திருப்பூர், மார்ச் 26 –
தமிழகத்தில் பருத்தி உற்பத்தியை ஊக்குவிக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்னிந்திய காலர் சர்ட் மற்றும் உள்ளாடை சிறுதொழில் முனைவோர் சங்கம் (சிஸ்மா) வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, தமிழக முதல்வருக்கு சிஸ்மா பொதுச் செயலாளர் கே.எஸ்.பாபுஜி திங்களன்று அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது: மகாராஷ்டிரம், குஜராத், மத்திய பிரதேசம், ஆந்திரா போன்ற மாநிலங்களில் அதிக பருத்தி விளைகிறது. இதற்கு ஏற்ப அங்கு ஜவுளி, பின்னலாடை தொழில்களை மேம்படுத்த புதிய ஜவுளி கொள்கையை அந்தந்த மாநில அரசுகள் கொண்டு வந்துள்ளனர்.

தெலுங்கானா மாநிலத்தில் 40 லட்சம் பேல் பருத்தி உற்பத்தியாகிறது. அவர்கள் உபயோகத்திற்கு 10 லட்சம் பேல்கள் போக, 30 லட்சம் பேல்களை விற்பனை செய்கின்றனர். வரும் காலகட்டத்தில் இந்த 30 லட்சம் பேல்களையும் தங்கள் மாநிலத்திற்குள் பின்னலாடைகளாகவும், ஜவுளி சார்ந்த உற்பத்திகளாகவும் பயன்படுத்த திட்டம் வகுக்கின்றனர். ஆந்திராவில் 22 லட்சம் பேல் பருத்தி சாகுபடியை ஊக்குவித்து வருகிறது ஆந்திர அரசு. ஆனால் தமிழகத்தில் 5 லட்சம் பேல் பருத்தி மட்டும் உற்பத்தியாகிறது. பின்னலாடை மற்றும் ஜவுளிதுறை பயன்பாட்டிற்கு 130 லட்சம் பேல் பருத்தி ஓர் ஆண்டிற்கு தேவைப்படுகிறது. பற்றாக்குறையாக உள்ள 125 லட்சம் பேல் பருத்தியை மற்ற மாநிலங்களில் வாங்க வேண்டிய நிர்பந்தம் இருப்பதால் பருத்தி விலையேற்றம், நூல் விலையேற்றம் என பல்வேறு இன்னல்களை இங்குள்ள தொழில்துறையினர் சந்திக்கின்றனர்.

மேலும், ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்ட்ரா, குஜராத் போன்ற மாநிலங்கள் பின்னலாடை துறையினரை புதிய தொழில் தொடங்க பல்வேறு சலுகைகள் அறிவித்து அழைக்கின்றனர். எனவே, தமிழகத்தில் பருத்தி உற்பத்தியை அதிகப்படுத்த தேவையான பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கு விவசாயிகளுக்கு மானிய விலையில் உபகரணங்கள், பூச்சி மருந்து போன்றவற்றை வழங்கி விவசாயத்தில் உள்ள சிக்கலை தீர்க்க வேண்டும். தமிழக ஜவுளி கொள்கையில் பருத்தி உற்பத்தியை ஊக்குவிக்கும் கொள்கைகள் இடம்பெற வேண்டும். தமிழகத்தில் பின்னலாடை ஜவுளி உற்பத்தி பாதிப்படையாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பருத்தி சாகுபடியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: