இராமேஸ்வரம்:
எதிர்வரும் மார்ச் 31-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக, இராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்துள்ளனர்.இராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் இருந்து மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது, இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதும், விரட்டியடிப்பதும் தொடர் நிகழ்வாகி விட்டதால், மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறியுள்ளது.குறிப்பாக, இராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை கச்சத்தீவு பகுதியில் மின் பிடிக்க முடியாத அளவுக்கு இலங்கை கடற்படையினர் தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.ஞாயிற்றுக்கிழமையன்றும் கூட இராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்ததுடன், அவர்களின் உபகரணங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்நிலையில் இராமேஸ்வரம் மீனவர்களின் அவசர ஆலோசனைக் கூட்டத்தில் திங்கட்கிழமையன்று நடைப்பெற்றது. இதில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 27 தமிழக மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி, மார்ச் 31-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதென்றும், அன்றைய தினம் இராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதென்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழகம், புதுச்சேரி மீனவர்களின் 184 விசைப்படகுகளை விடுவிக்க வேண்டும்; குந்துகாலில் மீன்பிடி இறங்குதளம் அமைக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

Leave A Reply

%d bloggers like this: