திருவனந்தபுரம்:
தென் மாநிலங்களின் வரி வருவாயை, வட இந்தியாவிற்கு வாரி இறைக்கும் மோடி அரசின் வஞ்சகம் குறித்து, தென் மாநிலங்களின் நிதி அமைச்சர்களுக்கு கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக் கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக ஆலோசனைக் கூட்டம் ஒன்றுக்கும் தாமஸ் ஐசக் அழைப்பு விடுத்துள்ளார்.
மத்திய அரசுக்கு, தென் மாநிலங்கள்தான் அதிக அளவில் வரி வருவாயை ஈட்டித் தருகின்றன. ஆனால் தென் மாநிலங்களுக்கு நிதியை குறைத்துவிட்டு, வரி வருவாயை ஈட்டித் தராத வட மாநிலங்களுக்கு மத்திய அரசு அதிக நிதி ஒதுக்கீடு செய்வதாக குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகிறது.இதுதொடர்பாக, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அண்மையில் குரல் எழுப்பினார். இதையடுத்து தென் மாநிலங்களுக்கான நிதி குறைக்கப்பட்டதற்கு கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் கண்டனம் தெரிவித்தார்.

இந்நிலையில், கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக், அனைத்து தென் மாநில நிதி அமைச்சர்களுக்கும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், தென் மாநிலங்களின் வரி வருவாய், வடமாநிலங்களுக்கு சூறையாடப்படுவதை தடுத்து நிறுத்துவது தொடர்பாக, ஏப்ரல் 10-ஆம் தேதி ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில், தென்மாநிலங்களின் நிதியமைச்சர்கள் பங்கேற்குமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும், இந்த கூட்டத்திற்கு, கொள்கை அளவில் அனைத்து தென் மாநில, நிதி அமைச்சர்களும் சம்மதம் தெரிவித்து இருப்பதாக கூறியிருக்கும் தாமஸ் ஐசக், எனினும் எழுத்துப்பூர்வமான பதில் இன்னும் வரவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.