இராமநாதபுரம்:
இராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கத்தில் 1974 ஆம் ஆண்டு, வேலைவாய்ப்பு வழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட தமிழ்நாடு அரசு உப்பு நிறுவனத்தின் எந்தப் பணியையும் தனியாருக்கு கொடுக்க கூடாது என சிஐடியு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சிஐடியு மாவட்டச் செயலாளர் எம்.சிவாஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

அரசு உப்பு நிறுவனமானது தொழிலாளர்களின் கடும் உழைப்பின் காரணமாக லாபம் ஈட்டும் நிறுவனமாக வளர்ச்சியடைந்தது. நிர்வாக இயக்குநர்களின் தேவையற்ற செலவுகளாலும், நிர்வாக சீர்கேட்டின் காரணமாகவும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தினார்கள். இந்த நிதிநெருக்கடியை சமாளிக்கவும், லாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றவும் உப்பு சுத்திகரிப்பு நிலையம் ஏற்படுத்தப்பட்டது. இந்த நிறுவனத்தை கட்டமைக்க தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் விடப்பட்டது. அந்த நிறுவனமானது முழுமையாக கட்டமைத்து நிறுவனத்திடம் ஒப்படைக்காத நிலையில் உப்பு சுத்திகரிப்பு நிறுவனத்தை டாடா நிறுவனத்திற்கு பல சலுகைகளுடன் இரண்டு ஆண்டுகளுக்கு  ஒப்பந்தம் விட அறிவிப்பு செய்யப்பட்டது.தனியார் நிறுவனம் கட்டமைத்து ஒரு மணி நேரத்திற்கு 7டன் சுத்திகரிப்பு செய்ய வேண்டும் என்ற இலக்கை இயக்கி காட்டவில்லை. அவர்கள் மணிக்கு 2.6 டன் மட்டுமே சுத்திகரிப்பு செய்தார்கள். ஆனால் ஞாயிறன்று நிறுவன அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள் மணிக்கு 6.7 டன் வரை சுத்திகரிப்பு செய்து காட்டியுள்ளனர். இந்த நிலையில் தனியாருக்கு கொடுத்தே தீருவது ஏன் என்ற கோபம் தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

தொழிலாளர்களின் கடும் எதிர்ப்பின் காரணமாக, தொழிலாளர்களின் சம்மதம் இல்லாமல் தனியாருக்கு கொடுக்க மாட்டோம் என உறுதியளிக்கப்பட்டது. தொழிலாளர்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே இறுதிமுடிவு எட்டப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டது. இந்த நிலையில் மேலாண்மை இயக்குநரால் மீண்டும் டாடா நிறுவனம்  மட்டுமே பங்கேற்கும் விதத்தில் ஒப்பந்தம் கோரப்பட்டு, டாடா நிறுவனத்திற்கு இரண்டு ஆண்டுகள் ஒப்பந்தம் விடும்  முயற்சியில் அவர் இறங்கியுள்ளார். இதனை எதிர்த்து ஆர்ப்பாட்டம், உள்ளிருப்பு போராட்டம் என பல கட்ட போராட்டங்களை அனைத்து தொழிற்சங்கங்களும் நடத்தியுள்ளன. அரசு அதிகாரிகள், நிறுவனத்தின் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் நிர்வாக தரப்பில் தொழிலாளர்களுக்கு எவ்விதமான உறுதியும் தரப்படவில்லை. இது தொழிலாளர்கள் மத்தியில் அச்சத்தையும், ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது

நாளை சாலை மறியல்
இந்த சூழலில் அனைத்து சங்கங்களும் ஒன்று கூடி வாலிநோக்கம் விலக்கு ரோட்டில் 27.03.2018 அன்று சாலைமறியல் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மறியல் போராட்டத்திற்கு அனைத்து அரசியல் கட்சிகள், கிராமத்தலைவர்கள், ஜமாத் தலைவர்கள், மகளிர் மன்றங்கள் என அனைத்து தரப்பினரும் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.