சென்னை தண்டையார்பேட்டை ஐஒசி, பிபிசிஎல், மணலி, சிபிசிஎல் ஆகிய நிறுவனங்களில் இருந்து பெட்ரோல், ஆயில் ஆகியவை தேவைப்படும் இடங்களுக்கு டேங்கர் லாரிகள் மூலம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஒப்பந்த அடிப்படையில் டேங்கர் லாரிகள் இயக்கப்படுகின்றன. இதுபோன்ற டேங்கர் லாரிகளில் ஓட்டுநர்களை மிரட்டி ரவுடி கும்பல் ஒன்று ஆயில் திருடி விற்றுக் கொண்டிருந்தது. இந்த ஆயில் திருட்டில் ஆயில் ராஜா, ஆயில் மணி கை தேர்ந்தவர்கள். இருவரும் போட்டி போட்டுக் கொண்டு இந்த தொழிலை செய்து வந்தனர்.இதனால் தனக்கு எதிரியான ஆயில் ராஜாவை தீர்த்து கட்ட திட்டமிட்டனர். அதைத் தொடர்ந்து ஆயில் ராஜா சில மாதங்களுக்கு முன்பு வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அதன் பிறகு இந்த ஆயில் திருட்டு சம்பவம் அடங்கியிருந்தது. அதன் பிறகு கரிமேட்டை சேர்ந்த ஆயில் பாலாஜி தலையெடுத்தார்.

ஆயில் பாலாஜி, வியாசர்பாடி முத்தமிழ் நகரைச் சேர்ந்த இம்ரான் ஆகியோர் கூட்டாளிகளுடன் ஆயில் டேங்கர் உரிமையாளர்களை மிரட்டி பணம் பறிப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக லாரி உரிமையாளர் செங்குன்றத்தை சேர்ந்த வெங்கடசேன் என்பவர் புகார் அளித்தார். இதையடுத்து காவல் துறையினர் தனிப்படை அமைத்து ஆயில் பாலாஜியையும், அவனது கூட்டாளிகளையும் பிடிக்க இணை ஆணையர் பிரேமானந்த் சின்கா, வண்ணாரப்பேட்டை காவல் ஆய்வாளர் ஜவகர்பீட்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் நடத்திய தீவிர விசாரணையில் குற்றவாளிகள் ஊட்டியில் பதுங்கியிருப்பதாக தகவல் வந்தது.

இதையடுத்து தனிப்படையினர் ஊட்டிக்குச் சென்று அங்கு பதுங்கியிருந்த மணலி புது நகர் அப்சர் உசேன் மகன் கரிமுல்லா(35), மதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்த கல்யாணி மகன் ரகு(33), சிவகங்கையைச் சேர்ந்த முத்துராமன் மகன் கமல்ராஜன்(32), வியாசர்பாடி முத்தமிழ் நகரைச் சேர்ந்த இம்ரான்(35), தண்டையார்பேட்டை நேதாஜி நகரைச் சேர்ந்த சலீம் மகன் சையத் இப்ராகிம் (33), ஆயில் பாலாஜி (34), கொடுங்கையூர் எழில் நகரைச் சேர்ந்த விஜயகுமார் மகன் செந்தில்குமார் (31), சின்னசேக்காடு கக்கன்புரத்தைச் சேர்ந்த செந்தூர் பாண்டி மகன் அசோக் குமார் (37) ஆகிய 8 பேரை கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து ஒரு கைத்துப் பாக்கி, தோட்டக்கள், பட்டா கத்திகள், 29 செல்போன்கள், 5 லட்ச ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் கடத்தலுக்கு அவர்கள் பயன்படுத்திய 2 கார், மிளகாய் பொடி ஸ்பிரேயர், போலியான வழக்குறைஞர் அட்டை, வருவாய் துறை அடையாள அட்டை, பத்திரிகையாளர்களுக்கான அடையாள அட்டை ஆகியவற்றையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ரியாஜ்கான் என்பவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது:சென்னை துறைமுகம் பகுதியில் இருந்து கச்சா எண்ணெய் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. அந்த கச்சா எண்ணெயை சிபிசிஎல் நிறுவனம் பெட்ரோல் டீசலாக தரம் பிரித்து, வெளி மாநிலங்களுக்கு டேங்கர் லாரிகள் மூலம் அனுப்பப்படுகிறது. ஆயில் ஏற்றிச் செல்லும் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சிலர் மாதவரம், செங்குன்றம் பகுதியில் லாரியை நிறுத்தி ஆயில் திருடுகின்றனர். இதை அறிந்த ரவுடிகள் அவர்களிடம் பணம் பறிக்கும் வேளையில் ஈடுபடுகின்றனர். இந்த தொழில் போட்டி காரணமாகத்தான் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ஆயில் ராஜா என்பவர் வெட்டிக் கொல்லப்பட்டார். மேலும் இந்த ஆயில் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீதும், அதை வைத்து மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Leave A Reply

%d bloggers like this: