தாராபுரம்:
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காவிட்டால் டெல்டா விவசாயிகளுக்கு ஆதரவாக மாநிலம் தழுவிய கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் சென்னையில் மே 5-ல் நடைபெறும் 35 வது வணிகர் தின மாநில மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டம் தாராபுரத்திலுள்ள வர்த்தக கழக திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பேரமைப்பின் திருப்பூர் மாவட்ட தலைவர் ராஜசேகர் தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் பங்கேற்ற பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரம ராஜா பேசியதாவது,

மத்திய, மாநில அரசுகள் வியாபாரிகளுக்கு பல புதிய வரிகளை விதித்து, வியாபாரிகள் 13 க்கும் மேற்பட்ட லைசென்ஸ்களை பெற்று கணக்குகளை தாக்கல் செய்து வியாபாரம் நடத்து வேண்டியதாக உள்ளது. ஜிஎஸ்டி வரியிலேயே பல குளறுபடிகள் உள்ளன. இதை மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்து சென்றுள்ளோம். சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு மறைமுகமாக ஊடுவி வருவது கவலையளிக்கிறது. வியாபாரிகளின் இத்தகைய பிரச்சினைகளை தீர்வு காணவே சென்னையில் நடைபெறும் மாநாட்டில் அனைத்து கட்சி தலைவர்களையும் அழைத்து பேசி தீர்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

மேலும், காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு மார்ச் 30 ஆம் தேதிக்குள் அமைக்காவிட்டால் எங்கள் அமைப்பின் மாநில நிர்வாகிகளுடன் கலந்து பேசி, டெல்டா விவசாயிகளுக்கு ஆதரவாக மாநிலம் தழுவிய கடையடைப்பு போராட்டத்தை நடத்த உள்ளோம். இது விவசாயிகளின் பிரச்சனை மட்டுமல்ல. பல்வேறு மாவட்டங்களில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் முலம் பொதுமக்களும் பலன் பெற்று வருகின்றனர். இதேபோல், கோவில் வளாகம் அருகே கடை நடத்தி வரும் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை காக்க நீதிமன்றங்களும், அரசும், அறநிலையத் துறையினரும் கருணையுடன் பரிசீலித்து கடைகளை தொடர்ந்து நடத்த அனுமதிக்க வேண்டு. இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, இந்தகூட்டத்திற்கு மாநில துணைத் தலைவர்கள் பாலநாக மாணிக்கம், ஞானசேகரன், தாராபுரம் வணிகர் சங்க செயலாளர் பாலகிருஷ்ணன், சாரதாஸ் சண்முகவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முடிவில் பொருளாளர் கதிர்வேல் நன்றி கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: