திருப்பூர், மார்ச் 28 –
திருப்பூர் குமரன் காலனி பகுதியில் குடிநீர் விநியோகக் குழாய் பதிக்கும் பணி ஐந்தாண்டு காலத்துக்கு மேலாக கிடப்பில் போடப்பட்டிருப்பதால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டு, சாலைகளும் பழுதடைந்துள்ளன. இதைத்தொடர்ந்து தொடர் போராட்டங்களை நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.

திருப்பூர் மாநகராட்சி 3ஆவது வார்டு மாமன்ற உறுப்பினராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கே.மாரப்பன் செயல்பட்டு வந்தார். மாநகரின் விரிவடைந்து வரும் இந்த வார்டு குடியிருப்புப் பகுதிகளில் குடிநீர் வசதி ஏற்படுத்தித் தரவும், வடிகால், சாலை பணிகள் மேற்கொள்ளவும் இப்பகுதி மக்களின் கோரிக்கைகளை ஏற்று மாநகராட்சியில் மாரப்பன் தொடர் கோரிக்கை வைத்தார். இதன் அடிப்படையில் ரூ.3.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பல்வேறு வளர்ச்சிப் பணிகள் தொடங்கப்பட்டன. எனினும் இதில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் டெக்மா நகர் பகுதியில் குடிநீர் வசதி மற்றும் குமரன் காலனியில் 1000 மீட்டர் அளவுக்கு குழாய் பதிப்பதற்குரிய பணிகள் நடைபெறவில்லை. குறிப்பாக குமரன் காலனியில் குழாய் பதிப்பதற்கு உரிய நிர்வாக ஏற்பாடுகள், ஆரம்ப கட்ட பணிகள் செய்யப்பட்டு குழாய்களும் கொண்டு வந்து தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.

ஆனால் திடீரென அந்த 1000 மீட்டர் குழாய்களை சம்பந்தப்பட்ட உதவிப் பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் வேறு வார்டுக்கு எடுத்துச் சென்றுவிட்டதால் இங்கு பணிகள் கிடப்பில் போடப்பட்டது. மேலும், பவானி குடிநீர் வழங்கும் குழாய் பதிக்கும் பணி ஆமை வேகத்தில் நடைபெற்றது. தியாகி குமரன் காலனி, ஒட்டபாளையம், டெக்மாநகர், விஜயபுரி கார்டன், பிரியங்கா நகர் பகுதிகளில் வீட்டுக் குடிநீர் இணைப்பில் முறையாக குடிநீர் வருவதில்லை. குழாய் பதிப்பதற்கு தோண்டிய குழிகளில் குழாய்களையும் பதிக்காமல், குழிகளையும் மூடாமல் வீதி சாலைகளை சேதப்படுத்தியதால் அனைத்துப் பாதைகளும் குண்டும், குழியுமாக உள்ளன. இந்த பிரச்சனைகள் தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் குமரன் காலனி வடக்கு, தெற்கு, விஜயபுரி கார்டன் பகுதி கிளைகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாயன்று நடைபெற்றது. இதில் மேற்படி குழாய் பதிக்கும் பணி, சாலை சீரமைப்புப் பணிகளை உடனடியாக நிறைவேற்றி முடிக்க வேண்டும், அனைத்து பகுதிகளுக்கும் சீரான குடிநீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், கடந்த 5 ஆண்டு காலமாக மண்டல அலுவலகத்திலும், மாநகராட்சியிலும் மனுக் கொடுக்கும் போராட்டம், அலுவலக முற்றுகைப் போராட்டம் உள்பட பல கட்டப் போராட்டங்கள் நடத்தியும் மாநகராட்சி நிர்வாகம் மிகமெத்தனமாக செயல்படுகிறது.

எனவே, இனியும் இந்த அவல நிலையை இப்பகுதி மக்கள் பொறுத்துக் கொள்ள முடியாது என்பதால் ஏப்ரல் 9, 10 ஆகிய இரு நாட்களில் முதல் கட்டமாக மக்களைத் திரட்டி 48 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. இதன்பின்னரும் மாநகராட்சி நிர்வாகம் இப்பணிகளை நிறைவேற்றாத பட்சத்தில் அடுத்த கட்டமாக ஏப்ரல் மாத இறுதிக்குள் பெருமாநல்லூர் சாலை அண்ணாநகர் பேருந்து நிறுத்தம் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களைத் திரட்டி சாலை மறியல் போராட்டம் நடத்தவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: