சென்னை:
மீனவ மக்களின் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்ட – திருத்தப்பட்ட கடற்கரை வேளாண்மை திட்ட நகல் மீது பொதுமக்கள் கருத்துக்களையும் ஆட்சேபணைகளையும் தெரிவிப்பதற்கான காலத்தை நீட்டிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை செயலாளருக்கு கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில் கூறியிருப்பதாவது:

2018 பிப்ரவரி மாதம் 19 ம் தேதி தமிழக அரசு சார்பில் சுற்றுச்சூழல் துறை திருத்தப்பட்ட கடற்கரை மேலாண்மை திட்ட நகலை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, அதற்கு பொதுமக்களின் கருத்துக்களையும், ஆட்சேபணைகளையும் 45 தினங்களுக்குள் தெரிவிக்க கோரியிருந்தது. ஆனால் அந்த அறிவிப்பு ஆங்கிலத்தில் இருந்ததோடு, அதனை சாதாரண மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் பத்திரிகைகள் மூலமாகவோ, இதர வகையிலோ விளம்பரப்படுத்தவில்லை. எனவே அரசாங்கம் மக்களுடைய கருத்துக்களை அறிவதில் அக்கறை காட்டாமல் வெறும் சம்பிரதாயமாகவே இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளது எனக் கருத இடம் உள்ளது. கடற்கரைப் பகுதி பெரும்பான்மை மக்கள், குறிப்பாக மீனவ மக்கள் ஆங்கிலத்தில் புலமை உள்ளவர்கள் அல்ல. எனவே, அரசு உண்மையில் மக்களுடைய கருத்துக்களை அறிய வேண்டுமென்று விரும்பி இருந்தால் அதனை தமிழில் பத்திரிகைகள் மூலமாக அறிவித்து, மக்களுடைய கருத்துக்களைக் கேட்டிருக்க வேண்டும்.

மேலும், இதற்கான ஆட்சேபணைகளைத் தெரிவிக்க 45 நாட்கள் அவகாசம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த அறிவிப்பே மக்களிடம் சென்றிராத நிலையில் அதற்கான ஆட்சேபணைகளை குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் அப்பகுதி மக்களால் அனுப்பப்படுவது சாத்தியமற்றதாக உள்ளது. அதுமட்டுமன்றி தற்போது கிறிஸ்தவ மக்கள் தவக்காலம் எனும் விரதநாட்களை அனுஷ்டித்து வருகின்றனர். ஈஸ்டர் பண்டிகை வரையிலும் அவர்கள் மத ஈடுபாட்டுடன் உள்ள காலமாக உள்ளது. எனவே, அவர்கள் இந்த நகல் திட்டத்தை குறித்து விவாதித்து, உண்மை நிலையைப் புரிந்து உரிய கருத்துக்களை தெரிவிக்க இயலாத நிலையில் உள்ளனர். தென்மாவட்டங்களில் உள்ள கடற்கரை பகுதி மக்களும், மீனவர்களும் பெரும்பாலும் கிறிஸ்தவர்கள் என்பதை தாங்களும் அறிவீர்கள்.

எனவே, மேற்கண்ட திட்ட நகலை தமிழில் பத்திரிகை விளம்பரங்கள் மூலம் வெளியிடவும், கருத்துக்கள், ஆட்சேபணைகள் கூறுவதற்கான கால அவகாசத்தை 2018 மே மாதம் 30ம் தேதிவரை நீட்டிக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.