நாடு முழுவதும் பெட்ரோலிய பொருள்களை வேகமாகவும், சிக்கனமாகவும் குழாய் மூலம் கொண்டு செல்லவும் எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்து அதற்கான நடவடிக்கையில் இறங்கி உள்ளன. அதன்படி, இத்திட்டத்தைச் செயல்படுத்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய இரு நிறுவனங்களும் திட்டமிட்டுள்ளன. இத்திட்டத்துக்கு பெட்ரோலியம் மற்றும் இயற்கைஎரிவாயு ஒழுங்கு முறை ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம், சென்னையை அடுத்த எண்ணூரில் இருந்து கர்நாடக மாநிலம், பெங்களூருவுக்கு திருவள்ளூர், வேலூர் மற்றும் ஆந்திர மாநிலம் சித்தூர் வழியாக ராட்சத குழாய் மூலம் இயற்கை எரிவாயுவை எடுத்துச் செல்ல திட்டமிட்டுள்ளது. அதன்படி, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அடையாளக் கற்கள் நடப்பட்டன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளேரி, லாலாப்பேட்டை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.nஇத்திட்டத்துக்கு நாடு முழுவதும் விவசாயிகளின் பட்டா நிலங்களின் வழியாக நிலத்தை பயன்படுத்தும் உரிமையை மட்டும் பெட்ரோலியம் மற்றும் மினரல் குழாய் பதிக்கும் சட்டத்தின்படி நிலம் கையகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளன. இது விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், வாலாஜாபேட்டை, காட்பாடி வட்டங்களுக்கு உள்பட்ட பள்ளேரி, வசூர், கோடியூர், மிளகாய்குப்பம், லாலாப்பேட்டை, தகரகுப்பம், ரெண்டாடி உள்ளிட்ட கிராம விவசாயிகளின் விளை நிலங்கள் வழியாக இயற்கை எரிவாயுக் குழாய்பதிக்கப்பட உள்ளதாகவும், அதற்கான பாதையை அளப்பதாகவும் கூறி வட மாநிலத்தைச் சேர்ந்த அதிகாரிகள் சிலர் கடந்த ஆண்டு செயற்கைக்கோள் மூலம் குழாய் பதிக்கும் பாதையை அளவீடு செய்து, விளைநிலங்களில் அளவீடு கற்கள் நடப்பட்டுள்ளன.

மேலும், பொன்னை அருகே ஆந்திர மாநிலம் தூங்குன்றம் பகுதியில் பொன்னை ஆற்றை ஓட்டி புதிய எரிவாயு முனையம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.ராணிப்பேட்டை அருகே உள்ள லாலாப்பேட்டை உள்ளிட்ட 22 கிராமங்களில் விவசாய நிலங்கள் வழியாக இயற்கை எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்துக்கான கருத்து கேட்பு கூட்டத்தைப் புறக்கணித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபடப் போவதாகத் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் எண்ணூர்-தூத்துக்குடி, எண்ணூர்-பெங்களூரு, புதுச்சேரி-நாகை, மதுரை-தூத்துக்குடி இடையே இயற்கை எரிவாயுக் குழாய் பதிக்கும்திட்டத்துக்கான நிலம் கையகப்படுத்த இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து, அண்மையில் அரசாணை வெளியிட்டுள்ளது.

இதற்காக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ரூ. 4, 447 கோடி செலவில் 1,251 கி.மீ. தொலைவுக்கு குழாய் பதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.முதல்கட்டமாக திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 1,004 ஏக்கர் நிலம் கையகப்படுத்த மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், இயற்கை எரிவாயு குழாய் பதிக்கும் திட்டம் தொடர்பாக ஏற்கெனவே மக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டு எதிர்ப்புகள் இல்லாதநிலையில், திட்டத்தை அரசு செயல்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வருங்காலத்தில் இத்திட்டத்தில் பிரச்சனை ஏற்பட்டால் மொத்த இழப்பீட்டுத் தொகையை இந்தியன் ஆயில் நிறுவனம் ஏற்க வேண்டும் என்றும்,மத்திய அரசு எந்த வகையிலும் பொறுப்பேற்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாணை குறித்து தகவலறிந்தவிவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

  • கே.ஹென்றி

Leave a Reply

You must be logged in to post a comment.