திருப்பூர், மார்ச் 28 –
திருப்பூர் மாநகராட்சியில் ஆண்டு தோறும் பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல் செய்யும் வழக்கத்துக்கு மாறாக 2018 – 19 நிதியாண்டுக்கு ரூ.5 கோடியே 86 லட்சம் உபரி பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்டது.

திருப்பூர் மாநகராட்சியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாமன்றம் இல்லாத நிலையில் 2018 – 19ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் விபரத்தை ஆணையர் எம்.அசோகன் வெளியிட்டார். இதில் 2018 – 19 நிதியாண்டுக்கு வருவாய் வரவு ரூ.332 கோடியே 21 லட்சம், குடிநீர் வடிகால் நிதி ரூ.820 கோடியே 68 லட்சம், கல்வி நிதி ரூ.18 கோடியே 64 லட்சம் என மொத்த வரவு ரூ.1,171 கோடியே 53 லட்சத்து 85 ஆயிரம் ஆகும். அதேசமயம் செலவு வகையில் வருவாய் செலவினம் ரூ.326 கோடியே 56 லட்சம், குடிநீர் வடிகால் செலவினம் ரூ.820 கோடியே 52 லட்சம், கல்வி நிதி செலவு ரூ.18 கோடியே 58 லட்சம் ஆக மொத்த செலவு ரூ.1165 கோடியே 67 லட்சத்து 17 ஆயிரம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் வரவு அதிகமாகவும், செலவு குறைவாகவும் இருக்கும் என்பதால் ரூ.5 கோடியே 86 லட்சத்து 68 ஆயிரம் உபரி கிடைக்கும் என்று ஆணையர் தெரிவித்தார்.

மத்திய அரசின் அனுமதிக்காக:
வழக்கமாக பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல் செய்யும் நிலையில் இந்த ஆண்டு உபரி பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்டு இருப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, மத்திய அரசின் அம்ரூத் திட்டத்தின்கீழ் ரூ.994 கோடி மதிப்பில் நான்காவது குடிநீர் திட்டமும், ரூ.525 கோடி மதிப்பில் பாதாளச் சாக்கடைத் திட்டமும் இம்மாநகரில் நிறைவேற்றப்படுகிறது. மொத்தம் ரூ.1519 கோடி அளவுக்கு நிறைவேற்றப்பட்டும் இத்திட்டங்களுக்கு மத்திய அரசிடம் அனுமதி கிடைப்பதற்காக, மாநகராட்சியின் நிதிநிலை திருப்தியாக இருப்பதாகக் காட்ட வேண்டும். எனவேதான் உபரி பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்று ஆணையர் கூறினார்.

4 ஆவது குடிநீர் திட்டத்திற்கு ரூ.400 கோடி:
மேலும், நான்காவது குடிநீர் திட்ட மதிப்பு ரூ.994 கோடியில் ரூ.400 கோடியும், பாதாளச் சாக்கடை திட்ட மதிப்பு ரூ.525 கோடியில் ரூ.101 கோடியும் இந்த நிதியாண்டில் ஒதுக்கப்படுகிறது. சீர்மிகு நகரம் (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்தில் மொத்தம் 17 விதமான வளர்ச்சிப் பணிகள் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் மொத்த உத்தேச மதிப்பு ரூ.1255 கோடியே 71 லட்சம் ஆகும். இதில் 18 – 19 நிதியாண்டில் முதல் கட்டமாக ரூ.160 கோடி அளவுக்குப் பணிகள் செய்யப்பட உள்ளது. இதில் நகரின் மையப்பகுதியில் உள்ள நொய்யல் ஆறு, ஜம்மனை, சங்கிலிப்பள்ளம் ஓடைகள் ஆகியவற்றை சுத்தம் செய்து, நடைபாதை அமைத்தல், பூங்காக்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் ரூ.30 கோடி மதிப்பில் நிறைவேற்றப்படும்.

மார்க்கெட் மேம்பாட்டிற்கு ரூ.20 கோடி:
அதேபோல் காமராஜர் சாலையில் உள்ள தினசரி காய்கறி சந்தை, பூ மார்க்கெட், தென்னம்பாளையம் வாரச்சந்தை, மீன் மார்க்கெட் ஆகிய பகுதிகளில் அனைத்து அடிப்படை வசதிகளும் ரூ.20 கோடி மதிப்பில் மேம்பாடு செய்யப்படும். பேருந்து நிலையங்கள் ரூ.5 கோடி மதிப்பில் மேம்பாடு செய்யப்படும். நகரின் மையப்பகுதியில் நெருக்கடி மிகுந்த நிலையில் ரூ.44.36 கோடியில் பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் தனியார் மூலம் நிறைவேற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளது. இப்பணி நடப்பாண்டில் தொடங்கும். நவீன வசதிகளுடன் கூடிய கூட்ட அரங்கம் கட்ட இந்தாண்டு ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மாநகரில் போக்குவரத்து கண்காணிப்பு, குற்றதடுப்பு, கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்துதல் உள்ளிட்ட பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் ரூ.150 கோடி மதிப்பில் திட்டமிடப்பட்டு நடப்பு ஆண்டில் ரூ.40 கோடி ஒதுக்கப்படும்.

மாநகராட்சி பள்ளி மேம்பாட்டிற்கு ரூ.10 கோடி:
மாநகராட்சிப் பள்ளிகள் 22இல் ரூ.10 கோடியில் கட்டமைப்பு மேம்பாடு செய்யப்படும். ரூ.3 கோடியில் மூன்று இடங்களில் பூங்காக்கள் அமைக்கப்படும். மாநகராட்சி பொது நிதி ரூ.23.50 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் ரூ.12.50 கோடிக்கும், சாலை மேம்பாட்டுப் பணி ரூ.11 கோடி மதிப்பிலும் நிறைவேற்றப்படும். நொய்யல் குறுக்கே ராயபுரம் – பாரப்பாளையம் இடையே ரூ.3.30 கோடியில் தீபம் அறக்கட்டளை நிதியுதவியுடன் பாலம் கட்டவும், ஈஸ்வரன் கோயில் சாலை – சக்தி திரையரங்கம் குறுக்கே ரூ.9 கோடியில் புதிய பாலம் கட்டவும் இந்த ஆண்டு நிர்வாக அனுமதி பெற்று பணிகள் தொடங்கப்படும். அத்துடன் நொய்யல் ஆற்றின் குறுக்கே ஏஐடியுசி காலனி – டீ சாலையை இணைக்கும் வகையில் ரூ.6 கோடியில் பாலம் கட்ட நிர்வாக அனுமதி பெற்று நடப்பாண்டில் பணி தொடங்கப்படும் என்றும் ஆணையர் எம்.அசோகன் தெரிவித்தார்.

முன்னதாக உதவி ஆணையர் (கணக்கு) சந்தான நாராயணன் 2018-19 நிதியாண்டுக்கான வரவு, செலவு சுருக்க விபரத்தை அறிவித்து ஆணையரிடம் பட்ஜெட் நகலை ஒப்படைத்தார். இந்த சந்திப்பின்போது மாநகராட்சி மண்டல உதவி ஆணையர்கள் வாசுகுமார், ஷபியுல்லா, செல்வநாயகம், கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.