ஈரோடு:
திமுகாவின் ஈரோடு மண்டல மாநாடு பெருந்துறையில் 24ஆம் தேதி துவங்கியது.
மாநாட்டில், துவக்க நிகழ்ச்சியாக சட்ட பேரவை உறுப்பினர் கோவை செழியன் கொடியேற்றி வைத்தார்.

திமுக..வின் துணைச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் தலைமை வகித்து பேசும் போது, நீதிக்கட்சி ஆட்சியின் போது, பெண்களுக்கு வாக்குரிமை, வேலை வாய்ப்பில் வகுப்புவாத விகிதாசார உரிமை, எல்லாத் தரப்பு மாணவர்களையும் கல்லூரியில் சேர்த்தல், முதல் இட ஒதுக்கீடு சட்டம், வகுப்புவாரி ஒதுக்கீடு சட்டம் போன்ற பல்வேறு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.

தற்போது, நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதால், பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளது.
பணமதிப்பு இழப்பு மற்றும் ஜிஎஸ்டி வரி விதிப்பின் காரணமாக தொழில்வளம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, படித்த இளைஞர்கள் மத்தியில் வேலை இல்லாத் திண்டாட்டம் அதிகமாகியுள்ளது. இது, சட்ட ஒழுங்கு சீர்குலைவு, வழிப்பறி, கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற பல குற்றச் செயல்கள் பெருகுவதற்கு காரணமாக உள்ளது.
திராவிட இயக்கத்தை அழிப்பதற்காக, மதக்கலவரங்களை ஏற்படுத்தி சதிவேலைகள் செய்து வருகிறார்கள். சிலைகளை உடைகிறார்கள் ஆனால், இது இரும்பு கோட்டை இதனை யாரும் தகர்க்க முடியாது.

நதிநீர் இணைப்புக்கு முதலிடம் கொடுத்து கோதாவரி ஆற்றிலிருந்து வீணாக கடலில் கலக்கும் 3ஆயிரம் டிஎம்சி நீரில் 70 டிஎம்சி கோதாவரியிலிருந்து தெற்கே திருப்பி அங்குள்ள ஆறுகளோடு இணைத்து காவிரியில் கரிகாலன் அமைத்த கல்லணை வரை கொண்டு சேர்க்க வேண்டும்.
இவ்வாறு பேசினார்.

மாநாட்டு திறப்புரை நிகழ்த்திய திருச்சி சிவா எம்.பி. பேசுகையில், திமுக ஆட்சிக்கு வந்தால் முதலில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என உறுதியளிக்கிறோம். தமிழ்நாட்டு மக்கள் திமுகவை நம்பியுள்ளார்கள். மத்தியில் உள்ள அரசு ஒரு நாடு, ஒரு மதம், ஒரு கலாச்சாரம் என மெல்ல மெல்ல நடைமுறைப்படுத்துகிறார்கள். மாநில உரிமைகள் பறிக்கப்படுகிறது. இதனை எதிர்த்து போராட வேண்டும். இந்தி மொழியை திணிக்கிறது, சமஸ்கிருதத்தை திணிக்கிறது, இவையனைத்தையும் நீக்க வேண்டும்.

இந்தியாவில் முதன் முதலாக திருநங்கைகளுக்கு வாரியம் அமைத்தது திமுக, அதற்கு துணையாக இருந்தது ஸ்டாலின் தான் என கூறினார்கள். தளபதிக்கு இரண்டு கண்கள் உள்ளன. ஒன்று கழகம், மற்றொண்டு தொண்டர்கள் தான். இருவருக்கும் கண்ணீர் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எங்களிடம் வேர்வையும் குருதியும் உள்ளது. குருதியையும் சிந்துவதற்கு தயாராக இருக்கிறோம் என பேசினார்.

மாநாட்டில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன், முதன்மைச் செயலாளர் துரைமுருகன், கனிமொழி எம்.பி. உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். மாநாடு ஞாயிறன்றும் நடைபெறுகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.