சென்னை:
மாற்றுத்திறனாளிகளுக்கு எதிராக உள்ள கூட்டுறவு தேர்தல் ஆணைய நடவடிக்கைகளை தடுக்க வேண்டும் என்றும் சட்டப்பூர்வ கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:                                                                                                                                                                                    தமிழ்நாடு கூட்டுறவுச் சட்டப் பிரிவு 34(1) (i)ன்படி கூட்டுறவு தேர்தலில் போட்டியிடுபவர்கள் ஆங்கிலம், தமிழ் அல்லது அந்தந்தப் பிராந்தியத்தில் பயன்படுத்தும் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிய வேண்டும் என பொதுவான விதி உள்ளது.

கல்வியறிவு சம்பந்தப்பட்ட இந்தப் பொதுவான விதியை பார்வையற்றவர்களுக்கும் உட்படுத்தி, “உங்களுக்கு பார்க்க முடியாது, எழுத முடியாது” என சட்ட விதிக்கு உள்நோக்கம் கற்பித்து, மாற்றுத்திறனாளிகளை கூட்டுறவுத் தேர்தலில் போட்டியிட விடாத வகையில் தமிழ்நாடு கூட்டுறவு தேர்தல் ஆணையம் தடுத்து வருவது அரசியல் சாசனத்துக்கே விரோதமானது. மாற்றுத்திறனாளிகள் உரிமைகளுக்கான புதிய சட்டத்திற்கு எதிரானது.

எனவே, மாற்றுத்திறனாளிகள் மீது பாரபட்சம் காட்டி, அவர்களின் உரிமைகளை முடக்கி வரும் தமிழ்நாடு கூட்டுறவு தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்) வன்மையாகக் கண்டிக்கிறது.

2013 ஆம் ஆண்டு கூட்டுறவு தேர்தலில் போட்டியிட்ட, பார்வையற்ற இருமாற்றுத்திறனாளிகளின் வேட்பு மனுக்கள் சட்டவிரோதமாக தள்ளுபடி செய்யப்பட்டன. தற்போது நடைபெற உள்ள தேர்தலில் அவ்வாறு நடந்துவிடக் கூடாது என தடுப்பதற்காக கடந்த 16 ஆம் தேதி, மாநில கூட்டுறவுத் தேர்தல் ஆணையரை நேரில் சந்தித்து மனு கொடுக்க சென்ற மாற்றுத்திறனாளிகளை மனது புண்படும் வகையில், உள்நோக்கோடு, ஊனத்தை கேலி செய்யும் வகையில் கூட்டுறவு தேர்தல் ஆணையர் அவதூறு செய்ததோடு, கோரிக்கையையும் ஏற்க மறுத்துள்ளார். அது குறித்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில், பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் புகார் கொடுத்து ஊனமுற்றோர் சட்ட விதிப்படி கூட்டுறவு தேர்தல் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.அதற்காக 21.03.2018 அன்று மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் போராட்டம் நடத்தியபோது, மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையை ஏற்பதுபோல நயவஞ்சகமான வார்த்தைகளை பயன்படுத்தி கூட்டுறவு தேர்தல் ஆணையர் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்ததன் அடிப்படையில் அன்று போராட்டம் முடிக்கப்பட்டது. அந்த உத்தரவை நம்பி, தருமபுரி மாவட்ட பொது நூலகத்துறை கூட்டுறவு சங்கத்திற்கு போட்டியிட்ட தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி பி. சரவணனின் வேட்பு மனு தற்போது மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. இதனால், தற்போது மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு கைதுசெய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, கூட்டுறவு தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை சட்ட விரோதமானது என்று மாற்றுத்திறனாளிகள் நல மாநில ஆணையம் எச்சரித்துள்ளது. மேலும், மாற்றுத்திறனாளி என்ற அடிப்படையில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாற்றுத்திறனாளிகள் சட்டப்படி தண்டனைகளை சந்திக்க நேரிடும் என்றும் மாற்றுத்திறனாளிகள் ஆணையர் எச்சரித்துள்ளது வரவேற்கத்தக்கது.

எனவே, மாற்றுத்திறனாளிகளின் சட்டம் தெளிவாக கூறியுள்ள நிலையில், எங்களுக்கு பொருந்தாது என கூட்டுறவு தேர்தல் ஆணையர் ஆணவமாகக் கூறுவது கண்டிக்கத்தக்கது. மாற்றுத் திறனாளிகளும் கூட்டுறவுத் தேர்தலில் பங்கேற்கும் வகையில் உரிய ஆணையினை உடனடியாக பிறப்பித்து இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.