திருவனந்தபுரம்:
காங்கிரசுடன் சிபிஎம் தேர்தல் உடன்பாடு செய்துகொள்ளாது என சிபிஎம் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தெரிவித்தார். அதே நேரத்தில் வகுப்புவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளை ஒருங்கி ணைப்பதில் சிபிஎம் தலைமை வகிக்கும் எனவும் அவர் கூறினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டை முன்னிட்டு திருவனந்தபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கத்தை துவக்கி வைத்து சீத்தாராம் யெச்சூரி மேலும் பேசியதாவது: இந்தியாவை பாசிஸ்ட் நாடாக மாற்றுவதே பாஜகவின் லட்சியம். ஒரே இரவில் அதை சாதித்துவிட முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும். படிப்படியாக அதை செயல்படுத்துவதற்கு முயன்று வருகிறார்கள்.

அனைத்தையும் தலைகீழாக மாற்ற விரும்புகிறார்கள். நாடாளுமன்ற ஜனநாயகத்தை எவ்வாறு சிதைக்கிறார்கள் என்பதற்கு உதாரணம் தற்போது நாடாளுமன்றத்தில் அரங்கேறிவருகிறது. நம்பிக்கை யில்லா தீர்மானத்தை எதிர்கொள்ள அஞ்சுவதாலேயே நாடாளுமன்றத்தைசெயல்படவிடாமல் தடுக்கிறார்கள். பாஜக அதிகாரத்துக்கு வந்த பிறகு தேர்தல் நடைமுறைகள் மாற்றப்பட்டுள்ளன. பணாதிபத்தியமே வெற்றி
பெறுகிறது. தேர்தலில் தோல்வி அடைந்தாலும் அரசமைப்பதை பாஜக நடைமுறையாக கொண்டுள்ளது.

அதை பணத்தை வாரியிறைத்து செய்கிறார்கள். வெள்ளியன்று நடந்த மாநிலங்களவைத் தேர்தலிலும் அது அரங்கேறியது. தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்புகளின் செயல்பாடுகளிலும் பாஜக தலையிடுகிறது. இந்திய வரலாற்றுக்கு பதிலாக புராணங்களும், இதிகாசங்களும் படிக்க வேண்டும் என சங்பரிவார் கூறுகின்றன. வரலாற்றை மட்டுமல்ல, சாத்திரங்களையும் சொந்த விருப்பத்துக்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

மன்மோகன்சிங் ஆட்சி காலத்தில் இந்தியாவின் சொத்துகளில் 49 சதவீதம் நாட்டின் ஒரு சதவீதம் பணக்காரர்களிடம் இருந்தது. ஆனால் மோடியின் ஆட்சி காலத்தில் 73 சதவீதம் சொத்துகள் அவர்களது கைக்கு சென்றுள்ளன. அந்த அள வுக்கு தீவிரமாக நவீன தாராளமய கொள்கைகளை பாஜக அரசு நடை முறைப்படுத்தி வருகிறது. இதன் பயனாக விவசாயிகள் தற்கொலை அதிகரித்தது. ஆனால் இந்த துயரங்களை அனுபவிக்கும் மக்கள் அதற்கான காரணத்தை உணரத் தொடங்கிவிட்டனர். மகாராஷ்டிராவில் நடந்த விவசாயிகள் போராட்டம் அதற்கு உதாரணமாகும்.

மேலும் பல பகுதிகளுக்கு இந்த போராட்டம் பரவும். இந்த மக்கள் போராட்டங்களுக்கு சிபிஎம் தலைமை வகித்து குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கும். சங்பரிவார் சக்திகளின் கண்களை கேரள மாநிலம் உறுத்துகிறது. காரணம் அவர்களது விருப்பங்கள் இங்கே நிறைவேறவில்லை. எனவே, அவர்கள் மேலும் அதிகமான வன்முறைகளில் ஈடுபடுகிறார்கள்.

முன்பும் இதுm போன்ற வன்முறைகள் நடந்ததுண்டு. அவற்றை எதிர் கொண்டு முறியடித்தது
போல் இப்போதும் சங்பரிவார் முயற்சிகளை தடுத்து நிறுத்தும் ஆற்றல் கேரளத்துக்கு உள்ளது என யெச்சூரி கூறினார். கருத்தரங்கத்திற்கு சிபிஐ மாநிலச் செயலாளர் கானம் ராஜேந்திரன் தலைமை வகித்தார். சிபிஐ தேசிய செயலாளர் து.ராஜா உள்ளிட்டோர் பேசினர்.

Leave A Reply

%d bloggers like this: