கோபி, மார்ச் 28-
கோபிசெட்டிபாளையம் அருகே கூட்டுறவு கடன் சங்கத்தில் ஆளும் கட்சியினரைத் தவிர மற்ற அனைவரது வேட்பு மனுக்களும் நிராகரிப்பட்டதை கண்டித்து தேர்தல் அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மேவாணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்படுகிறது. இங்கு கூட்டுறவு சங்க பிரதிகள் தேர்வுக்கான தேர்தல் நடைபெறுவதையொட்டி தேர்தலில் போட்டியிட விரும்பும் சங்க உறுப்பினர்களிடம் திங்களன்று வேட்பு மனுக்கள் பெறப்பட்டது. இதைத்தொடர்ந்து செவ்வாயன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. அப்போது, ஏற்கனவே கூட்டுறவு சங்கப் பிரதிநிகளாக இருந்தவர்களின் வேட்பு மனுக்களை மட்டும் ஏற்றுக்கொண்டு மற்றவர்களின் வேட்பு மனுக்களை நிரகரிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து வேட்புமனு நிராகரிக்கப்பட்டவர்கள் புதனன்று கூட்டுறவு கடன் சங்கத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோபி காவல் ஆய்வாளர் பாலமுரளிசுந்தரம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.அப்போது வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை தேர்தல் அலுவலர் முறையாக தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து கூட்டுறவு சங்கத்தின் தேர்தல் அதிகாரியை வரவழைத்த காவல்துறையினர் அவரிடம் விளக்கம் கேட்டனர். ஆனால், அவர் உரிய விளக்கமளிக்காததால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டவர்கள் அவரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்திய காவல்துறையினர், கூட்டுறவு நீதி மன்றத்தில் முறையிடுமாறு அறிவுறுத்தி அங்கிருந்து அனைவரையும் அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பான சூழல் காணப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: