தீக்கதிர்

இலங்கைச் சிறையிலுள்ள மீனவர்கள் – படகுகளை மீட்டுத்தர கோரிக்கை: இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்…!

இராமேஸ்வரம்:
இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மீட்டுத்தர மத்திய அரசை வலியுறுத்தி, இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை துவங்கியுள்ளனர்.

எல்லைதாண்டி மீன் பிடித்ததாக கூறி, தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்ந்து நடந்து வருகிறது. படகுகளும் பிடித்துவைத்துக் கொள்ளப்படுகின்றன. இப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று மீனவ மக்கள் கோரிக்கை வைத்தும், மத்தியில் ஆளும் பாஜக அரசு அதனைக் கண்டுகொள்வதில்லை.

மறுபுறத்தில், பாதுகாப்பற்ற சூழ்நிலையில் உயிரைப் பணயம் வைத்து மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களிடம் இலங்கை கடற்படை அத்துமீறுவது வாழ்வாதாரத்தை தொடர்ந்து பாதித்து வருகிறது. அண்மையில், கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியதோடு, அவர்களின் படகுகள் மற்றும் பிற மீன்பிடிச் சாதனங்களையும் பறிமுதல் செய்தது.

இந்நிலையில்தான், இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும்; குறிப்பாக, கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டிரும் 27 மீனவர்களையும், தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்களிடமிருந்து கைப்பற்றிய 184 விசைப் படகுகளையும் மீட்டுத்தர வேண்டும்; குந்துகாலில் மீன்பிடி இறங்குதளம் அமைக்கும் வேலையைத் துரிதப்படுத்த வேண்டும்.

இந்திய – இலங்கை மீனவர்களின் பேச்சுவார்த்தைக்கு மத்திய – மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இராமேஸ்வரம் பகுதி விசைப்படகு மீனவர்கள் சனிக்கிழமையன்று காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் துவங்கினர்.இராமேஸ்வரம் மீனவர்களின் போராட்டத்தையொட்டி 800-க்கும் மேற்பட்ட படகுகள் கடலுக்குச் செல்லவில்லை. சுமார் ரூ. 1 கோடிக்கு மேலான மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.