“இந்தத் தலைப்பு கூட விமர்சனத்தை ஏற்படுத்தக் கூடும். மார்க்ஸ், லெனின், மாவோ காலத்துடன் ஒப்பிடும்போது மார்க்சிய சிந்தனையில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அரசியலதிகாரத்தை கைப்பற்றுவதும் தக்க வைத்துக் கொள்வதும் சிரமமானதே என்பதை பண்பாட்டுக்கு முக்கியத்துவம் அளித்த அந்தோணியோ கிராம்ஷி உணர்ந்து சொன்னார்.

திராவிட இயக்கம் பண்பாட்டை முனைப்பாகக் கையாண்டதால் திமுக ஆட்சியை கொண்டு வருவதற்குப் போராடி வெற்றி பெற்று தக்கவைத்துக் கொண்டது. மார்க்சிய இயக்கத்தின் அடித்தளம் உற்பத்தி சக்திகளின் உறவு மீதும் பண்பாடு, கலை ஆகியவை மேற்கட்டுமானம் மீதும் அமையும் என்பதே கோட்பாடு. அடித்தள வலிமை மீதே மேற்கட்டுமானம் அமையும். உற்பத்தி சக்தி முரண்கள் மக்களின் ஒப்புதலோடு மேற்கட்டுமானத்தையும் தீர்மானிக்கும். நமது சமூகத்தில் தாழ்த்தப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர் உதாசீனப் படுத்தப்படும் போக்கும் உள்ளது. இப்படியான சமூக உறவுச் சிக்கல்களை எப்படி எதிர்கொள்வது என்று கிராம்ஷி அணுகுமுறை உள்ளது. ராணுவம், போலீஸ், அதிகாரிகள் துணையோடு மட்டுமின்றி அதிகார வர்க்கம் ஆளுமை செலுத்துகிறது என்றார்.

எடுத்துக்காட்டாக திருவிழா, வாழ்வியல் சடங்குகளில் பயன்படுத்தப்படும் சமஸ்கிருத மந்திரங்கள்! இது எதற்கு?மக்கள் சமுதாயத்தை ஆளும் சக்தியாக அடக்கி ஒடுக்கிவைக்க இத்தகைய சடங்குகள் பயன்படுகின்றன. தொடக்க காலத்தில் தமிழ்நாடு சமயவளர்ச்சி சமூக வளர்ச்சியுடன் இயைந்தே இருந்தது. கோவில் ஆலயம் இல்லாத புராதன பொதுவுடைமை சமூகம் அப்போதிருந்தது. மலைமக்கள் வேட்டையாடி விலங்குகளையும் இயற்கையாகக் கிடைத்த காய் கனிகளையும் சாப்பிட்ட காலம். அப்போதைய வீரன் ஓடியாடி வேட்டையாடும் இளைஞனாக இருப்பான். அவனே வேலன் என்ற முருகன். அகழ்வாய்வில் முதலில் வேல்தான் கிடைத்தது. அழகின் உருவமாக வேல் பயன்படுத்தப்பட்டது. ஆகமங்கள் கோவில்கள் இல்லாத காலத்தில் மரங்களை வணங்கும் நிலைஏற்பட்டது. தல விருட்சம் என்பது அந்தப் பாரம்பரியத்தின் தொடர்ச்சிதான். வீரனின் தோற்றத்தை மரவழிபாடு, வேல்வழிபாடு மூலம் அறிகின்றோம். நிலவுடைமை சமூகம் தோன்றிய பின்னர் புராதன திணை சமூகத்தையும் கொண்டிருந்த காலமும் உண்டு. மார்க்சிய அறிஞர்கள் பார்வையில் புராதனப் பொதுவுடமை, அடிமை, நிலவுடைமை, முதலாளித்துவ சமூகம் என்ற வளர்ச்சி நிலைகள் உண்டு. ஆனால் கிரேக்க, உரோம சமூகம் போன்று தமிழ்நாட்டில் அடிமைச் சமூகம் இருந்ததாகக் கூறுவதில் எனக்கு உடன்பாடு இல்லை.

தாய்வழி சமூகம் கொற்றவையின் மகன் முருகன் என்று சொன்னாலும் தந்தை சிவன் என்று சொன்னதில்லை. நிலவுடைமை சமூகத்தில் கொற்றவையை சிவன் மனைவி பார்வதி என்று ஆக்கிவிட்டனர். இவ்வாறான உறவுகள் ஆள்வோருக்குத் தேவைப்படுகின்றன.இனக்குழுக்கள் இருந்த சமூகம் மாற்றமடைந்து சொத்து, குடும்பம் என்று நியாயம் கற்பிக்கப் பட்டபோது நிலவுடைமை சமூகத்தில் குடும்ப உறவை பலப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சங்க காலத் தமிழனுக்கு சொர்க்கம் நரகம் தெரியாது. மிருகங்கள், பாம்புகள் மீது பயமிருந்த காரணத்தால் அவையெல்லாம் கடவுளாக்கப்பட்டன அல்லது கடவுள்களோடு தொடர்பு படுத்தப்பட்டன. நாதர் முடி மேலிருக்கும் நல்லபாம்பும், விஷ்ணுவின் படுக்கைப்பாம்பும், முருகன் காலடிப் பாம்பும், புற்றுக்குப் பாலூற்றுவதும், சிவனின் வாகனம் எருது ஆனதும் இப்படித்தான்!

சங்க காலத்தில் குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல், பாலை என்று நிலங்கள் வகுக்கப்பட்டு முல்லைநிலத்தில் வேட்டையாடுதல், ஆடுமாடு வளர்ப்பு ஆகியவற்றை ஆண்கள் மேற்கொண்ட போது பெண்கள் பால், தயிர், வெண்ணெய் ஆக்கலில் ஈடுபடவேண்டி இருந்தது. இந்த வாழ்வியல் முறையே பெண்ணடிமை சமூகத்தின் தொடக்கமாகும். நிலவுடைமை சமூகத்தை பலப்படுத்துவதற்கு இது பயன்பட்டது. நிலவுடைமை சமூகத்தில் சம்பந்தர், நாவுக்கரசர் சமணம், பவுத்தத்தை வீழ்த்தவும் சைவத்தை நிலைநிறுத்தவும் முயற்சிகள் மேற்கொண்டனர். குறிஞ்சி நிலத் தலைவன் வேலனை ஒடுக்க சைவம் சிவனையே மேனிலைப் படுத்தியது. ஆழ்வார்கள் திருமாலை முன்னிறுத்தினர். பெரிய கோவில்கள் பாடல்பெற்ற தலங்கள் ஆகின. சமணத்தையும் பவுத்தத்தையும் வீழ்த்த சைவம் தமிழைத் தூக்கிப் பிடித்தது.

“ஆரியம் கண்டாய், தமிழன் கண்டாய்” என்று பாடினார் நாவுக்கரசர். சமூக உற்பத்தியில் உபரி இருந்ததால் ராஜராஜ சோழன் பெரிய கோவில் கட்டியது உச்சகட்டமாக அமைந்தது. உபரி அரண்மனைக்கு சென்றது. கோவில்கள் பெருகப் பெருக பிராமணர்களும் வசதி பெற்றனர்.இரண்டாவது பக்தி இலக்கிய காலத்தில் அருணகிரிநாதர் வந்தார். மீண்டும் முருகவணக்கம் மீது எழுச்சி ஏற்பட்டு, தமிழ் அடையாளமானது. நாவுக்கரசர், சம்பந்தர் காலம் போன்று தமிழ்மொழி சைவ வளர்ச்சியின் அங்கமானது. முத்தமிழில் திட்டினாலும் முருகன் வாழவைப்பார் என்றார் அருணகிரிநாதர்.  தாயுமானவர் சமூக மாற்றத்தை உள்வாங்கினார். எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே என்ற பொதுமை வேட்டல் தொடங்கியது. வள்ளலார் முற்போக்கு நிலையில் கிறித்தவர்கள் போன்று சாதிய எதிர்ப்பு நிலை எடுத்தார். சோறிடுதல், மருத்துவம் ஆகிய அம்சங்களை வலியுறுத்தினார். இதனால் அருணகிரிநாதருக்கு இல்லாத எதிர்ப்பு வள்ளலாருக்கு வந்தது.

ஷீரடி செல்வதற்கு வசதிசெய்து கொடுக்கும் முதலாளிகள் திருவருட்பா மீது ஆர்வம் காட்டவில்லை. முதலாளித்து வத்துக்கு ஞானமார்க்கம் தேவையற்றதாகிவிட்டது. ஈஷா மையங்கள், கார்ப்பரேட் யோகா, புது சாமியார்களின் வருகை ஊக்குவிக்கப்படுகிறது.தலபுராணம், குலதெய்வ வழிபாடு, தாத்தா பாட்டி பெயர் வைக்கும் முறைகளில் மாற்றம் கண்டு வடமொழி நவீனப் பெயர்கள் சூட்டப்படுவது வழக்கமாகிவிட்டது. பக்தியும் வாழ்க்கையும் விலகத் தொடங்கி விட்டன. இப்படியே போனால் முதலாளித்துவ வளர்ச்சியில் பக்தி இருக்கும்; பக்தி இலக்கியம் இருக்காது.”

( இந்திய சமூக விஞ்ஞான கழகத்தின் சார்பில் நடைபெற்ற தோழர் சம்பத் மூன்றாம் ஆண்டு நினைவு சொற்பொழிவு தொகுப்பு: இரா.குமரகுருபரன்.)

Leave a Reply

You must be logged in to post a comment.