புதுதில்லி, மார்ச் 25-

தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக நீண்ட பயணம் சென்ற ஜேஎன்யு மாணவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் தொடுத்திருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பத்திரிகையாளர் அமைப்புகள், ஜேஎன்யு ஆசிரியர் சங்கம், ஜேஎன்யு மாணவர் சங்கம் முதலானவை கண்டனம் தெரிவித்துள்ளன.

ஆர்எஸ்எஸ்/பாஜக மத்திய அரசாங்கம் கல்வியைத் தனியார்மயமாக்கிடக் கங்கணம் கட்டிக்கொண்டிருப்பதைக் கண்டித்தும், ஜேஎன்யு பல்கலைக் கழகத்திற்கு சுயாட்சி கோரியும், மாணவர்கள் மீதான பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட பேராசிரியர் அடுல் ஜோஹ்ரியை சஸ்பெண்ட் செய்ய வலியுறுத்தியும், கட்டாய வருகைப் பதிவை நீக்கிடக் கோரியும் மற்றும் பல கோரிக்கைகளுக்காகவும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் ஜேஎன்யு வளாகத்திலிருந்து, நாடாளுமன்ற வீதி நோக்கி பகத்சிங் தூக்கிலிடப்பட்ட மார்ச் 23 அன்று நீண்ட பயணம் சென்றனர்.

மிகவும் அமைதியான முறையில் கோரிக்கை முழக்கங்களை எழுப்பியவண்ணம் வந்த மாணவர்கள் மீது, காவல்துறையினர் தண்ணீர் பீரங்கியால் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து காட்டுமிராண்டித்தனமான முறையில் தாக்குதல் தொடுத்தனர். காவல்துறையினரின் தாக்குதல்களைப் படம் பிடித்த பெண் ஊடகவியலாளர் ஒருவர், பெண் காவலர்களால் கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டார். அவரது கேமராவும் பறித்துக்கொள்ளப்பட்டிருக்கிறது.  ஒரு பெண் ஊடகவியலாளர் காவல்துறை அதிகாரி, வித்யாதர் சிங், என்பரால் மானபங்கப்படுத்தப்பட்டுள்ளார்.  இவற்றைத் தடுத்திட முயன்ற சென்ற ஆண் ஊடகவியலாளர்கள் பலரும் தாக்கப்பட்டனர். இதில் ஒருவரின் கை உடைந்தது.

ஜேஎன்யு ஆசிரியர் சங்கம் கண்டனம்

 

சம்பவம் நடைபெற்றதை அறிந்தவுடனேயே இது குறித்து ஜேஎன்யு ஆசிரியர் சங்கம் கண்டனம் தெரிவித்தது. சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

“தில்லி காவல்துறையினநர் காட்டுமிராண்டித்தனமான முறையில் மாணவர்களையும் ஆசிரியர்களையும் தண்ணீர் பீரங்கி மூலமாக தண்ணீர் பீய்ச்சி தாக்குதல் தொடுத்திருக்கின்றனர், குண்டாந்தடிகளாலும் தாக்குதல் தொடுத்துள்ளனர். இதில் பல பெண் ஊடகவியலாளர்களுக்குக் காயங்கள் ஏற்பட்டிருக்கின்றன. காவல்துறையினரின் இச்செயலை ஜேஎன்யு ஆசிரியர் சங்கம் கடுமையாகக் கண்டிக்கிறது.”

ஜேஎன்யு மாணவர் சங்கம் கண்டனம்

ஜேஎன்யு மாணவர் சங்கத்தின் சார்பில் சம்பவம் தொடர்பாகக் கூறுகையில், “இதில் மிகவும் கொடூரமான அம்சம் என்னவெனில் ஊடகவியலாளர்களும்கூட கண்மூடித்தனமான முறையில் தாக்கப்பட்டிருப்பதாகும். இவ்வளவு மோசமாக நடந்துகொண்டுள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள்மீது இவ்வளவு மோசமாக நடந்துகொண்டுள்ள காவல்துறையினரைக் கண்டிக்கிறோம். அவர்கள் மீது உடனடியாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார்கள்.

தேசிய மகளிர் ஆணையம் புலனாய்விற்கு உத்தரவு

ஜேஎன்யு மாணவர்களும், பெண் ஊடகவியலாளர் ஒருவரும் காவல்துறையினரால் தாக்கப்பட்டிருப்பது குறித்து, விசாரணை நடத்திட தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது. இது தொடர்பாக மகளிர் ஆணையத்தின் பொறுப்புத் தலைவர், ரேகா சர்மா கூறுகையில், “தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்திட உத்தரவிட்டிருக்கிறோம். இதுதொடர்பாக விசாரிப்பதற்காக எங்கள் குழு ஒன்றை காவல்நிலையத்திற்கு அனுப்பியிருக்கிறோம். இது தொடர்பாக திங்கள் கிழமையன்று தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறோம்,” என்றார்.

சிபிஎம் தலைவர்கள் விரைவு

ஜேஎன்யு மாணவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீது காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிருந்தா காரத், முகமது சலீம், சுபாஷினி அலி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மரியம் தாவலே,  சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு விரைந்து சென்று, போராடும் மாணவர்களுக்குப் பக்கபலமாக நின்று ஒருமைப்பாட்டைத் தெரிவித்தனர். சிபிஎம் மாநிலங்களவை உறுப்பினர் சோமபிரசாத் மற்றும் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் இணைச் செயலாளர் விஜூ கிருஷ்ணன் நாடாளுமன்ற வீதி காவல் நிலையத்திற்குச் சென்று கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களை விடுவிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டார்.

பத்திரிகையாளர்கள் தர்ணா

ஜேஎன்யு மாணவர்கள் நீண்டபயணம் வந்ததைப் பதிவுசெய்யச் சென்ற பத்திரிகையாளர்களும், தொலைக்காட்சி புகைப்படக்காரர்களும் தாக்கப்பட்டதைக் கண்டித்து தில்லி காவல் தலைமையகத்தின் முன்பு சனிக்கிழமையன்று ஊடகவியலாளர்கள் தர்ணா போட்டம் மேற்கொண்டனர்.

பத்திரிகையாளர்கள் சங்கங்கள் கண்டனம்

மாணவர்களும், பத்திரிகையாளர்களும் தாக்கப்பட்டிருப்பதற்கு இந்திய பிரஸ் கிளப் ஆப் இந்தியா, இந்தியன் பெண்கள் பத்திரிகையாளர் அணி, பத்திரிகையாளர் சங்கம், இந்திய பிரஸ் கிளப் சம்மேளனம் முதலானவையும் கண்டனங்கள் தெரிவித்துள்ளன.

(ந.நி.)

Leave A Reply

%d bloggers like this: