விருகம்பாக்கத்தில் உள்ள ஐ.ஓ.பி. வங்கியில் லாக்கர்களை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் போலீசார் துப்பு துலக்கி வருகிறார்கள். இதுகுறித்து கே.கே.நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

நேபாளத்தை சேர்ந்த சபீலால் தனது கூட்டாளிகளை ஒன்று திரட்டி, இந்த துணிகர கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது. வங்கி செயல்படும் 3 மாடி கட்டிடத்தில் 5 ஆண்டாக காவலாளியாக பணிபுரிந்து வந்த சபீலாலுடன் 9 பேர் சேர்ந்து கொள்ளையடித்துள்ளனர்.பெங்களூரில் இருந்து சபீலாலின் கூட்டாளிகள் சிலர் காரில் சென்னை வந்து வங்கி கொள்ளைக்கு உதவிகரமாக இருந்துள்ளனர்.

அமைந்தகரையில் இருந்து கியாஸ் சிலிண்டர்களை பெங்களூர் பதிவு எண் கொண்ட காரில் கொள்ளையர்கள் ஏற்றிச் சென்றிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதன் அடிப்படையிலேயே போலீசார் தங்களது விசாரணையை முடுக்கிவிட்டனர்.இதனைத் தொடர்ந்து கொள்ளையில் துப்பு துலங்கியது.

பெங்களூரைச் சேர்ந்த ரமேஷ் என்ற ஓட்டுநர் புதனன்று கைதுசெய்யப்பட்டார். இந்நிலையில் மற்றொரு ஓட்டுநரான பகதூர் (35) மற்றும் கார் உரிமையாளரான பிரதாப் ஆகியோர் வியாழனன்று மாலையில் கைது செய்யப் பட்டனர். இவர்கள் அனைவரும் வெள்ளிக்கிழமை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.இதற்கிடையே கொள்ளையன் சபீலால் கூட்டாளிகள் 8 பேருடன் நேபாளத்துக்கு தப்பிச் சென்றது உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைவரும் அங்கு சுற்றி வளைக்கப் பட்டுள்ளனர்.

இவர்கள் மீது நேபாளத்திலும், டெல்லியிலும் கொள்ளை வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. சபீலாலையும் அவனது கூட்டாளிகளையும் கைது செய்து சென்னைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சபீலாலும் அவனது கூட்டாளிகளும் நேபாளத்தை விட்டு தப்பிச் சென்று விடாதபடி நடவடிக்கை எடுத்துள்ள சென்னை போலீசார் அவர்களை தங்கள் கஸ்டடிக்குள் இன்னும் கொண்டு வரவில்லை. இதனால் இப்போதைக்கு அவனை கைது நடவடிக்கை என்று கூறமுடியாது. இன்டர்போல் உதவியுடன் சபீலாலையும் அவருடன் சிக்கி இருப்பவர்களையும் கைது செய்து சென்னைக்கு அழைத்து வர சில வாரங்கள் ஆகும் என்று காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: