ஈரோடு, மார்ச் 28-
கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்பாக அதிமுகவின் இரு அணியினர் மோதிக்கொண்ட சம்பவம் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பதில் கூற மறுத்து விட்டு சென்றார்.

ஈரோடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத் தேர்தல் பரிசீலனை செவ்வாயன்று நடைபெற்றது. அப்போது, அதிமுகவின் மாவட்ட பொருளாளர் மற்றும் இளைஞர் அணியின் தலைவராக இருந்த கே.சி.பழனிசாமி சார்பில் ஒரு பகுதியினரும், கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் தென்னரசு சார்பாக ஒரு பகுதியினரும் போட்டியிட்டனர். இதில் தென்னரசின் சகோதரர் நல்லசாமி மற்றும் அவரது உறவினர் ஒருவரும் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். மேலும், அதிமுக நிர்வாகிகளை தவிர அனைத்து வேட்பாளர்களின் மனுவும் நிராகரிக்கப்பட்டது.

இதனை எதிர்த்து கே.சி.பழனிச்சாமியின் ஆதரவாளர்கள், எதிர்தரப்பினருடன் கூட்டுறவு சங்க அலுவலகத்தில் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அது முற்றிய நிலையில் கைகலப்பானது. இதையடுத்து ,அதிமுக மாநகர நிர்வாகி மனோகரன் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் உடன்பாடு ஏற்படாத காரணத்தால் மீண்டும் இரு அணியினரும் மோதிக்கொண்டனர். இந்த சம்பவம் ஈரோடு மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை மற்றும் நூலக ஆணைக்குழுவின் கீழ் இயங்கும் சம்பத் நகர் நவீன நூலகத்தில் அரசு போட்டி தேர்விற்கான பயிற்சி மையத்தினை திறக்க புதனன்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஈரோடு வந்திருந்தார்.

அப்போது கூட்டுறவு சங்கதேர்தல் குறித்து செய்தியாளர்கள் அமைச்சரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் செங்கோட்டையன், நூலகத்தில் நவீன வசதிகளுடன் புதிய போட்டித் தேர்வுகள் தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து மட்டுமே கேட்க வேண்டும். கூட்டுறவு சங்க தேர்தல் ஜனநாயகமுறைப்படி நடந்து வருகிறது. அதனை அரசியலாக்க வேண்டும். இதற்கு மேல் எதுவும் கூற முடியாது என கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

Leave a Reply

You must be logged in to post a comment.