கோவை, மார்ச் 26-
பொள்ளாச்சி டி.கொட்டாம்பட்டியில் 150 ஆண்டுகளுக்கு மேலாக இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய அருந்ததிய மக்கள் பயன்படுத்தி வந்த நிலத்தை சாதிய ஆதிக்க சக்தியினர் ஆக்கிரமிக்க முயல்வதாக ஆதித்தமிழர் பேரவையினர் திங்களன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.

இதுகுறித்து இவ்வமைப்பின் நிர்வாகிகள் கூறுகையில், பொள்ளாச்சி டி.கொட்டாம்பட்டியில் விஜயாபுரம், அண்ணாநகர் மற்றும் இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் ஐநூறுக்கும் மேற்பட்ட தலித் அருந்ததிய மக்கள் வசித்து வருகிறோம். எங்கள் ஊரில் இந்துக்களுக்கென உள்ள சுடுகாட்டின் அருகில் உள்ள புறம்போக்கு நிலத்தில் புதைத்து வருகிறோம். இந்நிலையில் சாதிய ஆதிக்க சக்தியினர் சிலர் அந்த புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சிக்கின்றனர். இதனை தடுத்து நிறுத்த வேண்டும். மேலும் 150 ஆண்டுகளுக்கு மேலாக பாரம்பரியமாக நாங்கள் பயன்படுத்திவரும் இந்நிலத்தின் அருகில் உள்ள இந்துக்கள் மயானத்தோடு இந்த புறம்போக்கு நிலத்தை இனைத்து வகைமாற்றம் செய்ய வேண்டும். எங்கள் மூதாதையர்களுக்கு விஷேச நாட்களில் எவ்வித இடையூறும் இல்லாமல் சடங்குகள் செய்வதற்கு உரிய நடவடிக்கையை மாவட்ட ஆட்சியர் எடுக்க வேண்டுமென மனு அளித்திருப்பதாக தெரிவித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: