இன்றைய தமிழிலக்கியத்தில் மற்றொரு போக்கு உள்ளது. எதார்த்த உலகத்திலிருந்து மக்களது கவனத்தைத் திசைதிருப்பும் போக்கு இது. இதைப் பின்பற்றும் எழுத்தாளர்கள் இன்றைய சமுதாய அவலங்கள் மீதும், கொடுமைகள் மீதும் கோபக்கனலை அள்ளி வீசுகின்றனர். அதே சமயத்தில், இவை இந்த உலகில் தொடர்ந்து நிகழக்கூடியவையே, என்றைக்கும் மாறப்போவதில்லை என்ற உணர்வையும் ஏற்படுத்துகின்றனர். இந்த நிகழ்ச்சிகள் என்றென்றும் நிகழ்ந்துகொண்டேயிருக்கும் என்று நிலைநாட்ட முயல்கின்றனர். இந்த உலகில் வாழும் மக்கள் அனைவரும் நல்வாழ்வையே விரும்புகின்றனர். அதற்காக ஏதாவது ஒரு ரூபத்தில் போராடிக் கொண்டிருக்கின்றனர் என்பதில் இந்தவகை எழுத்தாளர்களுக்கு நம்பிக்கையில்லை. சமுதாய மாறுதல்கள் மீது இவர்களுக்கு நம்பிக்கையில்லை. விரக்தி, நம்பிக்கை வறட்சி, தனிமனித மன உளைச்சல் ஆகியவையே இத்தகைய இலக்கியப்போக்கில் வெளிப்படுகின்றன. நம்பிக்கை வறட்சியும் மக்கள் மீது அவநம்பிக்கையும் கொள்ளுவதால் இந்தப்போக்கு, இலக்கியத்தில் அழகியல், கலையம்சம் என்பதெல்லாம் தேவை என்ற கோட்பாட்டையே நிராகரிக்கிறது. பல சிறுஏடுகளில் இந்தப் போக்கை வெளிப்படுத்துகின்ற கதைகளும் கவிதைகளும் நிறைய வந்துகொண்டிருக்கின்றன.

இவ்வாறு தமிழிலக்கிய உலகில் நிலவும் மேற்கூறிய பொதுவான மூன்று போக்குகளும் இவையென்றால், இவைகளை வாசகர்களிடம் எடுத்துச் செல்லும் தூதுவர்கள் யார் என்பதைப் பார்ப்போம். பெருமளவில் சமீப காலத்தில் வார, இருவார, மாத இதழ்கள் வருகின்றன. படித்த மக்கள் இவைகளை ஆர்வத்துடன் வாங்குகின்றனர். இவைகளின் மூலம் அவர்களுக்குக்கிடைக்கும் கலாச்சார உணர்வு யாது? தொடர்கதைகளும், சிறுகதைகளும், இவைகளில் வருகின்றன. மனிதாபிமான உணர்வோடு முற்போக்குகண்ணோட்டத்துடன் நல்ல கதையம்சத்துடன் எழுதும் எழுத்தாளர்களின் இலக்கியப்படைப்புகள் சில வருகின்றன. ஆனால் இவை ஒரு விதிவிலக்கான அம்சமே. மலைகளின் உயரத்தில் தாழ்ந்த நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிற மக்களைப் பற்றியும், வறட்சியால் பாதிக்கப்படும் மக்கள் அதிகார வர்க்கத்தினாலும், சுயநல அரசியல் வாதிகளாலும் வஞ்சிக்கப்படுவது பற்றியும் சில கலை இலக்கியப் படைப்புகள் தோன்றியுள்ளது வரவேற்கத்தகுந்த நல்ல அம்சமே. ஆயினும் முழுமையாகப் பார்க்கிறபோது இப்பொழுது வருகின்ற பிரபல ஏடுகளில் வெளியாகும்படைப்புகளில் மிகப் பெரும்பாலானவை குறுகிய வியாபார நோக்குடன் வெளிவருபவை. நாம் மேலே விவரித்த மூன்று போக்குகளைச் சார்ந்தவைகளாகவே இருக்கின்றன.

திரையுலகம் எப்படி?
திரை உலகத்தைப் பொறுத்தவரையில், கிராமப்புறத்து இதயங்களில் ஒலித்துக்கொண்டிருந்த பாடல்களின் சந்தங்களைச் சுவீகரித்து அதில் சிந்தனைகளையும், சமூக மாறுதலுக்கான கருத்துக்களையும் பதியவைத்து இலக்கிய நயமுள்ள திரைப்பாடலாக உயர்த்திய பெருமை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தையே சாரும். இன்று மீண்டும் நாட்டுப்புற மெட்டுகள் இடம் பெற்றிருப்பது ஒரு நல்ல மாறுதலே. ஆயினும், இன்றைய திரைப்பாடல்களில் பெரும்பாலும் உருவத்தில்தான் கிராமிய இசையாக உள்ளனவே தவிர உள்ளடக்கம் மக்களிடையே முற்போக்கான சிந்தனை வளர பயன்தரக்கூடிய வகையில் இல்லை. சில தரமான பாடல்கள் வந்தபோதிலும் பொதுவான நிலை மேற்கூறியதே! இன்று கவிதைகளிலே மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. கவிதைகளைப் படிக்கிறவர்களைவிட எழுதுகிறவர்கள்தான் அதிகம் என்று சிலர் கூறுகின்றனர். இப்படிக் கூறுவதற்குக் காரணம் மக்கள் மனதைக் கவ்விப்பிடிக்கும் கவிதைகள் எண்ணிக்கையில் மிகக்குறைவாக இருப்பதே.

கவிதை
காலங்காலமாக கவிதை வடிவங்கள் மாறிக்கொண்டே தான் வருகின்றன.பாரதி கையாண்ட வடிவங்கள் அவருக்கு முன்பிருந்த கவிஞர்கள் பின்பற்றிய வடிவங்களிலிருந்து மாறுபட்டவை. ஆகவே, வடிவங்கள் மாறுவதைப் பற்றி அல்ல இப்போது எழுந்துள்ள பிரச்சனை – எந்த வடிவத்தையேனும் கவிஞன் பின்பற்றட்டும். எனினும் அவனது கவிதைகள் சிந்தனைக்கும் நெஞ்சத்திற்கும் இனிமையூட்ட வேண்டாமா? பழமையானாலும், புதுமையானாலும் கவிதைக்கென்று சில மரபுகள் இருந்தன. இனியும் இருக்கத்தான் செய்யும். எந்த மரபானாலும் அதற்குக் கவிதை என்ற அந்தஸ்து இருக்க வேண்டாமா? அப்படியென்றால் என்ன? சந்தமும் ஓசை நயமும் கற்பனையும், கருத்தாழமும் இணைந்து நெஞ்சத்தை நெகிழவைக்கும் தன்மை பெற்றிருக்க வேண்டும் என்பதே. கவிஞன் தான் கண்டதை, அறிந்ததைக் கூறும்போது அதனைக் கேட்போருக்குச் சிந்தனையைத் தூண்டுவதுடன் நெஞ்சத்தில் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்த வேண்டுமென்பதே. ஆகவே இப்படிப்பட்ட கவிதைகளை எழுதும்போது நம் இலக்கியத்தின் சென்ற கால அனுபவங்களை உட்கொள்வது மிகமிகத் தேவை. சென்றகால கவிஞர்களையும் இலக்கணங்களையும் அறிந்துள்ள ஒரு கவிஞனுக்கு செல்வமும் அதன் மூலம் கவிதை வளமும் கற்பனை வளமும் பெருகி மேலும் முன்னேறுவது சாத்தியம்.

தமிழிலக்கியத்தையும், தமிழ்மொழியையும் ஆழ்ந்து கற்பது கவிதைக்கு மட்டுமல்ல, ஏனைய இலக்கியப் படைப்புக்கும் தேவை. தான் வாழும் சமுதாயத்தின் பாரம்பரியங்களைத் தெரிந்து கொள்ளாத ஓர் எழுத்தாளன் வளமான இலக்கியங்கள் படைப்பதில் சிறந்த வெற்றிகாண முடியாது என்பதை மட்டும் இந்த இடத்தில் கூறிக்கொள்கிறோம்.மரபுக் கவிதையா? புதுக்கவிதையா? என்று முடிவு செய்வது கவிஞனின் உரிமை. இறுதியாக, இந்தக் கவிதை வடிவங்களின் வெற்றி அதைக்கேட்கும் – படிக்கும் மக்களை ஈர்ப்பதில்தான் இருக்கிறது. அவர்களே இறுதி நீதிபதிகள். எந்த மரபைப் பின்பற்றினாலும் அந்தப்படைப்பின் உள்ளடக்கம்தான் பிரதானமானது. முற்போக்குத் தன்மை இருந்தால் அது நிலைத்து நிற்கும். இல்லையெனில், எத்தனை சிறப்பாக இருந்தாலும் நிலைத்து நிற்காது.

நாடகம்:
இன்று சபா நாடகங்களின் பேரில் பல நாடகங்கள் – குறிப்பாக நம் நகர்ப்பகுதியில் நடைபெறுகின்றன. இவை பெரும்பாலும் சில்லறை ஜோக்குகளின் தொகுப்பாகவே உள்ளன. நல்ல கதை அம்சமோ, கருத்தாழமோ இடம்பெறுவதில்லை. ரசிகர்களை சிரிக்க வைப்பதே இவற்றின் நோக்கம். அதிலும் பல நாடகங்களில் வரும் நகைச்சுவை மிகவும் தரக்குறை வானவை. அரங்கைவிட்டு வெளியேறுகையில், ஏன் சிரித்தோம் என்றுபலர் வெட்கப்படுவதுமுண்டு. இத்தகைய நவீன நாடகப்போக்கிற்கு மாறாக ‘தண்ணீர் – தண்ணீர்’ நாடகம் அமைந்தது.நாமெல்லாம்  பெருமைப்படக்கூடியது. சமூகப் பிரக்ஞையுடன் உள்ளடக்கத்தைத் தேர்வு செய்து நல்ல கதையம்சத்துடன் வெளிவந்துள்ள இந்நாடகத்திற்கு தமிழகமெங்கும பெரும்வரவேற்பு கிடைத்ததில் ஆச்சரியமில்லை. ஒரு முழுநீளநாடகம் தயாரிப்பதற்குச் செலவு அதிகமாகுமே என்று தயங்குவோருக்கு மேற்கூறிய அனுபவம் ஒரு நல்ல படிப்பினை. மக்களது பிரச்சனைகளை நல்ல கலையம்சத்துடன் கொண்டு வந்தால் அதற்குக் கிடைக்கும் மக்கள் ஆதரவு செலவு போன்ற பிரச்சனைகளைச் சுலபமாக்கிவிடும். நிஜநாடகங்கள் என்ற பெயரில் பல புதுநாடகங்களும் வெளி வருகின்றன. இவைகளில் சில வெற்றியும் அடைந்துள்ளன.

நாடகங்கள் எந்த உருவத்தில் வந்தாலும் அவை முற்போக்கான உள்ளடக்கமும், கலை அம்சமும், கருத்தாழமும் உள்ளனவாக இருந்தால் மக்களது ஆதரவு நிச்சயமாகக் கிடைக்கும். வடிவங்களுக்குள் சென்ற பெரும் சர்ச்சைகளில் ஈடுபடுவது பயன்தராது. வடிவம் எத்தன்மையாக இருந்தாலும் அதன் உள்ளடக்கமே முக்கியமானது. கலை நயமே முக்கியமானது. சமூகப் பிரக்ஞையுள்ளதாக ஒரு நாடகம் இல்லையென்றால் அந்நாடகத்தின் வெற்றி பற்றிப் பேசிப்பயனில்லை. திரைப்படக்கதை இலக்கியத்தில் சமீப காலத்தில் சில மாறுதல்கள் நிகழ்ந்துள்ளன. சில நடிகர்களுக்காகவே கதை எழுதுவது – இதற்காகவே கதை இலாகாவை உருவாக்கிக்கொள்வது என்றிருந்ததில் மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. பழைய நிலை மாறி கதாசிரியர்கள், இயக்குநர்களின் ஆளுகை உருவாகி வருகிறது. எதார்த்தமும் மனிதாபிமான உணர்வும் கொண்ட தரமான திரைப்படமாக இருக்குமானால் அவை மக்கள் மனதைக் கவ்விப்பிடிக்கும் என்பதைச் சமீபத்தில் சில நல்ல படங்கள் நிரூபித்துள்ளன. எனினும், ஜேம்ஸ்பாண்ட் பாணிகளும், அதீத பாலியல் போக்குகளும் தனிமனித ஆராதனைகளும் இன்னும் தமிழ்ப் படங்களில் ஆதிக்கம் செலுத்தத்தான் செய்கின்றன.

Leave a Reply

You must be logged in to post a comment.