தாராபுரம், மார்ச் 27 –
ஏற்கனவே இடநெருக்கடியில் சிக்கிதவிக்கும் தாராபுரம் பேருந்து நிலையத்தில் நகராட்சி சார்பில் சைக்கிள் ஸ்டேண்டு அமைக்க முடிவு செய்திருப்பதற்கு மார்க்சிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

25 ஆண்டுகளுக்கு முன்பு தினசரி மார்க்கெட்டில் செயல்பட்டு வந்த தாராபுரம் பேருந்து நிலையம் இடநெருக்கடியின் காரணமாக பைபாஸ் ரோட்டில் மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையத்திற்கு வெளியூர் மற்றும் உள்ளுர் பேருந்துகள் என தினசரி சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கின்றன. இதன் காரணமாக ஏற்படும் இட நெருக்கடியால் பேருந்துகள் குறித்த நேரத்திற்குள் வெளியே வரமுடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், தனியார் மற்றும் அரசு பேருந்து ஒட்டுநர்களுக்கிடையே அவ்வப்போது நேர (டைமிங்) தகராறு ஏற்பட்டு கைகலப்பும் உண்டாகிறது. இந்நிலையில் இந்த பேருந்து நிலையத்தில் மினி பேருந்துகள் மற்றும் நகர பேருந்துகள் நிற்பதற்கு பேருந்து நிலையத்தின் கடைக்கோடியில் இடம் ஒதுக்கப்பட்
டுள்ளது. இப்பகுதியில் தற்போது நகராட்சி நிர்வாகம் சைக்கிள் ஸ்டேண்டு அமைக்க முடிவு செய்து டெண்டர் விட்டுள்ளது. ஏற்கனவே கடும் இட நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பேருந்து நிலையத்தில் புதியதாக சைக்கிள் ஸ்டேண்டு அமைக்கப்பட்டால் பேருந்து நிலையத்தின் இருபது சதவிகித பகுதி சைக்கிள் ஸ்டேண்டிற்கு ஒதுக்கப்படும். இதன் காரணமாக மேலும் இடநெருக்கடி ஏற்பட்டு பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் பெரும் இடையூறு உண்டாகும் என்பதால் நகராட்சி நிர்வாகத்தின் இந்த முடிவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாராபுரம் தாலுகா செயலாளர் கனகராஜ் கூறுகையில், தாராபுரம் நகராட்சி நிர்வாகம் தனது வருவாயை பெருக்கும் நோக்கில் பேருந்து நிலையத்தில் புதியதாக சைக்கிள் ஸ்டேண்டு அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால், நகராட்சி நிர்வாகம் வருவாயை பெருக்க பல்வேறு வழிகள் உள்ளது. குறிப்பாக, தாராபுரம் பேருந்து நிலையத்தில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான கடைகளில் முறைப்படி வாடகை வசூலித்தாலே பெருமளவு வருவாய் கிடைக்கும். எனவே, அதை ஆராய்ந்து அதிகாரிகள் செயல்படுத்த வேண்டும். அதைவிடுத்து பேருந்து நிலையத்தில் மேலும் நெருக்கடியை உண்டாக்கும் வகையில் சைக்கிள் ஸ்டேண்டு அமைப்பது ஏற்றுக்கொள்ள இயலாது. எனவே நகராட்சி நிர்வாகம் இந்த முடிவை கைவிட வேண்டும். இல்லையெனில் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த வேண்டிய சூழ்ழ்நிலை ஏற்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: