இலக்கியம் என்பது வெற்றுக் காகிதங்களின்மேல் பதியப்பட்ட எழுத்துக்கள் அல்ல; அது வழிகாட்டும் தன்மை கொண்டது. காலங்கடந்தும் விஷயங்களை விளக்குவதற்குப் பயன்படுவது.

பாரிஸ்டர் பட்டம் பெற்று தென்னாப்பிரிக்காவில் வழக்கறிஞர் தொழிலைப் பார்க்கச் சென்ற மோகன்தாஸ் கரம் சந்த் காந்தியை மகாத்மா காந்தியாக்கியதற்கான விதைகள் புத்தகங்களில் இருக்கின்றன. கடையருக்கும் கடைத்தேற்றம் என்ற புத்தகம் தான் அவரது மனதை இயக்க எளியமக்களுக்காகப்பாடுபடுவதையே இலக்காகக் கொள்ளவைத்தது. லியோ டால்ஸ்டாயின் நூலும் இத்துடன் சேர்ந்து கொண்டது. பின்னாளில் மகாத்மா காந்தி எழுதிய சத்திய சோதனை எத்தனையோ பேர் மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்தியது! வாழ்க்கையை ஒளிவு மறைவின்றி உள்ளதை உள்ளபடியே சொல்லும் துணிவு ஏற்படுவது எளிதான காரியமல்ல. அதனைச் செய்து வெற்றி கண்டவர் காந்தி. பலருக்கு அந்நூல் வழிகாட்டியாகவும் அமைந்தது.

காரல் மார்க்சின் 200வது பிறந்த ஆண்டு விழா தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கிறது. அவரது மூலதனம் தான் தொழிலாளிவர்க்க அரசு அமைப்பதற்கான மூலதனம். அந்த மூலதனத்தில் அறிவியல், சமூகம், பொருளாதாரம், அரசியல் அம்சங்களோடு இலக்கியமும் சேர்ந்திருக்கிறது. முதலாளித்துவத்தின் கொடிய குணத்தை விளக்குவதற்கு ஷேக்ஸ்பியரின் இலக்கியத்தை மார்க்ஸ் பயன்படுத்துகிறார். வெனிஸ் நகர வணிகன் (மெர்ச்சண்ட் ஆஃப் வெனிஸ்) என்கிற கதை நமக்குத் தெரியும். அதிலே வருகிற லேவாதேவிக்காரன் கடன் வாங்கியவன் சதையை ஈடாகக்கேட்பான். இரக்கமற்ற குணத்திற்கு எடுத்துக்காட்டு இது. ஆனால் அதையும் தந்திரமாக எற்றிப்போட்டு ஒரு சொட்டு ரத்தம் கூட சிந்தாமல் சதையைஎடுத்துக்கொள் என்றது தீர்ப்பு. தந்திரத்தைத் தந்திரத்தால் வென்று சாய்ப்பதற்கு இந்த இலக்கியம் பயன்படுகிறது. இதேபோல் ஹேம்லட் நாடகத்தையும் மார்க்ஸ் தமது மூலதன நூலில் கொண்டுவந்திருக்கிறார். டூ பி ஆர் நாட் டூ பி (இருப்பதா அல்லது இல்லாமல் போவதா – வாழ்வதா அல்லது சாவதா)  என்ற பிரபலமான இந்த நாடகத்தின் தொடரைப் பொருத்தமான இடத்தில் மார்க்ஸ் பயன்படுத்தியிருப்பார். இதெல்லாம் எப்படிசாத்தியமானது? அரசியல், பொருளாதாரம், தத்துவம் ஆகியவற்றோடு இலக்கியங்களையும் அவர் வாசித்ததும் நேசித்ததும் தான் காரணம்.

மார்க்சியத்தை மிக எளிமையான முறையில் எடுத்துரைத்த திரைப்படம் பேராண்மை. இந்தப் படத்திற்குப் பெயர்வைத்ததற்கே காரணம் தமது சங்க இலக்கிய வாசிப்புதான் என்று இயக்குநர் ஜனநாதன் கூறியிருக்கிறார். பொருள்தேடல் காரணமாகத் தலைவன் தலைவியைப் பிரிந்து செல்லவிருக்கிறான். அதை அவளிடம் சொன்னால் கவலைப்படுவாளே என்று அவன் தயங்கி கடைசி நேரத்தில் சொல்லிக்கொள்ளலாம். மறுக்கமாட்டாள் என்று நினைக்கிறான். அவளோ நம்மை விட்டு அவர் பிரிந்து சென்றுவிடமாட்டார். அப்படியே பிரிய நினைத்தாலும் நான் தடுத்தால் நின்றுவிடுவார் என்று அவள் நினைக்கிறாள். இதனை சங்கப் புலவன் குறிப்பிடும்போது, “இருபேராண்மை செய்த பூசல்” என்கிறான். ஆண்மை என்பது ஆணுக்குரிய பண்பல்ல; ஆளுமை என்ற பொருளுடைய இருபால் பொதுச்சொல் என்பது சங்ககாலக்கருத்து. அந்தக் கருத்தின் அடிப்படையில் தான் பெண்களின் சாகசப் பயணத்தையும் உள்ளடக்கியபடத்திற்கு, ‘பேராண்மை’ என்று அவர் பெயர் சூட்டினார்.

அதுமட்டுமல்ல படத்தின் கருப்பொருளும் காட்சி அமைப்புகளும் எங்கிருந்து விரிகின்றன? ‘அதிகாலையின் அமைதியில்’ என்ற ரஷ்யநாவலில் இருந்து, அதனை எவ்வளவு ஆழமாக வாசித்து காட்சிப்படுத்தியிருத்தால் பேராண்மை ஒரு வெற்றிப்படமாக அமைந்திருக்கும்!  ‘இயற்கை’ படத்தைப் பார்த்துவிட்டுப் பாராட்டி கைகுலுக்கிய போது கட்டி அணைத்து இதற்கு காரணம் நானல்ல; தாஸ்தவோஸ்கி எனும் ரஷ்யஎழுத்தாளர் என்றார் ஜனநாதன்.இயக்குநர் விக்ரமன் தயாரித்த திரைப்படம் புதுவசந்தம். அந்தப் படத்தைப் பார்த்து வெகுவாகப் பாராட்டியபோது 120 ஆண்டுகளுக்கு முன்னால் வெளியிடப்பட்ட ‘வெண்ணிற இரவுகள்” என்ற ரஷ்யக் கதைதான் புதுவசந்தம் என்றார்.

நாட்டின் முதலாவது பிரதமர் பண்டித ஜவஹர்லால்நேரு. சிறந்த எழுத்தாளர். இலக்கியவாசிப்பும் நிறைந்தவர். நாடுசுதந்திரம் அடைந்தபின் பிரச்சனைகளை அவர் எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. பஞ்சசீலக்கொள்கையை நிறைவேற்ற முடியுமா என்ற ஐயம்… சோவியத் உதவியுடன் பொதுத்துறை நிறுவனங்களை வெற்றிகரமாக செயல்படுத்த இயலுமா என்ற சந்தேகம்… அப்போது தனக்கு நம்பிக்கை அளித்தது டால்ஸ்டாய் எழுதிய லாஸ்ட் லீஃப் (கடைசி -இலை) என்ற கதைதான் என்று குறிப்பிடுகிறார். உலகின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான டால்ஸ்டாய் வாசிப்பைப் பற்றி வழிகாட்டுவது மிகவும் முக்கியமானது. ஐந்து வாசிப்பு முறைகளைப் பற்றி அவர் சொல்கிறார்.

1.உரத்தவாசிப்பு: ஒரு நூலை வாய்விட்டுப்படிப்பது. அதுபற்றி டால்ஸ்டாய் கூறும்போது “எவர் சத்தம் போட்டு வாசிக்கிறாரோ அவர் கருத்துக்களை மற்றவர்களுக்கு கற்றுக்கொடுக்கிறார்” என்கிறார். கற்றிலனாயினும் கேட்க, கற்றலிற்கேட்டலே நன்று என்பது போன்ற முன்னோர் வாக்குகளோடு இது பொருந்திப் போவதைப் பார்க்கிறோம்.

2.கூட்டுவாசிப்பு: நூல் ஒன்றாயினும் ஒருசிலர், கூடியமர்ந்து வாசிக்கும்போது அதன் பயன் பலருக்கும் பரவலாகிறது. இதன் மூலம் நல்ல வாய்ப்பு கிடைக்கிறது. படிக்கும் திறன் கூடுகிறது. மேலும் படிக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்படுகிறது. தொடக்கப்பள்ளிகளில் இந்தக் கூட்டுவாசிப்பு முறை தான் பின்பற்றப்படுகிறது. வேதபாடசாலைகள், ஓதுவார் பயிற்சி, மார்கழி மாத பஜனை, கோயில்களில் சிறார்களுக்குப் பாடல்பயிற்சி அளித்தல், ஐயப்பன் பூஜை போன்றவற்றில் காணப்படுவது இந்தவாசிப்பு முறையின் மாற்றுவடிவம் தான்.

3.காட்சி வாசிப்பு: ஒன்றைப்படிக்கும் போது அது பற்றி காட்சியைக் கற்பனை செய்துகொண்டு வாசித்தல். இதனால் படிப்பது நன்கு மனதில் பதியும். மனவெழுச்சி ஏற்படுவது இம்மாதிரியான வாசிப்பால்தான்.

4.அமைதிவாசிப்பு: இதை மவுனவாசிப்பு என்றும் சொல்கிறோம். சிறார்பருவத்திலிருந்து பதின்பருவத்திற்கு மாறும் போது வாசிப்புமுறை இதற்குத் திரும்புகிறது. இதுதான் பெரும்பாலும் இறுதிவரை நீடிக்கிறது. எதையும் மவுனமாக வாசிப்பது என்பதற்குப் பழகிவிட்டபிறகு நமக்கு நாமேபயனடைதல் என்பது தான் மிஞ்சுகிறது. ஏனையவாசிப்புபோல் மற்றவர்களுக்குப் பயன்படுவதில்லை.

5.அனுபவ வாசிப்பு: படிக்கிற ஒருநூலை தனது சித்தாந்தத்தை நோக்கிக் கொண்டுசெல்வது. இன்றைக்கு நாம் மறுவாசிப்பு என்று சொல்வதை இந்த வகை வாசிப்போடு இணைத்துப் பார்க்கலாம். இப்படி இலக்கியங்கள் படைக்கப்பட்டாலும் படிக்கப்பட்டாலும் அவை மனித மனங்களை உள்ளிருந்து இயக்குகின்றன. அந்த இயங்குவகை எத்தனையோ மாற்றங்களுக்கு இட்டுச் சென்றுள்ளன. வரலாறு நமக்கு அதை உணர்த்துகின்றன.

(செங்கை தமுஎகச கூட்டத்தில் ‘வாசிப்பை நேசிப்போம்’ என்ற பொருளில் நிகழ்த்திய உரை. தொகுப்பு: மயிலைபாலு)

Leave a Reply

You must be logged in to post a comment.