பண்டைய கொங்கு 24 நாடு
களில் ஒன்றெனக் கூறப்படும் “வாரக்க நாட்டில்” உள்ள செஞ்சேரி வடுகபாளையத்தில் கி.பி.15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வீரநடுகல் ஒன்றை திருப்பூரில் இயங்கி வரும் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையம் கண்டறிந்துள்ளது. இந்த ஆய்வு மையத்தினைச் சேர்ந்த முனைவர் ச.மு.ரமேஷ்குமார், க.பொன்னுச்சாமி, ச.ரஞ்சித் மற்றும் பொறியாளர் சு.ரவிக்குமார் ஆகியோர் இப்பணியில் ஈடுபட்டனர்.

இந்த நடுகல்லின் சிறப்பு அம்சங்கள் பற்றி வீரராசேந்திரன் ஆய்வு மையத்தின் இயக்குநர் பொறியாளர் சு.ரவிக்குமார் மேலும் கூறியதாவது: பண்டைய தமிழகத்தில் எல்லா காலங்களிலும் தன் புகழ் நிறுத்தித் தான் மாய்ந்த சான்றோனுக்கு மட்டுமே அனைத்துப் புகழும், பெருமையும் சேர்க்கப்பட்டதை சங்க இலக்கியங்களும், அவர்களுக்காக எடுக்கப்பட்ட நடுகற்களும் வெளிப்படுத்துகின்றன. அந்த வகையில் இங்கு கிடைத்துள்ள நடுகல் 75 செ.மீட்டர் அகலமும், 55 செ.மீட்டர் உயரமும் கொண்டதாகும். இந்நடுகல்லில் இரு ஆண்களும், இரு பெண்களும் உள்ளனர். இதில் போர்வீரன் ஒருவர் தனது இடது கையில் வில்லை வைத்தபடியும், தனது வலது கையைத் தன் மார்பு அருகில் வைத்தபடியும் உள்ளன. அவ்வீரனின் இடுப்புப் பகுதியில் அம்புகள் வைப்பதற்கான உறை மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

மற்றொருவர் இசைக்கலைஞர் ஆவார். அவர் தனது இரு கைகளாலும் “தக்கை” எனும் இசைக்கருவியை வாசித்தபடி இவ்வீர நடுகல் வடிவமைக்கப்பட்டுள்ளது. பண்டைய காலத்தில் ஓர் இடம் விட்டு இடம் பெயரும், மக்கள் இவ்வாறு இசைக்கருவிகளை வாசித்தும், தமிழ் வீரயுகப் பாடல்களைப் பாடியும் ஒவ்வொரு இசைக்குழுவாக இடம் பெயர்வது வழக்கமாகும். இவ்வீரன் மற்றும் இசைக்கலைஞர் இருவருமே இடையில் மட்டும் நல்ல வேலைப்பாடுடன் கூடிய ஆடை அணிந்து, கழுத்து, கை மற்றும் கால்களில் பிற அணிகலன்களும் அணிந்துள்ளனர். இதில் வீரனின் சிகை அலங்காரம் மட்டும் இடதுபக்கம் சாய்ந்துள்ளது.

இந்நடுகல்லில் காட்டப்பட்டுள்ள இசைக்கலைஞரின் மனைவி தன் கைகளைக் கீழே தொங்கவிட்டபடியும், வீரனின் மனைவி இரண்டு கைகளையும் சற்றே உயர்த்திய நிலையிலும் உள்ளனர். இவ்விரு மகளிருமே அணிகலன்களும், கொசுவம் வைத்த மிகவும் அழகான ஆடையும் அணிந்துள்ளனர். இதன் மூலம் பண்டை காலத்தில் வீரர் மற்றும் கலைஞர்களுடன் அவர்தம் மகளிரும் சிறப்பிக்கப்பட்டதை அறிய முடிகிறது. இந்நடுகல்லைப் பார்த்த தமிழக தொல்லியல் துறையின் முன்னாள் துணை இயக்குநர் முனைவர் ர.பூங்குன்றனார், “நமது பண்டைய சமூகப் பண்பாட்டை வெளிக்கொணரும் இவ்வீர நடுகல் கிபி 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். இதன் மூலம் வீரர்களுக்கு மட்டுமல்லாமல் அவர்களுக்குத் துணை நின்றவர்களையும் போற்றி வணங்கிய தமிழர் பண்டைய மரபு, நாகரிகச் செழுமையும் தெரிய வருகிறது என்றார்.

Leave a Reply

You must be logged in to post a comment.