திருவனந்தபுரம்:
கட்டுமானத்தொழிலில் ஏற்பட்டுள்ள பாதிப்பை கருத்தில்கொண்டு கேரள அரசு மணல் இறக்குமதிக்கு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து மலேசியாவிலிருந்து மூன்று கப்பல்களில் ஒன்றரை லட்சம் டன் மணல் கொச்சி துறைமுகத்துக்கு வந்துள்ளது.

இறக்குமதிக்கு அரசின் உத்தரவாதமோ, கண்காணிப்போ இல்லை. மாநில புவியியல்துறை சிறப்பான வணிக மேலாண்மையுள்ள நிறுவனத்தை இதற்காக அனுமதிக்கும். கொண்டு வரப்படும் மணலை விற்பனை செய்ய மாவட்ட புவியியல் துறை அளிக்கும் தினசரி அனுமதி, கனிம போக்குவரத்துக்கான அனுமதி போன்றவை கட்டாயமாகும். ஐந்து ஆண்டுகளுக்கான இறக்குமதி அனுமதிக்கு பதிவுகட்டணம் ஆயிரம் ரூபாய். ஓராண்டுக்கான கனிம உரிமத்துக்கு 500 ரூபாயும், விற்பனையாளர் அனுமதிக்கு நான்கு ரூபாயும் கட்டணமாகும். மாவட்ட புவியியல் அலுவலகத்தில் அளிக்கப்படும் விண்ணப்பங்களும், ஆவணங்களும் சரியாக இருந்தால் மூன்று நாட்களுக்குள் அனுமதி வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. மற்ற மாநிலங்களிலிருந்து சாலை வழியாகவோ, கடல் வழியாகவோ கொண்டு அந்தந்த மாநில அரசுகள் அளிக்கும் அனுமதி அவசியமாகும்.
துறைமுகத்திற்கு வந்து சேரும் மணலை நான்கு நாட்கள் வரை புவியியல் அதிகாரிகள் பரிசோதனை செய்வார்கள். மணலின் தரம் உறுதி செய்யப்பட்ட பிறகே விற்பனைக் அனுமதிக்கப்படும். கப்பல் கொச்சி துறைமுகத்தை வந்தடைந்ததும் முகவருடன் செய்து கொண்ட ஒப்பந்தம், வரி செலுத்தியதற்கான சான்றுகள் போன்ற ஆவணங்கள் ஒப்படைக்கப்பட வேண்டும்.

கல் இறக்குமதிக்கு அரசு அனுமதி அளித்ததையொட்டி பல்வேறு பகுதிளிலிருந்து விருப்ப கோரிக்கைகள் வந்துள்ளன. ஓமன், மலேசியா, இலங்கை போன்ற நாடுகளிலிருந்து கோரிக்கை வந்துள்ளன. மூன்றாயிரத்துக்கும் அதிகமான குவாரிகள் செயல்பட்டு வந்த கேரளத்தில் தற்போது ஆயிரத்துக்கும் குறைவான குவாரிகளே செயல்பாட்டில் உள்ளன.

இறக்குமதியை ஊக்குவித்துள்ளதால் அடுத்த 3 மாதங்களில் கேரளத்தில் கட்டுமானத்துறை இயல்பு நிலையை எட்டும் என அரசு மதிப்பீடு செய்துள்ளது. கட்டுமான பொருட்களின் விலை குறையவும் இந்த இறக்குமதி உதவும்.

Leave a Reply

You must be logged in to post a comment.