ஒரு உலோகத் தாதுவை இறக்குமதி செய்து அதை உலோகமாக்கும் வேலையை ஒரு நாடு செய்தால், தாதுவிலிருந்து உலோகத்திற்கு கூட்டும் மதிப்பு அந்நாட்டு மக்களின் உழைப்பால் ஏற்படுகிறது. பொருளாதார ரீதியாக இது சிறந்த கொள்கைதான். தாமிரச் சுரங்கம் ஏதும் இல்லாத ஜப்பான், உலகிலேயே தாமிர உற்பத்தியில் முன்னிலை வகிக்கிறது. அங்கு தாமிர உருக்காலையால் சுற்றுச் சூழல் பிரச்சனை இங்குள்ளது போல் இல்லை.

ஆனால் இந்தியாவில் தாமிரத்தாது கணிசமாக கிடைக்கிறது. உலக தாமிரத் தாது உற்பத்தியில் இந்தியா 2 சதவீதத்தைப் பெற்றிருக்கிறது.(https://en.wikipedia.org/wiki/Copper_production_in_India.) இந்தியாவில் இதுவரை இருப்பதாக மதிப்பிடப்பட்ட தாமிரத் தாதுவான1394 மில்லியன் டன்னில் 369 மில்லியன் டன்னே பயன்படுத்தத் தகுதியானது என்று ஆய்வு கூறுகிறது. மீதமுள்ள தாதுவை ஆய்வுக்குட்படுத்தவில்லை. 60,000 சதுர கி.மீ. பரப்பளவில் தாமிரத்தாது இருக்கும் வாய்ப்புள்ளது என்று கணக்கிடப்பட்டு இதுவரை 20000 சதுர கி.மீ பரப்பளவே ஆய்வுக்குட்படுத்தப்ட்டிருக்கிறது.

நமது நாட்டில் தாமிர உற்பத்தியில் ஈடுபடும் நிறுவனம் சட்ட மீறல்களை செய்யும் மோசடி நிறுவனமாக இருக்கிறது. இதுவே இங்கு அடிப்படை பிரச்சனை. எங்கு சென்றால் சட்டத்தை எளிதில் மீறலாம் என்றும் கழிவுகளை சுத்திகரிக்காமல் அப்படியே கொட்டுவதற்கு சாத்தியமுள்ள இடம் எது என்றும் பார்த்து இடத்தை தேர்வு செய்கிறது அந்த நிறுவனம். அப்படித்தான் தூத்துக்குடி அவர்களுக்கு கிடைத்துவிட்டது. அங்குள்ள ஸ்டெர்லைட் நிறுவனம், நான்கு முறை விதிமீறல் செய்ததாக நிருபிக்கப்பட்டிருக்கிறது. எனினும் அவர்கள் அட்டகாசம் நின்றபாடில்லை. இந்த முதலாளியின் கையில் ஆலை இருக்கும் வரை அது பாதுகாப்பாக இயங்காது. எனவே ஆலையை மூடக் கோருவதைத் தவிர வேறு வழியில்லை.

இதுபோன்ற பெரும் ஆலைகளில் ஏற்படும் விபத்துகள், தொழில்நுட்பம் பெருகப் பெருக குறைந்து கொண்டே வருகிறது. தூத்துக்குடி ஸ்பிக் ஆலையில் கந்தக அமில ஆலையை நிறுவும் போது ஏற்பட்ட விபத்தில் ஜப்பானிய தொழில் நுட்ப வல்லுனர் உட்பட நான்குபேர் மரணமடைந்தனர். தூத்துக்குடி அனல்மின்நிலையத்திலும் இதுபோன்ற விபத்துகள் நடைபெற்றதுண்டு. மனிதத்தவறுகளால் நடக்கும் மரணமும், தனிநபர்கள் பாதுகாப்புவிதிமுறைகளை கடைப்பிடிக்காததால் ஏற்படும் மரணமும் இதில் அடங்கும். லாப வெறிக்காக பாதுகாப்பு ஏற்பாடுகளை மீறி ஆலையை இயக்கும் போக்கினாலும் விபத்துகள் ஏற்பட்டிருக்கிறது. ஸ்டெர்லைட் ஆலைக்குள்ளும் விபத்துக்கள் நடந்துள்ளன. உயர்எடை உலோகக் கழிவுகள் நிலத்தடி நீரில் கலப்பதால் அதைப் பயன்படுத்தும் மனிதர்களுக்கு சிறுநீரகக் கோளாறு ஏற்படும். எனவே பாதுகாப்பு விதிமுறைகள் அவசியம்.
-விஜயன்

Leave a Reply

You must be logged in to post a comment.