புதுதில்லி:
வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் வகையில், அண்மையில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மீது நடவடிக்கை எடுக்குமாறு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் நேரில் கோரிக்கை விடுத்தனர்.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த மார்ச் 20-ஆம் தேதி தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் யு.யு. லலித் மற்றும் கோயல் அடங்கிய அமர்வு, “சில நேரங்களில் நேர்மையாகப் பணியாற்றும் அரசு ஊழியர்களைப் பணி செய்ய விடாமல் தடுத்து, அவர்கள்மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்படுகிறது; இதனால், அப்பாவி ஊழியர்கள், குற்றவாளிகளாகச் சித்திரிக்கப்படுகிறார்கள்; ஆனால், அந்த நோக்கங்களுக்காக எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் கொண்டுவரப்படவில்லை; எனவே, அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களை இந்தச் சட்டத்தின்கீழ் உடனடியாகக் கைது செய்யப்படுவதற்குத் தடை விதிக்கப்படுகிறது” என்று உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது.
எஸ்.சி-எஸ்.டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டமொத்த வழக்குகளில் 15.4 சதவிகித வழக்குகளில்தான் குற்றவாளிகள் தண்டிக்கப்படுகிறார்கள் எனும்போது, இந்த சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்ற முடிவுக்கு உச்ச நீதிமன்றம் எவ்வாறு வந்தது கேள்விகள் எழுந்தன.

2016-ஆம் வருடத்தில் தலித் மக்கள் மீதான வன்கொடுமைகள் பற்றி தேசிய குற்றப் பதிவு ஆணையம் தெரிவித்துள்ள விபரப்படி, தலித்துகள் மீதான குற்றங்கள் 66 சதவிகிதம் அதிகரித்துள்ளது; 15 நிமிடத்திற்கு ஒரு வன்கொடுமை தலித்துக்கள் மீது ஏவிவிடப்படுகிறது என்று கூறப்படுவதை உச்ச நீதிமன்றம் கணக்கில் கொள்ளாதது ஏன் என்றும் விமர்சனங்கள் எழுந்தன.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன.இந்நிலையில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தாழ்த்தப்பட்ட – பழங்குடியினர் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்றும், இத்தீர்ப்பு மூலம் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் சீர்குலைக்கப்படுவதை அனுமதிக்கக் கூடாது எனவும் வலியுறுத்தி, எதிர்க்கட்சித் தலைவர்கள் புதன்கிழமையன்று மாலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து முறையிட்டனர்.

வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு மீதான தங்களின் கவலைகளை அவர்கள் தெரிவித்தனர்.காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவைக் குழு தலைவர் டி.கே. ரங்கராஜன், திமுக எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவன், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் சதீஸ் சந்திர மிஸ்ரா உள்ளிட்டோரும், தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகளும் குடியரசுத் தலைவருடனான சந்திப்பில் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: