பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளின் மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் இரு பெண் நீதிபதிகள் கொண்ட தனி அமர்வு அமைக் கப்பட்டுள்ளது. இவ்வாறு பெண் நீதிபதிகளை கொண்ட தனி அமர்வு அமைக்கப்படுவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.

பெண்களுக்கு எதிரான குற்றங் கள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து கொண்டே வருகின்றன. 2017ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்திய குற்ற ஆவணக் காப்பக அறிக்கையின்படி 2014 மற்றும் 2015ஆம் ஆண்டுகளை ஒப்பிடும் போது 2016ஆம் ஆண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன.

2015ஆம் ஆண்டு 3 லட்சத்து 29 ஆயிரமாக இருந்த குற்றங்களின் எண் ணிக்கை 2016ஆம் ஆண்டு 3 லட்சத்து 38 ஆயிரமாக அதிகரித்துள்ளன. மேலும் 2016ஆம் ஆண்டின் ஒவ் வொரு மணி நேரத்திலும் நான்கு பாலியல் வன்புணர்வு வழக்குகள் இந்தியாவில் உள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிக்கை கூறுகிறது. இப்படி குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே வருவதால் இந்த வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுப்பப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளின் மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்க தனி அமர்வை அமைத்து தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.

இந்த அமர்வில் நீதிபதிகள் எஸ்.விமலா, எஸ்.ராமதிலகம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். சென்னை உயர்நீதிமன்ற வரலாற்றில் இது போன்று இரு பெண் நீதிபதிகளை கொண்டு தனி அமர்வு அமைப்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. இது வரவேற்கத்தக்க முயற்சி என்றாலும் கீழமை நீதிமன்றங்களில் நிலைமை வேறு மாதிரியாக உள்ளது. 2016ஆம் ஆண்டில் கீழமை நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள பெண்களுக்கு ஏதிரான குற்ற வழக்குகளில் 18.6 விழுக்காடு வழக்குகள் மட்டுமே விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக இந்தியகுற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது.

2008ஆம் ஆண்டு முதல் இந்த எண்ணிக்கை குறைந்து கொண்டேயும் இருக்கிறது. (2009-27.8, 2011-26.9, 2012- 21.3, 2013- 22.4, 2014- 21.3, 2015-21.7) இதை பார்க்கும் போது கீழமை நீதிமன்றங்களில் இவ்வளவு வழக்குகள் தேங்கி இருக்கும் போது மேல்முறையீட்டை விசாரிக்க தனி அமர்வு அமைத்து என்ன பயன் என்ற கேள்வியும் எழுகிறது. ஆனால், மிகத் தீவிரமான வழக்குகளில் மட்டுமே மேல்முறையீடு செய்யப்படுவதால் இதுபோன்ற அமர்வு அவசியம்தான் என்றும் ஒரு கருத்து கூறப்படுகிறது. எது எப்படி இருந்தாலும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைக்க எடுக்கப்படும் ஒவ்வொரு முயற்சியும் வரவேற்கப்பட வேண்டியது. ஆனால், கீழமை நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை குறைக்க உரிய முயற்சி எடுத்தால்தான் இதன் பலனை முழுமையாக அனுபவிக்க முடியும்.

  • கண்ணன் ஜீவா

Leave a Reply

You must be logged in to post a comment.