திருவாரூர்:
ஆறு வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று இறுதி தீர்ப்பாக கூறி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் விதித்த கெடு முடிந்துவிட்டது. இது
குறித்து கொஞ்சம் கூட அச்சப்படாமல் உச்சநீதிமன்றத்தை மதிக்காமல் நடந்துகொண்டது மத்திய பாஜக அரசு. அத்தகைய துரோக அரசை வலுவாக கண்டிக்காமல் “பாம்பும் சாகாமல் தடியும் நோகாமல்” என்ற பழமொழிக்கு ஏற்ப தமிழக அரசு பாசாங்கு செய்கிறது என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார்.
திருவாரூரில் வெள்ளிக்கிழமையன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் மேலும்
கூறியதாவது:

நீண்ட நெடுங்காலமாக தமிழக-கர்நாடக அரசுக்கு இடையே நடைபெற்று வந்த காவிரி நதி நீர் பிரச்சனையில் அண்மையில் உச்சநீதிமன்றம் வழங்கிய இறுதித்தீர்ப்பை மதிக்காமல் உச்சநீதிமன்றத்தை துச்சமென அலட்சியப்படுத்திய நரேந்திர மோடி அரசு, தமிழக மக்களுக்கு பெரும் அநீதியை இழைத்துள்ளது. இது தமிழக மக்கள் மத்தியிலும் விவசாயிகள் மத்தியிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அனைத்துக் கட்சிகளை மீண்டும் கூட்டாதது ஏன்?
கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதியன்று தமிழக அரசு எதிர்க்கட்சிகளின் வேண்டுகோளை ஏற்று அனைத்து அரசியல்  கட்சியினர் மற்றும் விவசாயிகள் சங்கத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மூன்று தீர்மானங்களை நிறைவேற்றியது. கூட்டத்தின் நிறைவாக மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கையை பொறுத்து மீண்டும் அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்தி மேலும் என்ன முடிவெடுக்கலாம் என்பதை கூட்டாக முடிவெடுத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கலாம் என தமிழக அரசு அறிவித்தது.ஆனால் தற்போது மத்திய அரசு தமிழகத்தை கைவிட்டுவிட்ட நிலையில் தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தபடி அனைத்துக் கட்சிகளை கூட்டி ஆலோசிக்காமல், ஏப்ரல் 2 ஆம் தேதியன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆளும் கட்சியின் சார்பாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என்று தன்னிச்சையாக முடிவெடுத்து அறிவித்துள்ளது. அரசின் இந்த போக்கு நரேந்திர மோடியிடம் அதிமுக மென்மையாக நடந்து கொள்ள முயற்சிப்பதையே காட்டுகிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

தமிழக மக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து ஒரே குரலில் மத்திய அரசு ஸ்தம்பிக்கின்ற வகையில் வலுவான கண்டன இயக்கங்களை நடத்த அதிமுக அரசு விரும்பவில்லை. எனவே
ஏற்கனவே எடுத்த முடிவின்படி தமிழக அரசு அனைத்துக்கட்சிகளையும் விவசாய சங்க தலைவர்களையும் ஒருங்கிணைத்து மத்திய அரசுக்கு எதிராக வலுவான போராட்டங்களை நடத்திட முன்வர வேண்டுமென மீண்டும் வலியுறுத்துகிறோம். அப்படி ஒன்றுபட்ட நடவடிக்கைகளை எடுக்கும் போது அதை நாங்கள் ஆதரிப்போம். அதிமுக நடத்தும் தனிப்பட்ட போராட்டங்களில் நாங்கள் பங்கேற்கமாட்டோம்.

ஏப். 5 – ரயிலை நிறுத்துவோம்!
இந்த சூழ்நிலையில் எதிர்க்கட்சியான திமுக ஏப்ரல் 1 ஆம் தேதியன்று அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து அழைப்புவிடுத்துள்ளது. இந்த அழைப்பை ஏற்று நாங்களும் பங்கேற்கிறோம். முடிவுகளுக்கு ஏற்ப கூட்டு இயக்கங்களில் பங்கேற்போம். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் காவிரி நதி நீரில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டவும் உச்சநீதிமன்றத்தை அவமதித்த மத்திய நரேந்திர மோடி அரசை கண்டித்தும் ஏப்ரல் 5 ஆம் தேதி முதல் காவிரி டெல்டா மாவட்டங்களில் 50-க்கும் மேற்பட்ட ரயில்நிலையங்களில் தண்டவாளங்களில் அமர்ந்து தொடர் ரயில் நிறுத்தப் போராட்டத்தை
நடத்த இருக்கின்றோம்.பெண்கள், இளைஞர்கள் மாணவர்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்க உள்ளனர். திருவாரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், நாகப்பட்டினத்தில் பெ.சண்முகம், தஞ்சாவூரில் எஸ்.திருநாவுக்கரசு உள்ளிட்டோர் பங்கேற்க இருக்கின்றோம். போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முழு ஆதரவை தெரிவித்துள்ளது. இப்போராட்டத்தில் முழுமையாக பங்கேற்க வேண்டுமென அனைத்துப் பகுதி மக்களையும் கேட்டுக்கொள்கிறோம்.

 

உச்சநீதிமன்றத்திற்கு வேண்டுகோள்
பல்வேறு வழக்குகளின் தீர்ப்புகளில் முறையான நடவடிக்கை எடுக்காத போதெல்லாம் உச்சநீதிமன்றம் கடுமையான கண்டனங்களை தெரிவித்து எச்சரிக்கை செய்துள்ளது. தற்போது உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசே மதிக்காத நிலையில் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து மத்திய அரசு மீது உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். மேலும் நான்கு மாநிலங்கள் சம்பந்தப்பட்டுள்ள காவிரி நதிநீர் பிரச்சனையில் காவிரி மேலாண்மை வாரியத்தையும், ஒழுங்காற்றுக்குழுவையும் அமைத்து இறுதி தீர்ப்பின் அடிப்படையில் நதிநீர் பங்கீட்டிற்கு உச்சநீதிமன்றமே நடவடிக்கை எடுத்து மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். உச்சநீதிமன்றத்தை மதிக்காத மத்திய அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்சநீதி
மன்றமே தொடுத்து விசாரணை நடத்தவும் வேண்டும் என்று வலியுறுத்தினார்.
செய்தியாளர் சந்திப்பின் போது விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் அகில இந்திய தலைவர் எஸ்.திருநாவுக்கரசு, சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, விவசாயிகள் சங்க தலைவர்கள் வி.எஸ்.கலியபெருமாள், எஸ்.தம்புசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.