தேர்தல் என்பது ஜனநாயக நடைமுறை. அதில் பங்கேற்க விரும்பும் அனைவருக்கும் வாய்ப்பளிப்பதே மக்களாட்சியின் மாண்பு. ஆனால் ஆட்சியாளர்கள் அந்த வாய்ப்பை தாங்கள் மட்டுமே பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைப்பதால் மற்றவர்களுக்கு வழங்க மறுக்கிறார்கள். கூட்டுறவு சங்கங்களின் இயக்குநர் பதவிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்வதற்காகச் சென்றவர்களுக்கு மாநிலத்தின் பல இடங்களில் வேட்புமனு படிவங்கள் தர மறுக்கப்பட்டிருக்கிறது. பல இடங்களில் கூட்டுறவு சங்க அலுவலகங்களுக்குள் நுழையவே விடாமல் ஆளும் கட்சியினர் தடுத்துள்ளனர். அதை எதிர்த்து சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடந்துள்ளன.அதிமுகவினரின் அராஜக அத்துமீறல் பற்றி புகார் தெரிவித்தால் காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் அவர்களுக்கு ஆதரவாகவே நடந்துகொண்டுள்ளது.

ஆளும் கட்சியினருக்கு மட்டுமே வேட்புமனுவை வழங்கி மற்றவர்களுக்கு தராமல் மறுத்துவிட்டு வேறு யாரும் மனுச் செய்யாததால் அதிமுகவினர் வெற்றி பெற்றதாக வெடி வெடித்துக் கொண்டாடியுள்ளனர். வேட்பு மனுக்களை பெற்றுக் கொண்டாலும் கூட பல இடங்களில் அதிகாரிகள் ஒப்புதல் சீட்டு வழங்காமல் இருந்துள்ளனர்; வற்புறுத்திக் கேட்டும் தர மறுத்துள்ளனர். அதனால் தேனியில் அதிமுக ஆதரவாளர் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவமும் நடந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் அழகியபாண்டியபுரம் உள்ளூர் மீனவர் கூட்டுறவு சங்கத்தில் வேட்புமனுத்தாக்கல் செய்யவிடாமல் சிஐடியு சங்கத்தினரை ஆளும் கட்சியினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். திருச்சி மாவட்டம் தொட்டியம், தாத்தையங்கார் பேட்டை பகுதியிலும் நாகை மாவட்டம் குத்தாலம் பகுதியிலும்வேட்புமனுக்கள் வாங்க மறுக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் உடையாளூரில் வேட்புமனு வாங்க அதிகாரிகள் வரவேயில்லை என்று கூறப்படுகிறது.பல இடங்களில் மனுத்தாக்கலின் போது ஆளும் கட்சியினர் இடையூறு செய்ததாலும் தடுத்து நிறுத்தியதாலும் வாக்குவாதம், மோதல்,மறியல் போன்றவை நடந்துள்ளன. ஜனநாயகவிரோதமாக கூட்டுறவு சங்கங்களை ஆளும் கட்சியினர் கைப்பற்றுவதற்கான இத்தகைய அராஜக நடவடிக்கைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வன்மையாகக் கண்டித்துள்ளன.

விவசாயிகள், தொழிலாளர்கள், மீனவர்கள், பால் உற்பத்தியாளர்கள், தையல், நெசவு தொழிலாளர்கள், ஊழியர்கள் உள்ளிட்டவர்களின் நலனுக்காக அமைக்கப்பட்ட கூட்டுறவு சேவை சங்கங்களை அதன் உறுப்பினர்களின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் பயன்படுத்திட விடாமல் ஆளும் கட்சியினர் தங்களை வளப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பாகக் கருதியே அதிகார வெறிகொண்டு இத்தகைய ஜனநாயக விரோதச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். இது தடுக்கப்பட்டாக வேண்டும்.எனவே அனைத்துத் தரப்பினரிடமும் மனுக்களை பெற்று ஜனநாயக ரீதியில் தேர்தல் நடத்திடகூட்டுறவு சங்க தேர்தல் ஆணையரும் தமிழகஅரசும் தகுந்த நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும். அப்போது தான் கூட்டுறவே நாட்டுயர்வு என்னும் நோக்கம் நிறைவேறும்.

Leave A Reply

%d bloggers like this: