கோவை,
மனித மலத்தை மனிதன் அள்ளும் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைத்திட கேரள மாநில அரசைப்போல் கழிவுகளை அகற்ற ரோபோக்களை பயன்படுத்த வலியுறுத்தி கோவையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மலக்குழி மரணத்தை தடுத்திட வேண்டும். கேரள இடது முன்னணி அரசைப் போல் கழிவுகளை அகற்ற ரோபோக்களை பயன்படுத்த தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். பாதாளச் சாக்கடை மரணங்களை கொலை வழக்காக பதிவு செய்திட வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டக்குழுக்கள் சார்பில் செவ்வாயன்று கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னணியின் மாநில துணை பொதுச்செயலாளர் யு.கே.சிவஞானம் தலைமை தாங்கினார். பெரம்பூர் சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணை பொதுச் செயலாளருமான எஸ்.கே.மகேந்திரன் சிறப்புரையாற்றினார். ஆதித்தமிழர் கட்சியின் மாநில தலைவர் வழக்கறிஞர் சி.வெண்மணி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஈரோடு மாவட்ட தலைவர் அண்ணாதுரை, செயலாளர் பி.பழனிச்சாமி, திருப்பூர் மாவட்டசெயலாளர் ஆர்.குமார், ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் கே.ரத்தினகுமார் ஆகியோர் ஆர்ப்பாட்ட நோக்கங்கள் குறித்து உரையாற்றினர். முடிவில் முன்னணியின் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ஆறுச்சாமி நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: