கோவை, மார்ச் 28-
தாய் இறந்த சோகத்தை தாங்கிக்கொண்டு பத்தாம் வகுப்பு தேர்வுக்கு சென்ற மாணவரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், வடவள்ளி பொம்மனாம்பாளையம் மதுரை வீரன் கோவில் வீதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் இவரது மனைவி வெங்கடேஸ்வரி. இவர்களது மகன் அன்புச்செல்வன் பத்தாம்வகுப்பு பொதுத்தேர்வு எழுதி வருகிறார். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் ராமச்சந்திரனும், வெங்கடேஸ்வரியும் இடையர்பாளையத்திற்கு சென்றுள்ளனர். அப்போது நிலை தடுமாறி எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தனர். இதில் ராமச்சந்திரனும் அவரது மனைவியும் காயம் அடைந்தனர். இருவரும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், செவ்வாயன்று வெங்கடேஸ்வரிக்கு உடல்நிலை பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதனையடுத்து கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால் இவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து இறந்த வெங்கடேஷ்வரியின் உடல் புதனன்று பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். வெங்கடேஷ்வரியின் மகன் அன்புச்செல்வன் உள்ளிட்ட குடும்பமே பெரும் சோகமாக இருந்தது.இருப்பினும், புதனன்று நடைபெற்ற பத்தாம்வகுப்பு ஆங்கில பொதுத்தேர்விற்கு தாய் இறந்த சோகத்தை தாங்கிக்கொண்டு அன்புச்செல்வன் தேர்வு மையத்திற்கு சென்று தேர்வு எழுதியது அனைவரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது. பிரேத பரிசோதனைக்கு பின்னர் வெங்கடேஸ்வரியின் உடல் அவரது சொந்த ஊரான திண்டுக்கல்லுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

Leave A Reply

%d bloggers like this: