திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே ரெட்டியார்சத்திரத்தில் பொதுமக்களின் குடியிருப்பு பாதிக்காமல் சாலை அமைக்க வேண்டும் என்று கோரி கிராம மக்களுடன் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியினர் கே.பாலபாரதி தலைமையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் முதல் லெக்கையன் கோட்டை வரையிலான 23 கி.மீ தூர சாலையை நான்குவழி தேசிய நெடுஞ்சாலையாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் இந்த சாலையில் உள்ள வணிக வளாகங்கள், 7 தலித் குடியிருப்புகள், விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகின்றன. இது தொடர்பாக சில தினங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும், ஆத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பெரியசாமி, திண்டுக்கல் தொகுதி முன்னாள் எம்எல்ஏ கே.பாலபாரதி ஆகியோர் தலைமையில் கோட்டாட்சியர் வேலுவிடம் புகார் மனு கொடுக்கப்பட்டது. பொதுமக்களை இத்திட்டம் பாதிக்காதபடி சாலை அமைக்கப்பட வேண்டும் என்றும், 21 நாட்கள் அவகாசம் தர வேண்டும் என்றும் கோரப்பட்டது. இதற்கு கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் சம்மதம் தெரிவித்தனர்.

அராஜகமாக நில அளவை:
ஆனால் மறுநாளே நாளேடுகளில் ரெட்டியார்சத்திரம் பகுதியில் புறவழிச்சாலை அமைப்பது தொடர்பாக விளம்பரம் வெளியிடப்பட்டது. இதனையடுத்து இப்பகுதி மக்கள் கொதிப்படைந்தனர். அரசு தரப்பு அத்தோடு நில்லாமல் சாலை அமைக்கும் பணிக்காக தோட்டங்களில், விவசாய கிணறுகளில் கல் ஊன்றுவது, அராஜகமாக வீடுகளில் புகுந்து கல் ஊன்றுவது என நடவடிக்கையில் ஈடுபட்டனர். அரசு திட்ட அதிகாரிகள், ஒப்பந்தக் காரர்களின் இந்த நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் கோபத்தை கிளறியது.

நெடுஞ்சாலை முற்றுகை:
இந்நிலையில் செம்மடைப்பட்டி அருகே டோல்கேட் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்றது. வீடு, விவசாய நிலம், வணிக வளாகங்களின் உரிமையாளர்களுக்கு உரிய நோட்டீஸ் கொடுக்காமல் சர்வேசெய்து அளக்கும் நடவடிக்கைக்கு கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்து திண்டுக்கல் தொகுதி முன்னாள் எம்எல்ஏ கே.பாலபாரதி தலைமையில் திண்டுக்கல்- பழனி நெடுஞ்சாலையில் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. இதனையடுத்து ஒப்பந்தக்காரர்களுடன் கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பத்திரிகையாளர்களுடன் தகராறு:
இந்நிலையில் போராட்டத்தை செய்தி சேகரிக்க வந்த செய்தியாளர்களை ஒப்பந்தக்காரர்களின் வெளி மாநில கூலியாட்கள் செல்போனில் படம் எடுத்தனர். இதனால் பத்திரிகையாளர்களுக்கும், ஒப்பந்தக்காரர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

திட்ட அதிகாரியின் அடாவடி:
ஒப்பந்தக்காரர், திட்ட அதிகாரியிடம் செல்போனில் தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கி கூறினார். பின்னர் அவருடன் கே.பாலபாரதி செல்போனில் பேசினார். பேசிக்கொண்டிருக்கும் போது உலகமே விஞ்ஞான யுகத்தில் போயிட்டு இருக்கு நீங்க ஏன் இப்படி தகராறு செய்கிறீர்கள் என்றார்.

இது மெரினா, ஸ்டெர்லைட் யுகம்:
அப்போது பாலபாரதி பேசும்போது, நீங்க எந்த யுகத்தில் இருக்கிறீர்கள். நெடுவாசல், கதிராமங்கலம், ஸ்டெர்லைட், மெரினா என்று மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் அரசின் திட்டங்களுக்கு எதிரியல்ல. பொதுமக்கள் பாதிப்படையாமல் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தான் நாங்கள் கோருகிறோம். கோட்டாட்சியருடன் பேச்சுவார்த்தையில் 21 நாள் அவகாசம் கேட்டிருந்தோம். அடுத்த நாளே ஜனநாயக விரோதமாக ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என்று தான் கேட்கிறோம் என்றார் பாலபாரதி.

நிலம் மட்டும் தான் கையகப்படுத்த சர்வேஎடுக்கிறோம். நீங்கள் ஏன் தடுக்கிறீர்கள் என்றார். அவருக்கு மீண்டும் பதில் அளித்து பாலபாரதி பேசும்போது, மத்திய பாஜக அரசு நிலம் கையகப்படுத்த சட்டம் கொண்டுவந்தது. ஆனால் அந்த சட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிறைவேற்ற அனுமதிக்கவில்லை. நாட்டின் நாடாளுமன்றத்திலேயே மக்களுக்கு மதிப்பளித்து நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை கைவிட்டு உள்ளனர். நீங்கள் ஜனநாயக விரோதமாக நிலத்தை எடுக்க சர்வே செய்தால் எப்படி. இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று பாலபாரதி கூறினார்.

கோட்டாட்சியரை மக்கள் முற்றுகை:
இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறை தனி கோட்டாட்சியர் அங்கு வந்தார். கிராம மக்கள் அவரை சூழ்ந்து கொண்டு முற்றுகையிட்டனர். விவசாயிகள் தங்கள் குறைகளை அவரிடம் கொந்தளிப்புடன் எடுத்துக் கூறினர். பாலபாரதி, அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். கடந்த கூட்டத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்படி எங்களுக்கு 21 நாள் அவகாசம் வேண்டும். அதுவரை சாலை அமைக்கும் பணிகள் எதுவும் நடத்த அனுமதிக்க மாட்டோம்.

திண்டுக்கல்லில் இருந்து செம்மடைப்பட்டிக்கு 15 நிமிடத்தில் செல்ல முடியும். இந்த சாலையில் 6 வழிச்சாலை அமைக்கும் அளவிற்கு சாலை விரிவாக்கம் தேவையில்லை. 4 வழிச்சாலையை யாரும் பாதிக்கப்படாத வகையில் அமைக்க வேண்டும். வணிக வளாகங்கள், 7 தலித் குடியிருப்புகள், விவசாய நிலங்கள் பாதிக்கப்படாத வண்ணம் சாலை அமைக்க வேண்டும். இந்த 21 நாட்களில் விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கான பட்டா, சிட்டா போன்றவற்றை தயார் செய்து எடுக்க வேண்டியுள்ளது. நெடுஞ்சாலை திட்டங்களுக்கு தலைவர், மாநில முதல்வராக உள்ள எடப்பாடி பழனிசாமி தான். நாங்கள் அவரையும் இந்த பிரச்சனை தொடர்பாக சந்தித்து பேச உள்ளோம் என்றார். இதனையடுத்து எந்த பணிகளும் 21 நாட்கள் வரை நடைபெறாது என்று தனிகோட்டாட்சியர் உறுதியளித்தார். இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

நிலமதிப்பீட்டுக் குழுவையும் விட்டு வைக்கவில்லை:
இதனையடுத்து மூலச்சத்திரத்தில் கையகப்படுத்தும் நிலங்களின் மதிப்பீடு தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்து வந்தனர். பாலபாரதி தலைமையில் மக்கள்
அங்கும் சென்று அதிகாரிகள் இந்த பணிசெய்யக்கூடாது என்று கேட்டுக் கொண்டார். பிறகு அந்த பணிகளும் நிறுத்தப்பட்டது. இந்த போராட்டத்தின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் சக்திவேல். மாவட்டக்குழு உறுப்பினர் பி.ஏ.கருப்பணன் மற்றும் தயாளன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஆட்சியர் வினய் பேச்சுவார்த்தை:
கிராம மக்களின் போராட்டத்தையடுத்து பிற்பகல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் வினய் தலைமையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் பாலபாரதி, சிபிஎம் மாவட்டச் செயலாளர் சச்சிதானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் 21 நாட்கள் அவகாசம் வேண்டும் என்றும், பொதுமக்கள் பாதிக்காத வண்ணம் சாலை அமைக்க வேண்டும் என்றும்கோரப்பட்டது.

(ந.நி)

Leave A Reply

%d bloggers like this: