திருப்பூர். மார்ச் 26-
தமிழக சட்டமன்ற சபாநாயகர் தொகுதியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்சனை தொடர்பாக உரிய தீர்வு காணக்கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக, திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டம், தத்தனூர் ஊராட்சியை அடுத்த சாவக்காட்டுபாளையத்தைச் சேர்ந்த பொதுமக்கள் திங்களன்று ஆட்சியர் அலுவலகத்தில் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் பின்னர் அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் கிராமத்தில் சுமார் 600 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு 20 நாளுக்கு ஒரு முறை தான் குடிநீர் விநியோகிகப்படுகிறது. இதே நிலையில் பல ஆண்டுகளாக சிரமப்பட்டு வருகிறோம்.  இதுதொடர்பாக, ஒவ்வொரு முறையும் ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு வரும்போது, அந்த ஒரு மாதத்திற்கு மட்டும் 8 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்கிறார்கள். அதன்பின்பு மீண்டும் பழைய நிலையே தொடர்கிறது. எனவே, மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையீடு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது. இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தமிழக சட்டமன்ற சபாநாயகர் தனபால் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: