====எம்.கண்ணன், என்.ராஜேந்திரன்====
ஃபேஸ்புக் – கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா தகவல் திருட்டைக் கண்டுபிடித்ததன் மூலமாக சமூக வலைத்தளங்களின் உண்மையான நோக்கம் என்ன என்பதைப் பற்றி கடந்த சில நாட்களாக விவாதங்கள் உலக அளவில் நடந்துவருகின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ்அப், டிவிட்டர், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட் என்று பல்கிப் பெருகியிருக்கும் சமூக வலைத்தளங்களின் முக்கியமான வருமானமே நாம் தரும் தகவல்கள்தான். தகவல்கள் எப்படி வருமானமாகின்றன என்பது பற்றி முன்பே வாசகர்களுக்கு எச்சரிக்கை செய்யும் கட்டுரைகளை கணினிக்கதிரில் அவ்வப்போது வெளியிட்டிருக்கிறோம். அந்த வகையில் ஃபேஸ்புக் நிறுவனத்தின் தகவல் திருட்டு எந்த அளவிற்கு அபாயகரமானது, அது நமக்குத் தரும் எச்சரிக்கை என்ன என்பதுதான் ஆராயவேண்டியது.

பேஸ்புக்கிற்கு தலைகுனிவு
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றிபெறுவதற்கு கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்ற நிறுவனம் ஃபேஸ்புக்கின் அனுமதியுடன் பயனர் விபரங்களைப் பயன்படுத்திக் கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதற்காக அந்நிறுவனம் “this is your digital life’ என்ற ஆப்பை உருவாக்கி ஃபேஸ்புக்குடன் இணைத்து தகவல்களை திரட்டியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இப்படி ஒன்று நடக்குமா? என்று பலரும் அதிர்ச்சியடையச் செய்யும் வகையில் சமூக வலைத்தளங்களில் முதலிடத்தில் இருக்கும் ஃபேஸ்புக் தளமே தகவல் திருட்டிற்கு துணைபோய் அம்பலப்பட்டு நிற்கிறது. அதன் அதிபர் மார்க் ஸக்கர் பெர்க் காலில் விழாத குறையாக மன்றாடி மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால், அவர் கேட்கும் இந்த மன்னிப்பு ஒரு தேர்தலுக்கானது மட்டுமே.

இந்நிறுவனம் அமெரிக்க தேர்தலில் மட்டுமல்ல, உலகின் பல நாடுகளிலும் குறிப்பாக இந்தியத் தேர்தல்களிலும் கைவரிசை காட்டியிருக்கலாம் என்று வரும் தகவல்கள் நம் மக்களிடமும் அதிர்வலைகளை உருவாக்கியிருக்கிறது.

எப்படி நடக்கிறது தகவல் திருட்டு?
நம்முடைய தனிமனித விருப்பு, வெறுப்பு, பயன்பாட்டு தேவை, நட்பு வட்டம் என்று பல வகையான விஷயங்களையும் கணினி மென்பொருள்கள் கண்காணித்துக் கொண்டே இருக்கின்றன. எந்த நாட்டில் எந்த இடத்தில் எது டிரெண்டிங், அது காசு தரும் முதலாளிக்கு லாபமாக இருந்தால் முன்னெடுக்கலாம், எதிராக இருந்தால் அதனை முடக்கும் கருத்துக்களை பரப்புவது, இதற்காக உருவாக்கப்படும் கருத்துக்களை சமூக வலைத்தளப் பயனருக்கு ஏற்ப வழங்குவது இதுதான் அவர்கள் சொல்லும் மேம்படுத்தும் ஆய்வுகள். திணிக்கப்படும் கருத்துகள், பயனருக்கு திணிக்கப்பட்டதாகத் தெரியக்கூடாது என்பதற்காகவும் ஆய்வுக் குழுக்கள் உள்ளன. தேர்ந்த உளவியல் நிபுணர்களைக் கொண்ட தொழில்நுட்பக் குழுக்கள் இப்பணியை மேற்கொள்கின்றன. கோடிக்கணக்கான எண்ணிக்கையில் உள்ளவர்களை தனித்தனியே கண்காணிப்பது இயலுமா? என்ற கேள்வி உங்களுக்கு எழக்கூடும். அது நியாயமே. இதற்காக அவர்கள் பயன்படுத்துவது புள்ளியியல். ஒத்த கருத்து, மாற்றுக் கருத்து, மிதவாதி, நடுநிலைவாதி, தீவிரவாதி என்பது போன்று தனித்தனி பிரிவுகளாக ஒவ்வொருவரின் தகவல்களையும் மென்பொருள்கள் மூலமாகத் திரட்டி, அதனைத் தரம் பிரித்து, அம்மென்பொருள்கள் மூலமாகவே மொத்தமாக பயனரைத் தேர்வு செய்து திணிக்கின்றனர்.

ஒத்த கருத்துடையவர்களை நட்பு வட்டமாக்க வலியுறுத்துவது, எதிர் கருத்துடையவர்களை மாற்றும் வகையில் அவருடைய நட்பு வட்டத்தில் அதற்குத் தகுந்த நபர்களை இணைக்க கோருவது என்பது போன்ற நுட்பமான விஷயங்களை இதற்கென எழுதப்பட்ட மென்நிரல்கள் (Software Codings) எளிதாக இனம் பிரித்து தாமாக செய்துவிடும்.

பயனரை மூளைச் சலவை செய்யும் விதமான கருத்துக்களை உருவாக்கி அதிகமாக பயனரின் கண்ணில் படும்படியாக பகிர்வதும் இதே வகையில்தான். உங்களுக்கு ஒரு மொபைல் வாங்க விருப்பம் என்று பதிவிட்டால், அவர்களுக்கு காசு கொடுத்த நிறுவனத்திற்கு சாதகமான விபரங்கள் உங்கள் டைம்லைனிலும், நீங்கள் பயன்படுத்தும் வேறு இணையதளங்களிலும் கண்ணில் படும்படியாக விளம்பரங்கள் வந்து போகும்படியாக செய்யலாம். முன்னர் வாங்கியவர் உங்கள் நட்பு வட்டத்திற்கு வர விருப்பம் தெரிவிப்பார் அல்லது உங்களுக்கு அவருடைய பரிந்துரைகள் காட்டப்படும். இதுபோன்று வணிக நோக்குடன் பொருட்களை விற்க உருவாக்கப்பட்ட இந்தத் தொழில்நுட்ப வசதிகள் மக்களின் தனிப்பட்ட சுதந்திரத்தை காவு கேட்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கின்றன.

ஃபேஸ்புக்கிலேயே இவ்வளவு செய்ய முடியும் என்றால், இதைவிட நுட்பமான பல தனிமனிதத் தகவல்களின் களஞ்சியமாக மாறியுள்ள வாட்ஸ்அப் மூலம் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை எண்ணும்போது பயத்தை வரவழைக்கிறது. மாதக் கட்டணத்தில் இருந்த வாட்ஸ்அப் இப்போது இலவசமாக கிடைக்கிறது. விளம்பரங்களும் இல்லை. ஆனால் ஆண்டு வருமானம் மட்டும் உயர்ந்து கொண்டே போகிறது எப்படி என்று யாரும் யோசிக்கவில்லை.

நமக்கான பாடம்
நாம் பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள் எளிதாக, விலை குறைவாகவோ, கட்டணமில்லாமல் கிடைக்கிறது என்றால் அதற்கு பின் உள்ள வருமானங்கள் என்ன என்பதை ஆராயவேண்டியது அவசியம். நீங்கள் ஆண்ட்ராய்ட், விண்டோஸ், ஆப்பிள் எந்த வகை போன் வாங்கினாலும் அதில் நீங்கள் பதியும் தகவல்களை அவர்கள் வளர்ச்சிக்கு பயன்படுத்திக்கொள்ள நீங்கள் அனுமதித்த பிறகுதான் பயன்படுத்தவே முடியும். அதுபோலத்தான் நீங்கள் பயன்படுத்தும் ஆப்ஸ்களும், சம்பந்தம் இல்லாமல் கேட்கும் போன் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்களை கண்காணிக்கும் அனுமதி மற்றும் கேலரியை அணுகும் அனுமதி என்று வரம்பின்றி கேட்பதற்கெல்லாம் சரியென்று தலையாட்டி அனுமதிகளை வழங்குவது எந்த நேரத்திலும் நமக்கு ஆப்பு வைக்கும் சாத்தியம் உள்ளவைதான். மக்கள் செல்வாக்கைப் பெற்று பெருநிறுவனமாக உள்ள ஃபேஸ்புக் நிறுவனமே தகவல் திருட்டை செய்கின்றதென்றால், தவறான போலியான ஆப்களைத் தெரியாமல் பயன்படுத்தி தங்கள் தனிப்பட்ட போன் உரையாடல்கள், வங்கி OTP தகவல்கள் உள்ளிட்ட பல விபரங்களை, தங்களையும் அறியாமல் பறி கொடுத்துக்கொண்டிருப்பவர்கள் எத்தனை பேர் என்பது கவலைக்குரியதே. இதுபோன்ற மென்பொருள் நிறுவனங்கள் சட்டத்திலிருந்து தப்பிக்க நீங்கள் எப்போதோ வழங்கிய இந்த பயனர் அனுமதிகள்தான் கேடயமாக இருந்து அவற்றைக் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றன.

தொழில்நுட்பத்தை முறையாகவும் தேவைக்கு ஏற்ப குறைவாகவும் பயன்படுத்துவது மட்டுமே தனிமனிதர்களுக்கு பலனளிக்கக்கூடிய தீர்வாக அமையும். அதை விடுத்து நாள் முழுக்க வரம்பின்றி இண்டெர்நெட் கிடைக்கிறதென்று ஆசைப்பட்டு – இப்போது அதற்கு அடிமையாகி – நாள் முழுக்க இணையத்தின் மூலமாக உங்களை எப்போதும் அணுக முடியும் – கண்காணிக்க முடியும் – என்ற நிலையை உருவாக்கியதற்கு பின்னாலும், நமக்கான தூண்டில் நிச்சயம் உண்டு என்பதை மனதில் கொள்வதற்கு, இது ஒரு அபாய எச்சரிக்கையாகவே நாம் ஏற்க வேண்டும்.

Leave a Reply

You must be logged in to post a comment.