கோவை,
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள நாட்டின் மிகப்பெரிய பூச்சிகள் அருங்காட்சியகத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திங்களன்று திறந்து வைத்தார்.

கோவையிலுள்ள வேளாண் பல்கலைக்கழகத்தின் பூச்சியியல் துறை சார்பில் ரூ.5 கோடி செலவில் 6,691 சதுர அடி பரப்பளவில் பூச்சிகள் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா திங்களன்று பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவுக்கு வேளாண்மைத் துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு தலைமை தாங்கினார். வேளாண்மைத்துறை முதன்மைச் செயலர் ககன்தீப் சிங் பேடி வரவேற்றார். நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்து பேசுகையில், முதலில் நான் இந்த அருங்காட்சியகத்தை விடியோ கான்பரன்ஸிங் முறையில் திறந்து வைக்க எண்ணினேன். ஆனால், அமைச்சர்களும், வேளாண் துறையினரும் இந்த அருங்காட்சியகத்தின் சிறப்புகளை எடுத்துரைத்ததால் நேரில் திறந்து வைப்பதற்காக வந்திருக்கிறேன். இந்த அருங்காட்சியகம் பிரமிக்க வைக்கும் விதத்தில் அமைந்துள்ளது. இங்கு சுமார் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதப்படுத்தப்பட்ட பூச்சியினங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

அடிப்படையில் நானும் ஒரு விவசாயி என்பதால் இங்குள்ள பூச்சிகள் குறித்து அறிந்து கொள்ள முடிகிறது.எந்த பூச்சி விவசாயிகளுக்கு நன்மை செய்யக் கூடியது, எது தீமை செய்யக் கூடியது என்பதை கண்டுபிடித்து அவற்றை நேர்த்தியாக வரிசைப்படுத்தியிருப்பது பாராட்டத்தக்கது. உலகின் பல்வேறு இடங்களில் 20 பூச்சிகள் அருங்காட்சியகம் இருந்தாலும், அவை குறிப்பாக ஏதேனும் ஒரு பூச்சியினத்துக்காக அமைக்கப்பட்டதாகவே இருக்கின்றன. ஆனால், இந்த அருங்காட்சியகத்தில் எல்லா வகையான பூச்சியினங்களும் வைக்கப்பட்டுள்ளன. மேலும், மனிதர்களை எந்த வகை பூச்சி கடித்தால் என்ன வகையான நோய்கள், பிரச்சனைகள் ஏற்படும் என்பதையும் காட்சிப்படுத்தியிருக்கின்றனர். இது பல்கலைக்கழக பூச்சியியல் துறை மாணவர்களுக்கு மட்டுமின்றி அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும், விவசாயிகள், பொதுமக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.

முன்னதாக, பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.12 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள ஆசியாவின் முதலாவது வேர்சூழ் உயிரிய ஆய்வுக் கூடத்தையும் (ரைசோட்ரான்), ரூ.6 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள நுண்ணுயிர் சிறப்பு ஆய்வுக் கூடத்தையும் முதல்வர் திறந்து வைத்தார். இந்தவிழாவில் மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன், பல்கலைக்கழக துணைவேந்தர் கு.ராமசாமி, துறைத் தலைவர்கள், மாணவர்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: