ஆம்பூர் அருகே பெரியவரிக்கம் ஊராட்சி பகுதியில் குடியாத்தம் – வாணியம்பாடி சாலையில் இயங்கி வந்த தனியார் தோல் தொழிற்சாலையில் தோல் கழிவு நீர் சேகரிப்பு தொட்டியை சுத்தம் செய்த போது விஷ வாயு தாக்கியத்தில் ஆம்பூரைச் சேர்ந்த ரங்கநாதன் (46), பந்தேரபள்ளியைச் சேர்ந்த கோதண்டன் (31), கீழ்மிட்டாளத்தைச் சேர்ந்த செல்வம் (25) ஆகிய 3 பேரும் இறந்தனர்.

இறந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி உறவினர்கள் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் ஈமச்சடங்குகளுக்கு தலா ரூ. 50 ஆயிரமும், இழப்பீடாக தலா ரூ. 7.50 லட்சம் வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்டது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து, ஆட்சியர் உத்தரவின் பேரில், முதல் கட்டமாக அத் தொழிற்சாலைக்கான மின் இணைப்பு மின்வாரிய பணியாளர்களால் துண்டிக்கப்பட்டது.

மேலும், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய இணை முதன்மை சுற்றுச் சூழல் பொறியாளர் ராஜகோபால் மற்றும் ஆம்பூர் வட்டாட்சியர் சாமுண் டீஸ்வரி ஆகியோர் முன்னிலையில் தோல் தொழிற்சாலைக்கு பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது.அப்போது, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் பாரதிராஜா, துத்திப் பட்டு வருவாய் ஆய்வாளர் வேல்முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

தோல் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் இறந்த சம்பவத்தைத் தொடர்ந்து தோல் தொழிற்சாலை நிர்வாகத்தின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் இவ்வாறு தொடர்ந்து தோல் தொழிற் சாலை தொழிலாளர்கள் இறக்கும் சம்பவங்கள் சம்பந்தமாக தொழிலாளர்களுக்கான என்னென்ன பாதுகாப்பு அம்சங்கள் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது? என்று இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர் ராஜகோபாலிடம் கேட்டதற்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

Leave a Reply

You must be logged in to post a comment.