ராஞ்சி:
கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான 4-ஆவது வழக்கிலும், ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு தற்போது 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் லஞ்ச ஒழிப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் தலா 7 ஆண்டுகள் என்ற அடிப்படையில், இந்த சிறைத்தண்டனையை வழங்கியுள்ள நீதிமன்றம், இதனை லாலு ஒன்றன்பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
ஒன்றுபட்ட பீகார் மாநில முதல்வராக 1990 முதல் 1997 வரை லாலு பதவி வகித்தபோது, கால்நடைகளுக்கு தீவனம் வாங்கியதில் ரூ. 950 கோடி ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. 1996-ஆம் ஆண்டு ஜனவரியில் கால்நடைத்துறை துணை ஆணையர் அமித் கார்ரே நடத்திய சோதனையில் இந்த முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த ஊழல் தொடர்பாக, பாட்னா உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மொத்தம் 63 வழக்குகளை சிபிஐ பதிவு செய்தது. காங்கிரஸ் ஆட்சியில் நடந்த மாட்டுத்தீவன ஊழல்கள், லாலு பிரசாத் ஆட்சியில் 1991 முதல் 1993-ஆம் ஆண்டு வரை நடந்த ஊழல்கள் என தனித்தனியாக வழக்குகளைப் பதிவு செய்யப்பட்டன.

சாய்பாஷா, தியோஹர் மாவட்ட அரசுக் கருவூலங்களில் நடந்த முறைகேடு உள்ளிட்டவை தொடர்பாக, லாலு பிரசாத் மீது மட்டும் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவற்றில் சாய்பாஷா மாவட்டக் கருவூலத்திலிருந்து 78 போலி ஒதுக்கீடு கடிதங்கள் மூலம் ரூ. 37 கோடியே 70 லட்சம் பணம் எடுத்தது தொடர்பான முதல் வழக்கில், லாலு பிரசாத் மற்றும் ஜெகன்னாத் மிஸ்ரா ஆகியோருக்கு, கடந்த 2013-ஆம் ஆண்டே, சிபிஐ நீதிமன்றம் 5 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ. 25 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியது.தண்டனை அறிவிப்பைத் தொடர்ந்து, அப்போது, லாலு பிரசாத்தின் மக்களவை உறுப்பினர் பதவி போனதுடன், உடனடியாக அவர் சிறையில் அடைக்கப்பட்டார். லாலு பிரசாத், 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் நிற்க முடியாத நிலையும் ஏற்பட்டது. எனினும், 2 மாதம் வரை சிறையில் இருந்த லாலு, உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று வெளியே வந்தார்.

இதனிடையே, தியோஹர் கருவூலத்தில் இருந்து 89 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் முறைகேடாக எடுக்கப்பட்டது தொடர்பான, லாலு மீதான 2-ஆவது வழக்கில் விசாரணை முடிவடைந்து. கடந்த ஜனவரி 6-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், லாலு பிரசாத்துக்கு மூன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதனால் லாலு மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

18 நாட்களில் மாட்டுத் தீவன ஊழல் தொடர்பான 3-ஆவது வழக்கிலும் தீர்ப்பு வழங்கப்பட்டது. ஜார்க்கண்ட் மாநிலத்திலிருக்கும் சாய்பாஷா கருவூலத்தில் ரூ. 33 கோடியே 67 லட்சம் கையாடல் செய்ததாக தொடரப்பட்ட இந்த வழக்கில், லாலு பிரசாத்துக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.தும்கா கருவூலத்திலிருந்து ரூ. 3 கோடியே 97 லட்சமும், டோரண்டா கருவூலத்தில் ரூ. 184 கோடியும் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட 2 வழக்குகள் நிலுவையில் இருந்தன.
இந்நிலையில், தும்கா கருவூலத்தில் ரூ. 3 கோடியே 97 லட்சம் கையாடல் செய்த வழக்கிலும் லாலுவை குற்றவாளி என்று, மார்ச் 19-ஆம் தேதி ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மற்றொரு முன்னாள் முதலமைச்சரான ஜெகநாத் மிஸ்ராவை குற்றமற்றவர் என விடுதலை செய்த நீதிமன்றம், இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த 31 பேரில் 19 பேரின் குற்றத்தை உறுதி செய்தது. தண்டனை விவரம் மார்ச் 24-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

அதன்படி, மாட்டுத்தீவன ஊழல் தொடர்பான 4-ஆவது வழக்கில், தண்டனையை அறிவித்த ராஞ்சி சிறப்பு நீதிமன்றம், இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் லஞ்ச ஒழிப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் தலா 7 ஆண்டுகள் வீதம் லாலு பிரசாத்துக்கு மொத்தம் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படுவதாக தீர்ப்பளித்தது. அதாவது, அடுத்தடுத்து 7 ஆண்டுகள் என மொத்தம் 14 ஆண்டுகள் அவர் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். மேலும், இவ்வழக்கில் லாலு-வுக்கு 60 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: