தேர்தலை நோக்கமாகக் கொண்டு ஹிந்துத்துவாவை ஊக்குவிக்கின்ற அமைப்பின் பிரதிநிதி நான் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ரகசியப் பத்திரிகையாளர் ஒருவருடன் ஒளிபரப்பிற்கான பணத்தைப் பெற்றுக் கொண்டு ஒப்பந்தம் செய்து கொள்ள பல ஊடகங்களும் தயாராக இருந்தன என்று கோப்ராபோஸ்ட்.காம் என்ற புலனாய்வுத் தளம் திங்கள்கிழமையன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது தெரிவித்திருக்கிறது.

கோப்ராபோஸ்ட் நடத்திய புலனாய்வின் ஒரு பகுதியாக, பல மாதங்களுக்கும் மேலாக வட இந்தியாவில் இயங்குகின்ற முன்னணி செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களின் உயர் நிர்வாகிகளுடன் தனனுடைய நிருபர் பேசியவற்றை கோப்ராபோஸ்ட் நிறுவனம் மறைமுகமாகப் படம் பிடித்திருக்கிறது. புஷ்ப் சர்மா என்ற அந்த நிருபர் ஸ்ரீமத் பகவத் கீதா பிரச்சார் சமிதி என்ற அமைப்பைச் சேர்ந்த ஆச்சார்யா அடல் என்பவர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். பல்வேறு சமயங்களில் அவர் தன்னுடைய  நிறுவனத்தை ‘சங்காதன் என்றே குறிப்பிட்டுப் பேசினார். அவர் படம் பிடித்த ஊடக நிர்வாகிகளில் பலரும் அவரை நாக்பூரைத் தலைமையகமாகக் கொண்ட ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்திலிருந்து (ஆர்எஸ்எஸ்) வந்தவராக அல்லது ஏதோ ஒருவகையில் அவர்களோடு நெருக்கமானவராகவே கருதினர்.

2019 தேர்தலுக்கு முன்னராக, ஹிந்துத்துவத்தின் நோக்கங்களை மென்மையான இந்துத்துவா’ உள்ளடக்கத்துடன் தன்னுடைய அமைப்பு தொடக்கி வைக்க விரும்புவதாக இந்த ஊடக நிறுவனங்களிடம் சற்றே மாற்றி மாற்றிக் கூறியதன் மூலம் ஆச்சாரியா அடல் தனது தளத்தை அவர்களிடம் உருவாக்கிக் கொண்டார். முதல் மூன்று மாதங்களுக்கு ‘பெரும்பாலும் மதரீதியிலான செய்திகளையும், பின்னர் கொஞ்சம் அரசியல் சாயம் கொண்ட எதிர்க்கட்சித் தலைவர்களான ராகுல் காந்தி, மாயாவதி, அகிலேஷ் யாதவ் போன்றோரைப் பற்றி மிக மோசமான வகையில் சொல்கிற மாதிரியான நிகழ்ச்சிகளையும், அதற்குப் பின்னர் ஹிந்துக்கள், முஸ்லீம்களை எதிரெதிர் முனைகளுக்குத் தள்ளுகின்ற நிகழ்ச்சிகளையும் வெளியிட தான் சார்ந்திருக்கும் அமைப்பு விரும்புவதாகவும் அவர் அப்போது தெரிவித்தார்.

2017ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட உலகப் பத்திரிகைகளுக்கான சுதந்திரக் குறியீட்டில் இந்தியா பெற்றிருந்த  தரவரிசை எண்ணைக் கொண்டே ‘ஆபரேஷன் 136’ என்ற பெயர் இந்த நடவடிக்கைக்கு இடப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியுடன் நெருக்கமானவராக இருக்கின்ற ரஜத் ஷர்மாவுக்குச் சொந்தமான இந்தியா டிவி உடன் கோப்ராபோஸ்ட்.காம் நிறுவனத்தின் அந்த ரகசியப் பத்திரிகையாளர் தொடர்பு கொண்ட போது படம் பிடிக்கப்பட்டவையே இந்த ‘ஆபரேஷன் 136’ நடவடிக்கையின் முதல் பகுதியாக இப்போது வெளியிடப்பட்டுள்ளன. இந்தியாவின் மிகப்பெரிய ஹிந்தி பத்திரிகை டெய்னிக் ஜக்ரான். உத்தரப் பிரதேச உள்ளூர் தொலைக்காட்சி சேனலான ஹிந்தி கபார், பொழுதுபோக்கு மற்றும் செய்தித் தொலைக்காட்சி நிறுவனமாக இருக்கின்ற SAB குழுமம், ஜீ மற்றும் டெய்னிக் பாஸ்கர் செய்தி நிறுவனத்தால் நடத்தப்படுகின்ற டிஎன்ஏ (டெய்லி நியூஸ் அண்ட் அனாலிசிஸ்) பத்திரிகை, அமர் உஜாலா,   செய்தி நிறுவனமான யூஎன்ஐ, பொழுதுபோக்கு சேனலான 9X தஷான், உத்தரப்பிரதேச செய்தி சேனலான சமாச்சார் பிளஸ், உத்தரகாண்ட் சேனலான ஹெச்என்என் 24×7, ஹிந்தி செய்தித் தாள்களான பஞ்சாப் கேசரி, ஸ்வந்தர பாரத், ஸ்கூப்வூப், ரீடிப்.காம், இந்தியா வாட்ச் போன்ற இணையதளங்கள், ஹிந்திச் செய்தித்தாளான ஆஜ் மற்றும் லக்னோவில் இருந்து செயல்படுகின்ற செல்வாக்குமிக்க செய்தி சேனலான சாதனா பிரைம் நியூஸ் ஆகியவற்றோடும் அவர் நெருக்கமானவர்.

மேற்குறிப்பிட்டவை அனைத்தும் மிகப்பெரிய வட இந்தியச் செய்தித்தாள்களையும் தொலைக்காட்சி சேனல்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. படம் பிடிக்கப்பட்டவர்களில் சிலர் ஊடகத் துறையில் பெரும்புள்ளிகளாக இருப்பவர்கள். டைம்ஸ் ஆப் இந்தியா குழுவில் உயர் நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றி இப்போது 9X தஷானில் இருக்கின்ற பிரதீப் குஹாவும் இதில் அடங்குவார்.

இந்த நிறுவனங்களின் ஊடக நிர்வாகிகளுடன் தன்னுடைய ரகசிய செய்தியாளர் மேற்கொண்ட உரையாடல்களின் வீடியோ பதிவுகளிலிருந்து சில பகுதிகளை கோப்ராபோஸ்ட்.காம் திங்கள்கிழமையன்று தனது இணையதளத்தில் பதிவேற்றியிருந்தது.

ஒவ்வொரு ஊடகத்திற்கும் அவர்களிடம் இருந்த ஆர்வத்தின் அளவு வேறுபடுவதாக இருந்தாலும், ஆச்சார்யா அடலைப் பொறுத்த வரை அவர்களுடைய எதிர்வினை ஒரே மாதிரியாகவே இருந்தது. இந்த ஊடக நிறுவனங்களின் வணிகப் பிரதிநிதிகள் எவரும் வரவிருக்கின்ற தேர்தலில் வாக்காளர்களைப் பிரித்து துருவப்படுத்துவது, எதிர்க்கட்சித் தலைவர்களின் நற்பெயரைக் கெடுப்பது, விளம்பரம் மற்றும் செய்திகள் ஆகியவற்றிற்கு இடையே உள்ள எல்லைகளைக் களைவது என்று தன்னுடைய வாடிக்கையாளர் தங்களுடைய தளத்தைப் பயன்படுத்த விரும்புவதை ஒரு பிரச்சனையாகவே கருதவில்லை.

கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா விவாதத்தின் பின்னணியில், “ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி இந்தியத் தேர்தல் நடைமுறைகள் மீது தவறான தாக்கத்தை ஏற்படுத்துகின்ற வகையில் செய்யப்படும் விரும்பத்தகாத எந்தவொரு ரகசிய அல்லது வெளிப்படையான முயற்சிகளும் பொறுத்துக் கொள்ளப்படாது. அது மட்டுமல்லாது அவற்றை அனுமதிக்கவும் முடியாது” என்று மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் செய்த ட்வீட்டிற்கு நேரடியான சவாலை விடுவதாகவே பணம் பெற்றுக் கொண்டு தேர்தல் தொடர்பான அரசியல் பிரச்சாரத்தைச் செயல்படுத்துவதற்காக அவர்களிடம் இருந்த அந்த விருப்பம் இருக்கிறது.

“சுதந்திர இந்தியா மட்டுமல்லாது உலக வரலாற்றிலேயே முதன்முறையாக இந்திய ஊடக நிறுவனங்கள், தங்களுடைய விரும்பத்தகாத வழிமுறைகளால் இந்தியாவின் தேர்தல் செயல்முறைகளைப் பாதிக்கின்ற வகையில் இயங்குகின்றன என்பதை ஆபரேஷன் 136 உறுதிப்படுத்தியிருக்கிறது” என்று கோப்ராபோஸ்ட்.காம் தன்னுடைய சமீபத்திய நடவடிக்கைக்கான நியாயத்தை விளக்கும் வகையில் வெளியிட்ட பத்திரிகைச் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

ஜிஎஸ்டியைத் தவிர்ப்பதற்காக இந்தப் பரிவர்த்தனையைக் கணக்கில் ஏற்றாமல் இருப்பதற்காக, ரொக்கமாகப் பணத்தைப் பெற்றுக் கொள்ளும் விருப்பத்தையும் சில செய்தி ஊடக நிறுவனங்கள் வெளிப்படுத்தி இருந்தன என்பது மேலும் சுவாரசியம் ஊட்டுவதாக இருக்கிறது.

எல்லாவிதமான வேலைகளையும் நாங்கள் உங்களுக்காகச் செய்வோம்:

தன்னுடைய நாட்டில் தங்களுக்குச் சாதகமான முடிவுகளைக் கொண்டு வருவதற்கு உதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையோடு அந்த ஏஜென்சியை இலங்கை வணிகராகத் தன்னை அடையாளம் காட்டிக் கொண்டு அணுகிய பத்திரிகையாளர் ஒருவரிடம் அந்த நிர்வாகிகள் அளித்த மோசமான வாக்குறுதிகளை அளித்ததாக கேம்பிரிட்ஜ் அனலிட்டிக்கா குறித்து அண்மையில் சேனல் 4இல் வெளியான செய்தியில் கூறப்பட்டிருந்தது. இப்போது படம் பிடிக்கப்பட்ட ஊடக நிர்வாகிகளில் ஒருவரும் அதே போன்ற வாக்குறுதிகளை வழங்கியிருந்தார். டெய்னிக் ஜாக்ரனின் பீகார்-ஜார்கண்ட்-ஒடிசா பகுதி மேலாளராக இருப்பவர் அந்த ரகசிய நிருபருக்கு வழக்கத்திற்கு மாறாக பாலியல் தொழிலாளர்கள் உட்பட சில சேவைகளை வழங்குவதற்குத் தயாராக இருந்தார் என்று கோப்ராபோஸ்ட்.காம் தெரிவிக்கிறது.

“தங்களுடைய செய்தித்தாளில் அரசிற்கு எதிராக எந்தவொரு செய்தியையும் வெளியிடுவதற்காக எதனையும் பெற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதாக கூறும் சிங், தன்னுடைய இருண்ட பக்கங்களை அதற்குப் பிறகு வெளிப்படுத்துகிறார். அடுத்ததாக அவர் தன்னுடைய திறமைகளைப் பற்றிக் கூறும் போது ”தனிப்பட்ட முறையில் நான் உங்களுக்கு எவ்வாறெல்லாம் உதவ முடியும் என்பதை நான் அவசியம் உங்களிடம் சொல்கிறேன். ஆண்கள், பெண்கள் என்று பல வகைகளில் எனக்கென்று ஒரு பரந்த அளவிலான நட்பு வட்டாரம் இருக்கிறது. அவர்களால் எந்தவொரு வேலையையும் நிறைவேற்றித் தர முடியும்… நீங்கள் அவர்களை ஒருவருடன் படுத்து உங்களுக்கான தரவுகளைத் திருடி வரச் சொன்னால், அவர்கள் அதையும் அவ்வாறே செய்து முடிப்பார்கள்” என்று சொன்ன போது அது அதிர்ச்சியளிப்பதாக இருந்தது.

2016இல் இந்த ரகசியப் பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டார்:

வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, அப்போதைய பாஜக தலைவராக இருந்த பங்காரு லக்ஷ்மணுக்கும், மற்றவர்களுக்கும் எதிராக தெகல்காவின் சார்பில் நடத்தப்பட்ட நடவடிக்கைக்குப் பின்னர் பிரபலம் அடைந்திருந்த புலனாய்வு பத்திரிகையாளரான அனிருத்தா பாஹலின் முயற்சியிலேயே கோப்ராபோஸ்ட் துவங்கப்பட்டது.

​​2015ஆம் ஆண்டில் யோகா பயிற்றுனர்களாக வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு கொள்கை அடிப்படையில் முஸ்லீம்கள் கருத்தில் கொள்ளப்படவில்லை என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஆயுஷ் அமைச்சகத்திடமிருந்து பெற்ற பதிலை 2016ஆம் ஆண்டு மில்லி கெஜெட் பத்திரிகையில் வெளியிட்ட போது,  புஷ்ப் சர்மா என்ற புலனாய்வுப் பத்திரிகையாளர் பிரபலமடைந்தார். இந்த செய்தி வெளியாகி சர்ச்சையான போது, தாங்கள் அந்தப் பதிலை அனுப்பவில்லை என்றும், அதனைப் பொய்யாக எழுதி சர்மாவே வெளியிட்டதாகவும்  அமைச்சகம் கூறியது. சர்மா மீது புகார் அளித்து முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட சர்மா பின்னர் பிணையில் வெளிவந்தார். அந்த வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.  தன்னுடைய கணினியைப் பயன்படுத்தி ஆயுஷ் அமைச்சக ஆவணங்கள் போலியாகத் தயாரிக்கப்பட்டன என்ற அரசாங்கத்தின் கூற்று, தனது கணினியில் நடத்தப்பட்ட அதிகாரப்பூர்வத் தடயவியல் ஆய்வுகள் மூலமாகத் தவறு என்று நிரூபிக்கப்பட்டதாக சர்மா கூறுகிறார். .

சூழ்நிலைக்கேற்ற அடையாளங்களை இந்த ‘ஆபரேஷன் 136’க்காக சர்மா உருவாக்கிக் கொண்டார் என்று  கோப்ராபோஸ்ட்.காம் தெரிவித்துள்ளது. உஜ்ஜைனில் உள்ள ஆசிரமம் ஒன்றுடன் தனக்கிருக்கும் தொடர்புகளை சர்மா பயன்படுத்திக் கொண்டார். ராஜஸ்தானில் உள்ள ஜுஞ்ஜுனுவில் பள்ளிக்கல்வி கற்றதாகவும், பின்னர் தில்லி ஐஐடி மற்றும் பெங்களூரு ஐஐஎம் ஆகியவற்றில் படித்து விட்டு ஆஸ்திரேலியாவில் குடியேறியதாகவும், ஸ்காட்லாந்தில் இருந்து தன்னுடைய இ-விளையாட்டு நிறுவனத்தை நடத்தி வருவதாகவும் கூறி, தன்னைப் பற்றி நம்பகமானதாக தோற்றத்தை அவர் ஊடக நிறுவனங்களிடம் ஏற்படுத்திக் கொண்டார்.

அதீதமான முன்மொழிவுகளுக்கு முன்பாக மண்டியிட்ட ஊடகங்கள்

“நாங்கள் அளித்த உறுதிமொழிகள் மிக அதீதமானவையாக இருந்தன. நான் உங்களுக்குக் கை நிறைய வெகுமதிகளைத் தந்தால், நீங்கள் ஆன்மீகம் என்ற போர்வையில் ஹிந்துத்துவாவைப் பரப்பி, வாக்காளர்களைப் பிரித்து துருவப்படுத்தி, அதிகாரத்தில் இருக்கின்ற கட்சி வரவிருக்கும் தேர்தலிலும் தனக்கான பங்கீடுகளை மீண்டும் அறுவடை செய்து கொள்வதற்கு அனுமதிப்பீர்களா?” என்று கேட்டதாக கோப்ராபோஸ்ட்.காம் ஆசிரியர் அனிருத்தா பாஹல் கூறினார். ”எங்களுடைய முன்மொழிவுகளை வெளிப்படையாக நிராகரிப்பதற்குப் பதிலாக, பெரும்பான்மையான ஊடகங்கள் பணத்திற்காக அதைச் செய்வதற்காக தங்களை இழக்கத் தயாராகினர். நாங்கள் கேட்டதைச் செய்வதற்கு ஒப்புக் கொண்டது மட்டுமல்லாமல், அவர்களுடைய இந்த வருங்கால பெரிய வாடிக்கையாளருக்காக நன்கு திட்டமிடப்பட்ட, வெளிப்படையான வகுப்புவாத ஊடகப் பிரச்சாரத்தை மேற்கொள்வதற்கான எண்ணற்ற வழிகளையும் அவர்கள் பரிந்துரைத்தது எங்களை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியது” என்று பாஹல் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கையை சர்மா எவ்வாறு திட்டமிட்டிருந்தார் என்று கோப்ராபோஸ்ட்.காம் கூறுகையில், ஏறத்தாழ இருபதுக்கும் மேற்பட்ட ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்கள் அல்லது அதிகாரிகளை சர்மா சந்தித்தார். தங்களுடைய ஊடகப் பிரச்சாரத்திற்கு அவர்களுடைய தளத்தை வழங்க ஒப்புக்கொண்டால் ரூ 6 கோடி முதல் ரூ 50 கோடி வரை அவர்களுக்குத் தருவதாக சர்மா அப்போது உறுதியளித்தார்.

தனித்துவம் வாய்ந்த மதம் சார்ந்த நிகழ்ச்சிகளின் ஊடாக முதல் மூன்று மாதங்களுக்கு மென்மையான ஹிந்துத்துவாவிற்கான சூழ்நிலையை உருவாக்குவது, பின்னர் வினய் கட்டியார், உமா பாரதி, மோகன் பகவத் போன்ற ஹிந்துத்துவவாதிகளின் உரையாடல்களை ஒளிபரப்புவதன் மூலம் வகுப்புவாத அடிப்படையில் வாக்காளர்களை அணிதிரட்டுவது; அதற்குப் பின்னர், தேர்தல் நெருங்கி வரும் போது ராகுல் காந்தி, மாயாவதி, அகிலேஷ் யாதவ் போன்ற எதிர்க்கட்சித் தலைவர்களை பப்பு, புவா மற்றும் பாப்புவா போன்ற கௌரவக் குறைவான வார்த்தைகளால் குறிப்பிட்டு, வாக்காளர்கள் மத்தியில் அவர்கள் மீது கேவலமான தோற்றம் உருவாகுகின்ற வகையில் அவர்களை இலக்காகக் கொண்டு பிரச்சாரத்தைத் திருப்பி விடுவது போன்றவற்றைத் தன்னுடைய திட்டமாக ஆச்சார்யா அடல் அவர்களிடம் வெளிப்படுத்தினார்.

இந்தியக் குற்றவியல் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளை மீறுவதாக நாங்கள் முன்வைத்த முன்மொழிவுகள்  இருந்த போதிலும், உணர்ச்சியைக் கிளறி விடக் கூடிய அல்லது வகுப்புவாதக் கருத்துக்கள் கொண்ட நிகழ்ச்சிகளை வெளியிடுவது என்பது சிறைத் தண்டனைக்குரிய குற்றவியல் நடவடிக்கை என்று கூறப்பட்டிருக்கும் போதிலும் அந்த ஊடக நிர்வாகிகள் அனைவரும் அவற்றைச் செய்வதற்குத் தயாராகவே இருந்தனர் என்று கோப்ராபோஸ்ட்.காம் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1951 மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், இந்திய தேர்தல் ஆணையத்தால் உருவாக்கப்பட்ட 1961 தேர்தல் நடத்தை விதிகள், 1956 நிறுவனங்கள் சட்டம், 1961 வருமான வரிச் சட்டம், 1986 நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1994 கேபிள் டிவி நெட்வொர்க் விதிகள் ஆகியவற்றுடன் இந்திய பத்திரிகை கவுன்சிலின் பத்திரிகை தொடர்பான  நடத்தை குறித்த வழிகாட்டுதல்கள் ஆகிய அனைத்தையும் மீறியதாகவே பணத்தை வாங்கிக் கொண்டு செய்திகளை வெளியிடுகிறோம் என்று சொன்ன அந்த ஊடக நிறுவனங்கள், அவற்றின் முதலாளிகளின் செயல்பாடுகள் இருக்கின்றன.

கஸ்கஞ்சில் என்ன நடந்தது:

உண்மைகளைத் திசைதிருப்புவது அல்லது முழுமையான வதந்திகளைத் தருவது என்ற இந்திய ஊடகங்களின் மனநிலைக்கு இன்னுமொரு உதாரணமாக சமீபத்தில் உத்தரபிரதேசத்தில் கஸ்கஞ்ச் நகரத்தில் நடைபெற்ற வகுப்பு கலவரம் இருப்பதாக இந்தப் புலனாய்வில் வெளிப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ள கோப்ராபோஸ்ட்.காம் நான்காவது தூண் என்றழைக்கப்படும் பத்திரிகைத் துறையைப் பீடித்திருக்கும் பிணியின் அறிகுறிகளைக் காட்டுவதாகவே எங்களுடைய புலனாய்வுகள் இருந்தன. மேலும் இந்திய ஊடகங்கள் முழுமையாக விற்பனைக்கு இருப்பதையும் காட்டுவதாக அவை இருக்கின்றன என்றும் அது தெரிவித்திருந்தது.

அந்த ஊடக நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்குவதற்கு தயாராக இருந்ததைக் காட்டியதாகவே அவர்களிடம் இருந்து வந்த பதில்கள் இருந்தன என்று அவர்களுடைய இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • ஆன்மீக மற்றும் மத சொற்பொழிவுகள் என்ற போர்வையில் ஹிந்துத்துவத்தை ஊக்குவிப்பதற்கு அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
  • வகுப்புவாத வழியில் வாக்காளர்களைப் பிரித்து துருவமயப்படுத்துவதற்கான சாத்தியக்கூறு கொண்ட விஷயங்களை வெளியிடுவதற்கு அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
  • அதிகாரத்தில் உள்ள கட்சியின் அரசியல் எதிரிகளை விரக்தியடையச் செய்யும் வகையில், அவர்களைப் பற்றிய அவதூறான விஷயங்களை வெளியிடுவதற்கு அவர்கள் உடன்பட்டனர்.
  • அவர்களில் பலரும் ரொக்கப் பணத்தை ஏற்கத் தயாராக இருந்தனர். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், அவர்களுடைய வேலைக்காக கருப்பு பணத்தை ஏற்க அவர்கள் தயாராக இருந்தனர்.

ஹிந்துத்துவாவிற்கு ஆதரவான ஊடக மீறல்கள்’:

சில ஊடக நிறுவனங்களின் முதலாளிகள் அல்லது முக்கியமான பணியாளர்கள் தாங்கள் ஆர்எஸ்எஸ்சுடன் தொடர்பு கொண்டவர்கள் என்றோ அல்லது ஹிந்துத்துவா சார்பு உடையவர்கள் என்றோ கூறி விட்டு, இந்தப் பிரச்சாரத்தில் பணியாற்றுவதில் தாங்கள் மகிழ்ச்சி அடைவதாக அந்த ரகசிய நிருபரிடம் தெரிவித்தனர். சேனல் அல்லது செய்தித்தாளை சட்டபூர்வமான நடவடிக்கைகளில் இருந்து சங்காதன் காப்பாற்றுமா என்று சிலர் சட்டபூர்வமான கேள்விகளை எழுப்பவும் செய்தனர். ஆனால் அந்த நிர்வாகிகள் அனைவரும் இந்த வகையான பிரச்சாரம் பத்திரிகைகளின் நேர்மைக்கு களங்கம் விளைவிப்பதாக இருக்கும் என்பது குறித்து தவறான கருத்துக்களைக் கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது.

அதிகாரத்தில் உள்ள கட்சிக்கு ஆதரவான கதைகளைத் தயாரிப்பதற்கு சில ஊடகங்கள் ஒப்புக்கொண்டன. இந்த நோக்கத்திற்காகவென்று விளம்பரரீதியிலான செய்திகளை உருவாக்கவும் அவர்களில் பலரும் உடன்பட்டனர். அச்சு, எலக்ட்ரானிக், டிஜிட்டல் முறைகளில் மின் செய்தி இணையதளம், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்கள் என்று பல வடிவங்களில் இந்தப் பிரச்சாரத்தை தங்களுடைய தளங்களில் நடத்துவதற்கு கிட்டத்தட்ட அனைவருமே உடன்பட்டனர்.

தங்கள் சொந்த நிறுவனங்களில் உள்ள பத்திரிகையாளர்களைத் தவிர்த்து மற்ற பத்திரிகையாளர்களையும் இணைத்துக் கொண்டு அதிகாரத்தில் உள்ள கட்சியை ஆதரிப்பதற்கான “முழுமையான ஊடக மேலாண்மை” செய்வதற்கும் அவர்களில் சிலர் முன்வந்தனர்.

அண்மையில் நடைபெற்ற தேர்தல்களில் பாஜகவைத் தோற்கடிப்பதற்கான வேலைகளைச் செய்வதற்காக தங்களுடைய லாபியைப் பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் சங்காதனிடம் இருப்பதாக ஆச்சாரிய அடல் கூறிய போது, மத்திய அமைச்சர்கள் மனோஜ் சின்ஹா, ஜெயந்த் சின்ஹா, மேனகா காந்தி மற்றும் அவரது மகன் வருண் காந்தி ஆகியோரை வீழ்த்துவதற்கான ஒப்புதலையும் அந்த ஊடக நிறுவனங்கள் அளித்தன.

இதேபோல் பாஜக கூட்டணித் தலைவர்களான அனுப்ரியா பட்டேல், ஓம் பிரகாஷ் ராஜ்பர், உபேந்திர குஷ்வாஹா போன்றோருக்கு எதிரான கதைகளை உருவாக்கவும் சில ஊடக நிறுவனங்கள் ஒப்புக்கொண்டன.

பிரசாந்த் பூஷண், துஷ்யந்த் தவே, காமினி ஜெய்ஸ்வால், இந்திரா ஜெய்சிங் போன்று அரசாங்கத்தின் மீது  விமர்சனங்களை வைக்கின்ற தாராளவாதிகளைத் தாக்க வேண்டும், போராடுகின்ற விவசாயிகளை மாவோயிஸ்டுகள் என்பதாகச் சொல்ல வேண்டும் என்ற சங்கேதனின் கோரிக்கையை அவர்களால் நிறைவேற்ற முடியுமா என்று சில சந்திப்புகளில் ஆச்சார்யா அடல் தன்னுடைய உரையாடலை மாற்றிக் கொண்டு கேட்ட போது, அவர் பெற்ற பதில் எப்போதுமே ‘ஆம்’ என்பதாகவே இருந்ததாக கோப்ராபோஸ்ட் தெரிவித்துள்ளது.

பெரிய பட்ஜெட் பெரிய தூண்டுதலாக இருந்தது:

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை “பப்பு” என்று சித்தரிப்பதாக உள்ள பாடல்கள் இரண்டை அவர்களிடம் ஆச்சாரிய அடல் அளித்தார். அந்தப் பாடல்கள் ஊறு விளைவிக்காதவை போல் தோன்றினாலும், அவை அந்த அரசியல் தலைவரைத் தரக்குறைவாக தங்களுக்குத் தலைமையேற்பதற்கு தகுதியற்றவராக  வாக்காளர்களுக்கு காட்டுகின்ற வகையில் இருந்ததாக கோப்ராபோஸ்ட்.காம் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கர்நாடகத் தேர்தலுக்கு மட்டும் 742 கோடி ரூபாய் சங்காதன் ஒதுக்க்கியுள்ளது என்றும் கடந்த தேர்தலின் போது 8000 கோடி ரூபாய் செலவழித்ததாகவும், 2019 தேர்தலுக்கென்று அதைவிட அதிகமான தொகை ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களுக்கு 6 கோடியில் இருந்து 50 கோடி வரை தருவதற்குத் தான் தயாராக இருப்பதாகவும் சர்மா சொன்னதை நம்பியே அந்த ஊடக நிறுவனங்கள் இந்த ஏற்பாட்டிற்கு ஒத்துக் கொண்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தி வயர் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், நாட்டின் மிகப்பெரிய பத்திரிகைகள் உட்பட, மற்ற ஊடகங்களின் வீடியோ பதிவுகளைத் தயாரிப்பதில் தனது குழு செயல்பட்டு வருவதாகவும், அது தன்னுடைய புலனாய்வின் இரண்டாவது பகுதியை விரைவிலேயே வெளியிடப் போவதாகவும் பஹால் தெரிவித்தார். அவர்கள் அணுகிய எந்தவொரு ஊடக நிறுவனமாவது இந்த முன்மொழிவுகளை மாற்றியமைத்ததா அல்லது அறவே ஒதுக்கித் தள்ளியதா என்று கேட்டதற்கு “கொள்கை ரீதியாக சில செய்தி ஊடக நிறுவனங்கள், அவற்றின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகள் எங்களுடைய முன்மொழிவுகளை ஏற்க மறுப்பார்கள் என்றே நாங்கள் மிகவும் ஆர்வத்துடன் இருந்தோம். துரதிருஷ்டவசமாக, அவ்வாறு யாரும் இருக்கவில்லை. நாங்கள் அணுகிய அனைத்து சேனல்களும், பத்திரிகைகளும் இந்த பிளவுபடுத்தும் நிகழ்ச்சியின் நோக்கம் பற்றி முழுமையாக உணர்ந்திருந்தாலும் அவர்கள் இந்த ஒப்பந்தத்தில் நுழைவதற்கே விருப்பம் காட்டினார்கள்” என்று பஹால் பதிலளித்தார்.

கோப்ராபோஸ்டின் இந்த செய்திக்கு ஆரம்ப எதிர்விளைவாக, சில ஊடக நிறுவனங்கள் தாங்கள் தவறான எதையும் செய்யவில்லை என்று மறுத்து வருகின்றன. “வீடியோவின் நம்பகத்தன்மை குறித்து எனக்கு நம்பிக்கை இல்லை” என்று ஜக்ரான் குழுமத்தின் தலைவரான சஞ்சய் குப்தா இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையிடம் தெரிவித்தார். அந்த வீடியோவில் சிக்கியுள்ள தங்களுடைய நிறுவனத்தின் நிர்வாகி தன்னுடைய “எல்லைகளைத் தாண்டிய வழியில்” சென்றிருக்கிறார். “அத்தகைய செயலைச் செய்ய” அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை, மற்றும் அந்த வீடியோ பதிவானது நம்பகமானது என்று நிரூபிக்கப்பட்டால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சஞ்சய் குப்தா கூறினார்.

இந்தியா டி.வி.யின் விற்பனைப் பிரிவின் துணைத் தலைவரான சுதிப்தோ சௌத்ரி, இந்த வீடியோ நம்பத்தக்கது அல்ல என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையிடம் கூறினார். கோப்ராபோஸ்ட் நிருபரால் “விவாதிக்கப்பட்ட அல்லது முன்வைக்கப்பட்ட அனைத்து முன்மொழிவுகளும்” உண்மையில் இந்தியா டி.வி.யின் ஆசிரியர் குழுவாலும், சட்டக் குழுவாலும் முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டன என்பதை அவர் வலியுறுத்திக் கூறினார்.

நன்றி:-தி வயர் இணைய இதழ்: 

 https://thewire.in/media/large-media-houses-seen-striking-deals-for-paid-news-to-promote-hindutva-agenda

தமிழில் : முனைவர் தா.சந்திரகுரு – விருதுநகர்

Leave a Reply

You must be logged in to post a comment.