புதுதில்லி, மார்ச் 24-

முகநூல் போன்ற சமூகவலைத்தளங்களில் உள்ள தனிப்பட்டவர்களின் தரவுகள் மற்றும் அந்தரங்க விஷயங்கள் பணம் படைத்த அரசியல் கட்சிகளால் தங்கள் கட்சிக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளக்கூடிய விதத்தில் கசியச் செய்வதற்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கோரியுள்ளது.

இது தொடர்பாக கட்சியில் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கோரப்பட்டிருப்பதாவது:

“கேம்பிரிட்ஸ் அனால்டிக்ஸ் என்னும் கிரேட் பிரிட்டன் நிறுவனம் ஒன்று எப்படி சமூகவலைத்தளங்களில் உள்ள தனிப்பட்டவர்களின் தரவுகளையும் அந்தரங்க விஷயங்களையும் பணம் படைத்த அரசியல் கட்சிகள் தேர்தல் சமயங்களில் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள அளித்துள்ளது என்கிற விவரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

இந்தியாவில் இத்தகு இழிவேலைகளைச் செய்திடுவதற்காக இந்நிறுவனம் இந்தியாவிலேயே ஒரு துணை நிறுவனத்துடன் தொடர்பு வைத்துக்கொண்டு வந்திருக்கிறது என்பதும் இப்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

சமூகவலைத்தளங்களில் உள்ள தனிப்பட்ட நபர்களின் தரவுகள் கசிந்திருப்பது தொடர்பாக, தொடர்பாக மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரான ரவிசங்கர் பிரசார் தன்னுடைய அறிக்கையில், சமூகவலைத்தளங்களில் உள்ள நம் நாட்டின் குடிமக்களின் தரவுகளைப் பாதுகாத்திட அரசாங்கத்தால் சட்டரீதியான கட்டமைப்பை ஏற்படுத்தாத நிலையில் இவ்வாறு நடந்திருப்பது நம்பமுடியாத விதத்தில், உள்ளொன்றுவைத்துப் புறம்பொன்று பேசும் விதத்தில் (hypocritical-ஆக) இருப்பதாகக் கூறியிருக்கிறார். அவ்வாறு ஒரு சட்டம் இல்லாதபட்சத்தில் கூகுள், முகநூல் (ஃபேஸ்புக்) போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் நம்முடைய குடிமக்களின் தரவுகளைத் துஷ்பிரயோகம் செய்வதிலிருந்து தடுத்துப் பாதுகாப்பதற்கு வழியில்லை.

இந்நிலையில் நம் தேர்தல் ஆணையமே கூகுள் நிறுவனத்துடன் ஓர் உடன்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள முன்வந்திருப்பதும், முகநூல் (ஃபேஸ்புக்) அளித்திடும் செய்திகளைப் பயன்படுத்திக் கொண்டிருப்பதும் கவலைதரக்கூடிய விஷயங்களாகும்.

அரசியல் கட்சிகளும், தனிநபர்களும் தங்களிடமிருக்கின்ற பண பலத்தை வைத்துக்கொண்டு தேர்தலில் செல்வாக்குசெலுத்துவதற்கு இவற்றைப் பயன்படுத்துவதற்காக தரவுகளைக் காசுக்கு விற்பதற்கு அத்தகைய நிறுவனங்களுக்கு உதவுகின்றன.

இந்தியாவில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் இத்தகைய செயல்பாடுகள் எப்படியெல்லாம் நடைபெற்று வந்திருக்கின்றன என்பது தொடர்பாகவும், அவை எம்மாதிரியான சேவைகளைத் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அளித்தன என்பது தொடர்பாகவும் ஒரு விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.

மத்திய அரசாங்கம், நம் நாட்டின் குடிமக்களின் தனிப்பட்ட அந்தரங்க விஷயங்களை (privacy)ப் பாதுகாத்திட தேவையான சட்ட ரீதியாக வடிவமைத்திட உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொண்டிட வேண்டும்.”

இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கூறியுள்ளது.

(ந.நி.)

Leave A Reply

%d bloggers like this: