===கே.பி.பெருமாள்===
வேதாந்தா ரிசோர்சஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலை, முதன் முதலில் 1994ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் இரத்தினகிரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டது. காற்று, நிலம், நீர் மாசுபடும் என்று அங்குள்ள விவசாயிகள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியுள்ளனர். ஒரு கட்டத்தில் ஆலையை உடைத்து நொறுக்கியுள்ளனர். அப்போது அந்த மாநிலத்தின் முதல்வரான சரத்பவார், ஆலைக்கான அனுமதியை ரத்து செய்துள்ளார். பின்னர், வேதாந்தா நிறுவனம் குஜராத் கோவா மாநிலங்களில் தொழிற்சாலை அமைக்க முயற்சித்து அது நடைபெறவில்லை. இதன் பின்னர், தமிழ்நாட்டில் தூத்துக்குடிக்கு அருகில் சிப்காட் வளாகத்தில் அ.குமரெட்டியாபுரம், தெற்கு வீரபாண்டியாபுரம் கிராமங்களுக்கு அருகில் 1994 ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலை அமைத்திட அடிக்கல் நாட்டினர். அப்போது தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சி நடைபெற்று வந்தது.

இந்த ஆலையில் செம்புக் கம்பி மற்றும் கந்தக அமிலம், பாஸ்பாரிக் அமிலம் ஆகியன உற்பத்தி செய்ய 1995 ஆம் ஆண்டு அனுமதி பெற்று செயல்படத் துவங்கியது. அப்போது ஆலையைப் பற்றிய விழிப்புணர்வு பொதுமக்களிடம் ஏற்படவில்லை. இரண்டு ஆண்டுகள் கடந்த பின்பு ஆலையிலிருந்து வரும் நச்சுப் புகை மற்றும் கழிவுகள், நிலத்தடி நீர் மற்றும் காற்று மண்டலம் ஆகியவற்றை மாசுபடுத்தி பெரும் கேடுகளை விளைவிக்கும் என்பதை மக்களால் அறிய முடிந்தது. இந்தப் பின்னணியில்தான், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சார்பில் 1996 ஆம் ஆண்டு மார்ச் 5 முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. மார்ச் 12 கருப்புக்கொடி போராட்டம், ஏப்ரல் 1இல் ஸ்டெர்லைட் எதிர்ப்பு பேரணி நடைபெற்றது. அதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். 1997 பிப்ரவரி 24இல் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. அப்போது ஆயிரக்கணக்கான மக்களை காவல்துறையினர் கைது செய்தனர். ஆகஸ்ட் 30இல் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

ஆய்வும் ஆலை மூடலும்
1996 நவம்பரில் ஸ்டெர்லைட் ஆலையை மூடும்படி முதன்முதலாக எதிர்ப்பு இயக்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. 1998 ஆம் ஆண்டு நவம்பர் 23இல் ஸ்டெர்லைட் ஆலையை மூடும்படி சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவில், ‘நீரி’ என்கிற சுற்றுச்சூழலுக்கான பொறியியல் ஆராய்ச்சி மையம் (National Environmental Engineering Research Institute) ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்து அறிக்கல் தாக்கல் செய்யவேண்டுமென உத்தரவிட்டது. தூத்துக்குடி சுற்றுவட்டாரப் பகுதி மற்றும் ஆலை வளாகத்திற்குள் சுமார் இரண்டு மாத காலம் ஆய்வை மேற்கொண்டனர். ஆலை வளாகத்திற்குள் அபாயகரமான நச்சுக் கழிவுகள் எந்த பாதுகாப்பு வசதியும் செய்யப்படாமல் கொட்டப்பட்ட இடத்தை குழுவினர் பார்த்தனர். நிலத்தடிநீர் பாதிப்பு, காற்றில் சல்ப்யூரிக் அமிலத்தின் நச்சுத்தன்மை பரவி இருந்ததை கண்டறிந்தனர்.

இதைத்தொடர்ந்து, நீரி குழு நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையின் இரண்டு முக்கிய அம்சங்கள்:

1. ஆலை வளாகத்திலும் அதனைச் சுற்றிலும் உள்ள இடங்களில் நிலத்தடிநீர் பெருமளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளது.

2. சுற்றுப்புற கிராமங்களில் நிலத்தடி நீரை ஆய்வு செய்த போது அதில் குரோமியம், தாமிரம், ஈயம், காட்மியம், குளோரைடு, புளோரைடு, ஆர்சனிக் தாதுப்பொருட்கள் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிகமாக இருக்கிறது. இதனை உட்கொண்டால் அபாயகரமான விளைவுகள் ஏற்படும் ஆபத்து இருக்கிறது. இவ்வாறு ‘நீரி’ அறிக்கை தெரிவித்தது.
இந்த அறிக்கையை ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டது.

82 முறை விஷவாயு கசிவு

1999 பிப்ரவரி 23இல் ஆலை மீண்டும் திறக்கப்பட்டது.

2010ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28இல் சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி எலிபி தர்மாராவ் அமர்வு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடச்சொல்லி தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஆலை நிர்வாகம் இடைக்காலத் தடை பெற்றது.

2013 ஆம் ஆண்டு மார்ச் 23 இல் ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து நச்சுப்புகை அதிகமாக வெளியானதால் தூத்துக்குடி பகுதி மக்கள் மற்றும் ஆலையைச் சுற்றியுள்ள கிராமங்களான அ.குமரெட்டியாபுரம், தெற்கு வீரபாண்டியாபுரம், மாப்பிள்ளையூரணி, சங்கரப்பேரி, மடத்தூர் பகுதி மக்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சுவாசிக்க சிரமப்பட்டனர். தொண்டைவலி, கண்எரிச்சல், முதலான பாதிப்புக்களுக்கு உள்ளானார்கள். பல இடங்களில் மரங்களின் இலைகள், செடிகள், பூக்கள் நிறம் மாறி கருகிப்போகின.

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அப்போதைய மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டுமென்று அறிக்கை வெளியிட்டார். இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) சார்பில் அப்போதைய தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் க.கனகராஜ், உச்சநீதிமன்றத்தில் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டுமென்று வழக்கு தொடர்ந்தார். மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதன் விளைவாக விஷவாயு கசிவுக்குப் பின் ஸ்டெர்லைட் ஆலையை மூட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது. ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து இக்காலத்தில் 82 முறை விஷவாயு கசிவு ஏற்பட்டுள்ளது என்று தமிழக அரசும் அப்போது குற்றம் சாட்டியது. ஆனாலும், 2013 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பால் ஆலை மீண்டும் செயல்படத் துவங்கியது.

நிலங்கள் கைப்பற்றல்
அ.குமரெட்டியாபுரத்தில் சுமார் 250 குடும்பங்களில் 1000 பேர் வசித்து வருகின்றனர். இவர்களின் விளை நிலங்களை குறைந்த விலைக்கு சிப்காட் நிறுவனம் 25 ஆண்டுகளுக்கு முன்பே கையகப்படுத்தியுள்ளது. தற்போது ஊரில் மூன்று பேரிடம் மட்டுமே நிலம் உள்ளது. இந்த ஊரின் எல்லையிலிருந்து ஸ்டெர்லைட் ஆலையின் சுற்றுச்சுவர் சுமார் 250 மீட்டர் தூரத்தில்தான் உள்ளது. தற்போது இந்த சுற்றுச்சுவருக்கு உள்ளே ஆலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்கு மத்திய, மாநில அரசுகள் அனுமதி கொடுத்துள்ளன. வேதாந்தா லிமிடெட் காப்பர் ஸ்மல்டர் பிளாண்ட் -2 ஆலையின் விரிவாக்கத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் அனுமதிக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் இசைவாணையும் பெற்றள்ளது.
விரிவாக்கம் செய்வதற்கான கருத்துக் கேட்புக் கூட்டம் முறையாக நடைபெறவில்லை. தனியார் திருமண மண்டபத்தில் கருத்துக் கேட்கும் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் எழுந்த பெரும் எதிர்ப்புக் குரலின் விளைவாக பாதியிலேயே கூட்டத்தை முடித்துக் கொண்டார்கள்.

இரண்டாம் கட்ட போராட்டம்
இத்தகைய பின்னணியில்தான், அ.குமரெட்டியாபுரம் மக்கள் இந்த விரிவாக்கப் பணிகளுக்கு எதிராகவும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்றும் 2018 பிப்ரவரி 5 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனுக் கொடுத்தனர். பிப்ரவரி 12 ஆம் தேதி முதல் அ.குமரெட்டியாபுரம் கிராம மக்கள் இன்றோடு 46 நாட்களாக (28.03.2018) தொடர்ந்து காத்திருக்கும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த மார்ச் 24 இல் தூத்துக்குடியில் போராட்டக்குழு சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதற்கு காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது. உயர்நீதி மன்றத்தில் அனுமதி பெற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. சுமார் 30 ஆயிரம் பேர் – ஆண்களும், பெண்களும் பங்கேற்றுள்ளனர்.

மார்ச் 26 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன் மற்றும் கே.பி.பெருமாள், ரசல், ஆறுமுகம், ராகவன், பேச்சிமுத்து, ராஜா உள்ளிட்டோர் மக்களை நேரடியாக சந்தித்து பேசி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். மார்ச் 28 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் உள்ளிட்ட தலைவர்கள் அடங்கியகுழு மக்களை சந்தித்து போராட்டத்தை ஆதரித்து பேசினோம்.

அரசு நிர்வாகம் யார் பக்கம்?
அப்போது அந்த மக்கள் கொட்டிய குமுறல்களில் அந்த நிர்வாகம் யார் பக்கம் நிற்கிறது என்பது பளிச்சென தெரிந்தது. ‘‘எங்கள் கிராமத்தில் உள்ள மக்களுக்கு ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வரும் நச்சுப்புகையினால் கேன்சர், குழந்தைகளுக்கு பிரைமெரி காம்ளக்ஸ், கிட்னி செயல் இழப்பு, இரத்தச் சோகை, கண்பார்வை குறைபாடு, கால்களில் கொப்பளங்கள் ஏற்பட்டு நடக்க முடியாமல் போவது உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகின்றன. குறைந்த வயதில் திடீர் இறப்புக்கள் ஏற்படுகின்றன. எங்கள் ஊரில் தண்ணீர் கசப்பாகவும், பழுப்பு நிறத்திலும் உள்ளன. ஆடு, மாடுகள் இந்தத் தண்ணீரை குடிப்பதால் கருச்சிதைவு ஏற்பட்டு குறைப் பிரசவம் நடந்துள்ளது. எங்கள் பகுதியிலுள்ள தண்ணீரை ஆய்வு செய்ய கொடுத்தால் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள மறுக்கின்றனர்.

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வைத்தியம் செய்ய சென்றால் அ.குமரெட்டியாபுரம் என்று சொன்னால் முறையாக சிகிச்சை செய்வது கிடையாது. நாங்கள் போராட்டம் நடத்த பந்தல் போடுவதற்குக்கூட சிப்காட் காவல்துறை அனுமதி மறுக்கிறது’’ என்று அதிர்ச்சியான தகவல்களைத் தெரிவித்தனர். உங்களுடன் இணைந்து போராடுவோம்; உங்களுக்காக குரல் கொடுப்போம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உறுதியளித்தோம்.

ஏப்ரல் 4 அன்று ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டுமென்று முற்றுகை போராட்டம் நடத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.ஸ்டெர்லைட் எனும் பயங்கரம் தூத்துக்குடி பகுதியிலுள்ள மக்களுக்கு பல்வேறு நோய்களையும், விளைநிலங்களை அழிக்கக்கூடிய வகையிலும் காற்றுமண்டலம், நிலத்தடிநீர், தேங்கி நிற்கும் நீர் ஆகியவற்றை நாசமாக்கும் வேலையை வேகமாக செய்து வருகிறது. இதனை தடுக்க வேண்டுமென்றால் மத்திய, மாநில அரசுகள் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிடும் வகையில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையெனில், மகாராஷ்டிரா மாநிலம் ரத்தினபுரி மாவட்டத்தில் நடந்தது போல மக்கள் எழுச்சி தீவிரமடைவதைத் தடுக்க முடியாது.

கட்டுரையாளர் : மாநில பொருளாளர் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்.

Leave a Reply

You must be logged in to post a comment.