பெங்களூரு:
மிக மோசமான ஊழல் ஆட்சி நடத்தியது யார்? எனும் போட்டி வைத்தால், அதில் எடியூரப்பாதான் முதலிடம் பிடிப்பார் என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா-வே கூறியிருப்பது, பாஜக வட்டாரத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.தென்னிந்தியாவில் கர்நாடகாவில்தான் பாஜக முதன் முதலில் 2008-ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றியது. ஆனால் சட்டவிரோத சுரங்க அனுமதி புகாரில் சிக்கி, அப்போதைய முதல்வர் எடியூரப்பா பதவியை இழந்தார். சிறையிலும் அடைக்கப்பட்டார். பாஜக-வும் அவரை கைவிட்டது.

இதனால், கோபத்தில் பாஜகவை விட்டு வெளியேறி தனிக்கட்சி ஒன்றையும் எடியூரப்பா துவங்கினார். ஆனால், ஊழல் பேர்வழியே ஆனாலும், கர்நாடகத்தில் வேறு ஆளில்லாததால், எடியூரப்பாவை மீண்டும் கட்சியில் பாஜக சேர்த்துக் கொண்டது. தற்போது, மே 12-ஆம் தேதி நடைபெறும் கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக-வின் முதல்வர் வேட்பாளராகவும் ஜபர்தஸ்தாக வலம்வந்து கொண்டிருக்கிறார்.

அவருக்கு வாக்கு சேகரிப்பதற்காக, பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா கர்நாடகத்திலேயே கூடாரம் அமைத்துள்ளார். இந்நிலையில், பெங்களூருவில் செவ்வாய்க்கிழமையன்று செய்தியாளர்களை அமித்ஷா சந்தித்தார். அப்போது, கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் கட்சியை, அமித்ஷா மிகக் கடுமையாக விமர்சித்தார்.அப்போது உணர்ச்சிவசப்பட்ட அவர், “மிக மோசமான ஊழல் அரசுகளுக்கு இடையே போட்டி வைத்தால் எடியூரப்பா அரசுக்குத்தான் முதலிடம் கிடைக்கும்” கூறிவிட்டா. அதனைக் கேட்ட பத்திரிகையாளர்களும், அமித்ஷா உடனிருந்த பாஜக-வினரும் அதிர்ச்சி அடைந்தனர்.
எடியூரப்பாவுக்கு ஆதரவாக வாக்குசேகரிக்கச் சொன்னால், இருக்கும் வாக்குகளையும் குறைப்பதற்கு அமித்ஷா முடிவு செய்துவிட்டாரா? என்று சந்தேகம் அடைந்தனர். எனினும், எடியூரப்பா அரசு அல்ல; சித்தராமையா அரசு என்று அவர்கள் சமாளித்தனர்.

இதனிடையே, அமித்ஷாவின் உள்ளத்தில் இருப்பதுதான் உதடுகள் மூலமாகவும் வெளிப்பட்டுள்ளது என்று கூறி, அமித்ஷாவின் பேச்சு அடங்கிய வீடியோவை சமூகவலைத்தளங்களில் பரப்பி, காங்கிரஸ் கட்சியினர் புளகாங்கிதம் அடைந்து வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: