புதுதில்லி:
காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்சனைக்கு தீர்வுகாண, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், மோடி அரசோ, ‘காவிரி மேற்பார்வை ஆணையம்’ என்ற அதிகாரம் எதுவும் இல்லாத அமைப்பை ஏற்படுத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த மேற்பார்வை ஆணையமும் மார்ச் 29-ஆம் தேதிக்குள் அமைக்கப்படாது என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.கர்நாடகத்திற்கு சாதகமாக எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவின்மூலம் தமிழக மக்களுக்கு மிகப்பெரிய துரோகம் இழைக்கப்பட்டுள்ளதாக தமிழகத்தில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் இறங்கியுள்ளனர். மத்திய அரசு தனது முடிவை மாற்றிக் கொள்ளாவிட்டால் போராட்டம் தீவிரம் அடையும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக, கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தனது இறுதி தீர்ப்பை அளித்தது. அதில், காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை 177.25 டிஎம்சி என்றும், கர்நாடகத்திற்கு உரிய தண்ணீரை 284.75 டிஎம்சி என்றும் பங்கீடு செய்த உச்ச நீதிமன்றம், ஒதுக்கீடு செய்யப்பட்ட தண்ணீர் கிடைப்பதை உத்தரவாதம் செய்யும் வகையில், முறைப்படுத்தும் திட்டம் ஒன்றை 6 வாரங்களுக்குள் மத்திய அரசு வகுக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது.

உச்ச நீதிமன்றம் கூறிய அந்த ‘முறைப்படுத்தும் திட்டம்’ எது? என்பதில் சர்ச்சை எழுந்தது. அப்போது, முறைப்படுத்தும் திட்டம் என்பது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்; அதாவது, நடுவர் மன்றம் முன்பு கூறியபடி, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கலாம் அல்லது காவிரி நீர் முறைப்படுத்தும் குழு என எந்த பெயரில் வேண்டுமானாலும் அது இருக்கலாம் என்பதாக மத்திய அரசு வியாக்யானம் செய்தது.

ஆனால், உச்ச நீதிமன்றம் கூறிய முறைப்படுத்தும் திட்டம் என்பது காவிரி மேலாண்மை வாரியமே என்று குறிப்பிட்ட தமிழக அரசு, உச்ச நீதிமன்றம் நிர்ணயித்த 6 வார காலக்கெடு மார்ச் 29-ஆம் தேதியுடன் முடிவடைவதால், அதற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்த கூட்டத்தில் வலியுறுத்தியது.

கடந்த மார்ச் 9-ஆம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கிய காவிரி நீர் தொடர்பான தீர்ப்பை அமல்படுத்துவது குறித்து தில்லியில் மத்திய நீர்வளத்துறை செயலாளர் தலைமையில் 4 மாநில அதிகாரிகளின் கூட்டம் நடந்தது. அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, காவிரி நதி நீர் தொடர்புடைய 4 மாநிலங்களும் எழுத்துப்பூர்வ அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீர்வளத்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டது. அதனடிப்படையில் 4 மாநிலங்களும் தங்களின் அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்தன.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று வழக்கம்போல தமிழகம் வலியுறுத்தியிருந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது என்றும் கர்நாடக அரசு தனது எழுத்துப்பூர்வ அறிக்கையில் கூறியது. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தால் அணைகள் மீதான கட்டுப்பாட்டை கர்நாடக அரசு இழக்க நேரிடும் என்ற தனது அலறலையும் வெளிப்படுத்தியது.

அதேநேரம், காவிரி மேற்பார்வை ஆணையம், கண்காணிப்புக்குழு போன்றவற்றை அமைக்க ஆட்சேபம் இல்லை என்று கர்நாடக அரசு தெரிவித்திருந்தது.தற்போது 4 மாநில அரசுகளின் எழுத்துப்பூர்வ அறிக்கையை வைத்து, காவிரி நதி நீர் பங்கீட்டுக்கான வரைவுத் திட்டம் ஒன்றை நீர்வளத்துறை அமைச்சகம், மத்திய அமைச்சரவைக்கு அனுப்பியுள்ளது. அதில், கர்நாடக அரசு கூறியபடி, காவிரி மேலாண்மை வாரியத்திற்குப் பதிலாக, அதிகாரமற்ற “காவிரி மேற்பார்வை ஆணையம்” அமைக்கும் திட்டத்தையே நீர்வளத்துறை அமைச்சகம் கையிலெடுத்துள்ளது.

ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் 9 உறுப்பினர்களைக் கொண்ட இந்த மேற்பார்வைக்குழுவில் தலைவர் உள்பட 5 பேர் முழு நேர உறுப்பினர்களாகவும், மீதமுள்ள 4 பேர் 4 மாநிலங்களில் இருந்தும் அவ்வப்போது இடம்பெறும் வகையிலும் திட்டத்தை வடிவமைத்துள்ளது.
அதுமட்டுமன்றி, இந்த காவிரி மேற்பார்வை ஆணையமும், மார்ச் 29-ஆம் தேதிக்குள் அமைக்கப்படாது என்று நீர்வளத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

மார்ச் 29-ஆம் தேதிக்குள் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்தாவிட்டால் மார்ச் 31-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு செய்திருந்தாலும், அதனை சமாளித்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு கருதுவதாகவும் கூறப்படுகிறது.

தமிழக விவசாயிகளுக்கு எதிரான மோடி அரசின் இந்த மோசடி திட்டத்தால், தமிழக விவசாயிகள் கொந்தளிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அவர்கள் மிகப்பெரும் போராட்டங்களை நடத்துவதற்கு திட்டமிட்டு வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.