ஈரோடு, மார்ச்26-
ஈரோட்டில் மண் கடத்தலை அம்பலப்படுத்திய சமூக ஆர்வலர் மீது லாரி உரிமையாளர்கள் புகார் அளித்த நிலையில், இதற்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினரின் தூண்டுதலே காரணம் என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் கிராவல் மண் திருட்டு நடைபெறுவதாக சமூக ஆர்வலர் நந்தகுமார் என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார். மேலும், இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில் உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, மண் திருட்டில் ஈடுபட்ட அதிமுக பிரமுகர்கள் இருவருக்கு ரூ.8 கோடி அபராதம் விதித்து சமீபத்தில் வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து தனக்கு தொடர் மிரட்டல் வருவதாகவும், உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர் நத்தகுமார் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்திருந்தார்.இந்நிலையில், திங்களன்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் முகாமில் மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் மனு ஒன்றினை அளித்தனர். இதில் பெருந்துறைச் சேர்ந்த நந்தகுமார் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் தங்களது லாரிகளை வழிமறித்து மாமூல் கேட்பதாகவும், தரமறுத்தால் வட்டாட்சியர், காவல்துறை ஆகியோரிடம் பிடித்து கொடுத்து விடுவேன் எனவும் மிரட்டுகிறார். ஆகவே, இவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தனர்.

இதுகுறித்து நந்தகுமாரிடம் கேட்கையில்:- மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரிகளை பற்றிய தகவல் கொடுத்தேன். அதன் பேரில் ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் நர்மதா தேவி விசாரித்து, 8 கோடி ரூபாய் அபராதம் விதித்தார். இதனால் ஆத்திரமடைந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினரான தோப்பு வெங்கடாசலம், தனக்கு ஆதரவாக உள்ள லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளை தூண்டிவிட்டு என் மீது திட்டமிட்டு பொய் புகார் மனு அளித்துள்ளனர். முன்னதாக, மண் கடத்தல் வழக்கு தொடர்பாக பல முறை சமரசம் பேசியும் நான் ஒப்புக்கொள்ளவில்லை, இதன்காரணமாகவே தற்போது என் மீது புகார் மனு அளித்துள்ளனர் என தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.