சமூக விரோதமாக செயல்படும் குழுக்கள் முன்பெல்லாம் வெளிப்படைத் தன்மையோடு அல்லது பகிரங்கமாகவோ செயல்படமாட்டார்கள். மக்களால் புறக்கணிக்கப்பட்டு எப்போதும் அவர்கள் தலைமறைவாக தனித்து இயங்குவார்கள். அதேசமயம் அவர்களோடு அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளில் சிலர், அமைச்சர்கள் மறைமுகமாக கூட்டு வைத்திருப்பார்கள்.

தற்போது எவ்வித அச்ச உணர்வும் இன்றி அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், அமைச்சர்கள் எல்லாம் சமூக விரோதிகளோடு வெளிப்படையாகவே நெருக்கமாக பழகுகின்றனர். அத்தகைய சக்திகளோடு புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு மகிழ்வதும் சர்வசாதாரணமாகிவிட்டது. சென்னைக்கு அருகே பூந்தமல்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட ரவுடிகள் ஒன்றுகூடி கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடுகிறார்கள். சேலம் மாவட்டம் கண்ணங்குறிச்சி காவல் நிலைய ஆய்வாளர் கருணாகரன் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பிரபல ரவுடியை தனது வீட்டிற்கே அழைத்து, அவருக்கு பிறந்தநாள் கேக்வெட்டி, அன்போடு ரவுடிக்கு கேக் ஊட்டிய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வலம் வந்தது.

திருச்சி மாநகரில் ஆய்வாளர் காமராஜ் என்பவர் இருச்சக்கர வாகனத்தில் சென்ற கர்ப்பிணிப் பெண்ணை எட்டி உதைத்து சாகடித்தார். சென்னை வேளச்சேரியில் வாகன ஓட்டிகளிடம் வசூல்வேட்டை நடத்திய காவலரை பொதுமக்களே கட்டிப்போட்ட நிகழ்வு சமூகவலைதளத்தில் வைரலாக பரவியது. திருவான்மியூர் அருகே மெக்கானிக் ஷெட்டில் நிறுத்தி வைக்கப்பட்ட காரை ரோந்துக் காவலர்களே திருடிச்சென்று, புதுப்பேட்டை காய்லாங்கடையில் விற்றதை பத்திரிகைகள் அம்பலப்படுத்தின. இது சில காவல்துறையினரின் களவாணித்தனங்களில் சில. நிற்க! அடிப்படை உரிமைகளை வரையறை செய்த இந்திய அரசியல் சாசனம், ‘‘அடிப்படை உரிமைகளை அனுபவிப்பதற்கு முரணாக சட்டமன்றம், நாடாளுமன்றம் கூட சட்டம் இயற்ற முடியாது. அடிப்படைகள் பாதிக்கப்படும்போது அல்லது மீறப்படும்போது அவற்றை காப்பதும், அந்த மீறலுக்கான முழுப் பொறுப்பையும் அரசுதான் ஏற்கவேண்டும்’’என்கிறது. அரசு நிர்வாகம், அதன் முகவர்கள், காவல்துறை, வனத்துறை, அரசு அதிகாரிகள், ஒப்பந்ததாரர் போன்றோர் அடிப்படை உரிமைகளை மீறுகிறபோது, அரசிடமும் நீதிமன்றத்திடமும் முறையிட்டு அவர்களை தண்டிக்கின்ற உரிமையையும் அரசியலமைப்புச்சட்டம் வழங்கியுள்ளது. ஆனாலும் அரசு, அதிகாரிகள், தனியார் நிறுவனங்கள், சமூகவிரோத சக்திகள் தினம் தினம் குறைந்தபட்ச அச்ச உணர்வு கூட இல்லாமல் மனித உரிமை மீறலில் ஈடுபடுகின்றனர்.

அதிர்ச்சியளிக்கும் தகவல்

தேசிய குற்றவியல் ஆவணத் துறை (NCRB) அறிக்கை சொல்லக்கூடிய விவரங்கள் அதிர்ச்சி அளிக்கக்கூடியவையாக உள்ளன. குறிப்பாக தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் 1223 குழந்தைகள் மற்றும் பெண்களை கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 319 குழந்தைகள் மற்றும் பெண்கள் பாலிலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டுள்ளனர். 17 குழந்தைகளை பலாத்காரம் செய்ய முயற்சிகள் நடைபெற்றுள்ளன. வரதட்சணைக் கொடுமையால் 58 பெண்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

2016ல் மட்டும் தலித் பெண்கள் மீது 3172 கொடுமைகள் நிகழ்ந்துள்ளன. பாலியல் வல்லுறவு 2541, தாக்குதல் 1725, காயம் ஏற்படுத்துதல் 1071, கடத்தல் 855, கொலை 786 என்ற புள்ளிவிவரத்தையும் அரசு நிறுவனமே சொல்லியுள்ளது. நாடு முழுவதும் 96,977 குற்றவியல் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அதில் தமிழகத்தில் மட்டும் 16,870 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் உள்ள நகரங்களில் குற்ற வழக்குகள் பதிவு செய்யபடும் பட்டியலில் சென்னை 17 வது இடத்தில் உள்ளது.

தமிழகத்தில் 2015ல் மட்டும் 100 க்கும் அதிகமான சாதிய படுகொலைகள் ஆதிக்கசாதியினரால் நிகழ்த்தப்பட்டுள்ளதாகவும் தேசிய குற்றவியல் ஆவண காப்பகம் கூறியுள்ளது. குறிப்பாக, காவல்நிலையச் சாவுகள் (லாக்கப் படுகொலை) தொடர்ச்சியாக நடக்கின்றன. காவல் நிலையங்களில் பெண்கள் பலாத் காரத்திற்கு ஆளாக்கப்படுவதும், பொய்யான குற்றச்சாட்டுகளை பதிவு செய்து துன்புறுத்துவது, தீண்டாமைக் கொடுமைகளை அரங்கேற்றுவது, ஏழைகள், தாழ்த்தப்பட்ட – சிறுபான்மை மக்கள் புகார் கொடுத்தால் வாங்க மறுப்பது, அப்பாவிகளை அலைக் கழிப்பது, பகிரங்கமாகவே பேரம் பேசுவது, குற்றவாளியிடம் பணம் வாங்கிக் கொண்டு வழக்குப் போடாமல் மிரட்டுவது என காவல் துறையே சமூக குற்றங்களை ஊக்குவிக்கிறது. காவல் நிலையத்தில் நடைபெறும் கொலைகளை காவல்துறையினர் தங்களது அதிகாரத்தின் மூலம் மறுத்தும், வழக்கை திசைதிருப்பியும் விடுகின்றனர்.

2012 – 2016 வரை தமிழகத்தில் மட்டும் 134 பேர் காவல் நிலையத்தில் காவல்துறையினரால் அடித்தே படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 2017 ல் 23 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சட்டத்தை பாதுகாக்க வேண்டிய காவல்துறையினரே, காவல்நிலையத்தில் வைத்து சித்ரவதை செய்து, அடித்துக்கொலை செய்கிறபோது, அத்துறைக்கு பொறுப்பான அமைச்சரும் அரசும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற கேள்வியை இந்த சமூகம் வலுவாக எழுப்ப வேண்டாமா? தமிழகத்தில் வழிப்பறி சம்பவங்கள் கொடூரமான முறையில் அதிகரித்து வருகின்றன.

சென்னையில் ஐடி துறையில் பணிபுரியக் கூடிய ஒரு பெண் பணி முடிந்து செல்லும் போது, பின்தொடர்ந்து சென்று அவரை தாக்கி வாகனம், பணம், நகை, செல்போன் என அனைத்தையும் பறித்துக் கொண்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் முள்புதரில் வீசி சென்றுள்ளனர். வண்ணாரப்பேட்டையை சார்ந்த பெண் தன் கணவனோடு சென்று கொண்டிருந்த போது, வழிப்பறி கொள்ளையர்கள் அந்த பெண்மணியின் கழுத்தில் இருந்த சங்கிலியை அறுக்க முயற்சித்தனர். இச்சம்பவத்தில் அந்த பெண்மணியின் கழுத்தே அறுக்கப்பட்டுள்ளது. இதுபோன்று தினசரி நூற்றுக்கணக்கான சம்பவங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன.சாதி கடந்து காதலித்தால், ‘‘சாதியின் புனிதத்தன்மையைப் பாதுகாக்கிறோம்’’ என்ற பெயரில் காவல்துறையின் உதவியோடு சாதி, மதவெறியர்கள் ஆணவக் கொலைகளை செய்கின்றனர்.

அண்மைக் காலமாக தமிழகத்தில் மட்டும் 82 ஆணவக் கொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் பெண்கள் 80 சதமும், ஆண்கள் 20 சதமும் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 15க்கும் மேற்பட்டவர்கள் தலித் இளைஞர்கள். இத்தகைய சம்பவங்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு, காவல் துறை, மனித உரிமை ஆணையம் என அனைத்தும் பாராமுகமாகவே உள்ளன.மலக்குழிக்குள் இறங்குவதற்கு எதிராக சட்டம் இயற்றினாலும் மலம் அள்ளும் வேலைக்கு அரசு மனிதர்களையே பயன் படுத்துகிறது.

இந்தியாவில் மலக்குழியில் இறங்கி மலம் அல்லும் பணியில் ஈடுபட்டு உயிரிழப்போரில் 45 விழுக்காட்டினர் தமிழகத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர். 2016 வரை நாடு முழுவதும் 323 பேர் இவ்வாறாக இறந்துள்ளனர். அதில் 144 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். கடந்த ஒரு வருடத்தில் 11 பேர் இறந்ததாக மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்தீப்சிங் பூரி தெரிவித்துள்ளார். சட்டம் அனைவருக்கும் பொதுவானது என்றால் உழைப்பாளிகள் மட்டும் காவுகொடுக்கப்படுவது ஏன்? குற்றம் செய்யும் ஆதிக்க சக்திகள், கட்டப்பஞ்சாயத்து மூலம் வெளியே இருக்கிறார்கள். அப்படியென்றால். மனித உரிமைப் பிரகடனம் எங்கே போனது? தமிழக அரசும் மாநில மனித உரிமை ஆணையமும் என்ன செய்துகொண்டு இருக்கிறது? சமூகத்தை ஒழுங்குபடுத்த வேண்டிய, அமைதியை பாதுகாக்கவேண்டிய அரசும், அமைச்சர்களும் உண்மைக்கு புறம்பாகவே பம்மாத்து பேசுவதால் பிரச்சனை தீருமா? வேலியே பயிரை மேய்வதைப்போல் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல்துறை உயர் அதிகாரிகளும், அமைச்சர்களுமே சட்டம்- ஒழுங்கை சந்திசிரிக்க வைக்கக்கூடிய செயல்தான் தமிழகத்தில் நடந்து வருகிறது.

Leave A Reply

%d bloggers like this: