான். அவர்களின் கோரிக் கைகளை காதில் வாங்கவில்லை பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதார அமைப்பு.

ஆனால் அருகில் உள்ள கடலூர் மாவட்டஆற்றுப்பகுதியான காமாட்சிப் பேட்டையில் இதே கெடிலம்ஆற்றில் குவாரி அமைத்து கட்டணம் பெற்று டோக்கன் வழங்கி மணல் அள்ள மாட்டுவண்டிகள் அனுமதிக்கப்படுகிறது. கிழக்குமருதூரிலிருந்து காமாட்சிப் பேட்டை 5 கி.மீ தான். “இங்கு சென்று மணல் எடுத்த விழுப்புரம் மாவட்டப்பகுதி மாட்டுவண்டிகளுக்கு சில நாட்களிலேயே மணல் எடுக்க அனுமதிதரப்படவில்லை. இதில் உளுந்தூர் பேட்டை வருவாய்த்துறையினர், களமருதூர் பகுதி வருவாய் ஆய்வாளர், திருநாவலூர் காவல்நிலைய அதிகாரிகள் உள்ளிட்டோரின் கூட்டுசதி இருப்பதாக நாங்கள் சந்தேகிக்கிறோம். சட்டப்பூர்வமாக மணல் எடுக்க அனுமதிக்காமல் மாட்டுவண்டிகளை பிடித்து ஆயிரக் கணக்கில் முறைகேடாக பணம் பெறுகின்றனர். கணக்கு காட்டுவதற்கு அவ்வப்போது மாட்டு வண்டிகளை பிடித்துவழக்கு போட்டு வண்டிகளை காவல் நிலையத்தில் மாதக்கணக்கில் வைத்து வீணாக்குகின்றனர். பல ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. உழைத்துப் பிழைக்கும் மக் களை திருடர்களைப்போல கைது

செய்து 15 நாட்கள்வரை சிறையிலும் அடைக்கின்றனர்” என ஆவேசப்பட்டார் சிஐடியு கட்டுமான சங்க விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.சேகர்.அய்யனார் என்பவர் 9 நாள்சிறை, செல்வராசு என்பவர் பலமுறை கைது, சிறை என பலர் அநியாய தண்டனைக்குள்ளாகியுள்ளனர். முறைகேடாக பணம் வசூலிக்கும் அதிகாரிகளால் இதன்சுமை சிறுவீடுகட்டும் பயனாளிகள் தலையில் விடிகிறது. மானியத்தொகை பெரும்பகுதி மணலுக்கே செலவாகிறதாக குற்றம் சாட்டுகின்றனர். இதில் மாவட்ட ஆட்சியர் விரைந்து வீடுகட்டச் சொல்வது எப்படி நடக்குமென கேள்வியெழுப்புகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்திலேயே முன்பு திருவெண்ணெய் நல்லூர்பகுதி, விழுப்புரம் அருகே சித்தாத்தூரில் தற்போதும் கட்டணம் பெற்றுமாட்டு வண்டிகளில் மணல் எடுக்ககுவாரி இயங்குகிறது. உளுந்தூர் பேட்டை, திருநாவலூர், களமருதூர் பகுதிகளிலும் இப்படி சட்டபூர்வமாக குவாரி அமைத்து மணல்அள்ள அனுமதி வழங்க வேண்டுமென கோரி வரும் 3 ஆம் தேதிகட்டுமான தொழிலாளர் சங்கம் சிஐடியுவின் மாநிலச் செயலாளர் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம்நடைபெற உள்ளதாக தெரிவித்தார் சேகர்.

அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கே செலவு செய்ய வேண்டிய நிலையில் மணலுக்கே மீதி பெரும்பகுதி பணம் செலவாவதாக பயனாளிகள் புலம்புகின்றனர். விவசாயம் கட்டுப்படியாகாத நிலையில் சிறு வருமானத்திற்கு நேர்மையாக உழைத்துப் பிழைக்க அனுமதிக்க மறுக்கும் காவல்துறையும், அரசு அதிகாரிகளும் யாருக்காக பணிபுரிகின்றனர் என சந்தேகம் எழுப்புகின்றவர்களுக்கு ‘விரைந்து வீடுகட்டுங்கள்’ எனக்கூறும் ஆட்சியராவது மணல் அள்ள சட்டப்பூர்வமாக அனுமதி அளிப்பாரா…?

  • வி. சாமிநாதன்

Leave A Reply

%d bloggers like this: