நாம் யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்பதையே, நாம் சுயமாக தீர்மானிப்பதில்லை. அது ஒரு கட்டமைக்கப்பட்ட கருத்துருவாக்க ஆதிக்கத்தின் கீழ் நாம் தீர்மானிக்கிறோம் என்பதை நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும். ஒரு நிமிடம் நம் தேர்தல் காலத்தில் நடந்தவற்றை பின்னோக்கி பார்த்தால் உண்மை புலப்படும். தேர்தல் காலங்களில் எந்த மாதிரியான தலைவர்களை மட்டும் சமூக ஊடகங்கள் மற்றும் கார்ப்பரேட் ஊடகங்கள் முன்நிறுத்தின. மற்ற தலைவர்களை எவ்வாறு இழிவு செய்தனர். நம்மையறியாமல் வெறுக்கவும், மறக்கவும் செய்தனர் என்பதை பார்த்தாலே புரியும். இந்த கருத்துருவாக்க கட்டமைப்பு என்பது தானாக நடந்ததில்லை. மிகப்பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள், முதலாளித்துவ அரசியல் கட்சிகளின் கூட்டணியில் திட்டமிட்டு கட்டமைக்கப்படும் கருத்துருவாக்கம் என்பது தற்போது அம்பலமாகியிருக்கிறது.

அமெரிக்கா துவங்கி இந்தியாவின் கடைக்கோடி கிராமம் வரை அந்த கருத்துருவாக்க கட்டமைப்பு பணியில் ஈடுபட்டோம். அந்த பணி தேர்தலில் திசைவழியை மாற்றியது என அந்த பணியில் ஈடுபட்ட லண்டனை சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறது. இதற்கு உடந்தையாக நாங்களும் இருந்திருக்கிறோம் என பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் பகிரங்க மன்னிப்பு கோரியிருக்கிறார். இது ஒருபுறம்.

கருத்துருவாக்கம்..

மறுபுறம் நாம் எதை படிக்க வேண்டும். எதை சிந்திக்க வேண்டும். எதை ஆதரிக்க வேண்டும். எதை நிராகரிக்க வேண்டும். எதை உண்ண வேண்டும். எதை உடுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட நமது அன்றாட நடவடிக்கைகளில் பெரும் பகுதியை தீர்மானிப்பது ஊடகங்களால் உருவாக்கப்பட்டிருக்கும் கருத்துருவாக்கம்தான். இங்கு ஊடகம் என்பது இதுவரை இருந்து வந்த பாரம்பரிய ஊடகங்கள் அல்ல. மாறாக இன்று நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால் நம்மை ஆக்கிரமித்து நிற்கும் டிஜிட்டல் ஊடகம். இன்றைய அரசியல் திசைவழியை மட்டுமல்ல, அனுதின நடவடிக்கைகளையுமே இந்த டிஜிட்டல் ஊடகம் வழிநடத்தும் நிலையில் இருந்து வருகிறது. ஒட்டுமொத்த சமூகத்தின் ஒவ்வொரு அசைவிலும் பின்னி பிணைந்து இருக்கிறது. குறிப்பாக அதிகார வர்க்கத்தினரால் பாதிக்கப்படும் பகுதியினரிடமிருந்தே, அதிகார வர்க்கத்திற்கு ஆதரவான கருத்தை உருவாக்குவதே இந்த டிஜிட்டல் ஊடகத்தின் முக்கிய பணியாக இருந்து வருகிறது.

இசைவு உற்பத்தி

இதனை பேரறிஞர் நோம்சோம்ஸ்கி(Manufacturing Consent ) இசைவு உற்பத்தி என்கிறார். இந்த இசைவு உற்பத்தி யாரால், யாருக்காக மேற்கொள்ளப்படுகிறது என்பதை பார்த்தாலே இதன் வர்க்க அரசியல் புலப்படும். இன்று நாம் பயன்படுத்தி வரும் பிரதான 10 சமூக ஊடகத்தில் நான்கு பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமானவை. உலகில் 70 சதவிகிதமான செய்தி இணைய பக்கங்கள் கூகுள் மற்றும் பேஸ்புக் ஊடாகவே மக்களை சென்றடைகின்றன. இன்று உலகின் அதிகார மிக்க பெரிய ஊடகமாக கூகுள் நிறுவனம் மாறியிருக்கிறது. மக்களுக்கு ஒரு தகவலை கொண்டு போய் சேர்ப்பது என்பது வேறு, ஒரு கருத்தை ஏற்க செய்வதென்பது வேறு. தற்போது தகவலை கொண்டு சேர்க்கும் முறையிலேயே கருத்தை ஏற்க செய்வதையும் நுட்பமாக செய்து வருகிறது.

இந்த சமூக ஊடக நிறுவனங்கள் ஒரு கருத்தையோ, செய்தியையோ, தகவலையோ அப்படியே மக்களிடம் கொண்டு சேர்ப்பதில்லை. மாறாக அந்த நிறுவனம் விரும்பும் விஷயத்தை மட்டும் வடித்தெடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்கின்றன என்கிறார் நோம்சோம்ஸ்கி. இந்த வடி கட்டி முறையில் குறிப்பிடத்தக்க மிக முக்கியமான வடிகட்டியாக இருப்பது, வர்க்க வேறுபாடும், சோசலிச எதிர்ப்பும் முக்கியமாக இருக்கிறது. பெரும்பாலான ஊடகங்கள் சோசலிச எதிர்ப்பை இயல்பிலேயே கொண்டிருக்கின்றன. அதன் காரணமாகவே சோசலிச சிந்தனைக்கு எதிரான அவதூறுகளும், பொய்களும் இடைவிடாது பரப்பப்படுகிறது. அதன் ஒரு பரிணாமமாக சாதாரண மக்களின் பிரச்சனையை வெறுமனே பொதுப்புத்தி மட்டத்திலிருந்து மட்டுமே அலசுகின்றன. உண்மையான பிரச்சனையை வெளிக்கொணருவதில்லை என்கிறார் நோம்சோம்ஸ்கி.

திரிபுரா தேர்தல்

நடந்து முடிந்த திரிபுரா தேர்தலில் பாஜக 43 சதவிகிதம் வாக்குகளை பெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை விட 42.7 சதவிகிதம் வாக்குகளை பெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கட்சியை விட 0.3 சதவிகிதம் கூடுதல் வாக்குகளை பெற்று ஆட்சியை பிடித்திருக்கிறது. இந்த தேர்தலில் பாஜக பயன்படுத்திய மிகப்பெரிய ஆயுதம் டிஜிட்டல் ஊடகம். அதாவது சமூக வலைத்தளம் என்று பாஜகவின் திரிபுரா தேர்தல் பொறுப்பாளர் சுனில் தியோடர் கூறுகிறார். சிபிஎம் உறுப்பினர்களை தவிர்த்த அனைவரின் சாதகத்தையும் டிஜிட்டல் மயத்தின் உதவியோடு கையில் வைத்து தேர்தல் களத்தில் இறங்கினோம். திரிபுரா மக்கள் பயன்படுத்தி வரும் 600 முதல் 700 மொபைல் போன்களில், 300 முதல் 350 போன்களில் வாட்ஸ்ஆப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் பயன்படுத்துவதை முதலில் உறுதி செய்தோம். இப்படி திரிபுரா முழுவதும் உள்ள சிபிஎம் உறுப்பினர்களை தவிர்த்த நபர்களின் வாட்ஸ்ஆப், பேஸ்புக்கில் ஊடுருவி நிறுவன மயப்படுத்தப்பட்ட வகையில் கருத்துகளை விதைத்து வந்தோம். அதாவது தினமும் ஒரு எடிட் செய்யப்பட்ட வீடியோ, ஒரு கார்ட்டூன், மாணிக்சர்க்காருக்கு எதிரான பிரச்சார கருத்து, பாஜக ஆதரவு கருத்து என தினமும் நான்கு செய்திகளை அனுப்பி வந்தோம். ஒரு நாள் இரண்டு நாள் அல்ல கடந்த இரண்டு வருடங்களாக இந்த பணியில் ஈடுபட்டோம்.

அதன் மூலம் 1லட்சத்து 75 ஆயிரம் உறுப்பினர்களை இணையவழி மூலம் பாஜகவில் இணைத்தோம். திரிபுராவில் உள்ள மொத்த உறுப்பினர்கள் 2 லட்சம் பேர். இதில் வெறும் 25 ஆயிரம் பேரை மட்டுமே 2 வருடத்தில் நேரடியாக சந்தித்து கட்சியில் சேர்க்க முடிந்தது. இப்படி நாங்கள் முழுமையாக சமூக ஊடகத்தை பயன்படுத்தினோம். அதே நேரத்தில் மார்க்சிஸ்ட் கட்சி தரப்பில் இருந்து இது போன்ற சமூகஊடக பிரச்சாரம் இல்லாமல் இருந்தது எங்களுக்கு மிகவும் வசதியாக இருந்தது என்று கூறியிருக்கிறார். இந்த கருத்துருவாக்க வேலை பாஜக மட்டும் அவர்கள் ஐடி யூனிட்டை மட்டும் வைத்து செய்யவில்லை. பல்வேறு ஐடி நிறுவனங்களை கொண்டு செயல்படுத்தி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வர்க்க கடமை

உலகமயம் உள்ளூர் மையமாகியிருக்கும் இந்த வேலையில் பெரும்பகுதி உழைக்கும் வர்க்கமும் சமூக ஊடகத்தோடு இரண்டற கலந்தே இருக்கின்றனர். சமூக ஊடகத்தின் மூலம் திட்டமிட்டு முதலாளித்துவத்திற்கு ஆதரவான இசைவு உற்பத்தி முயற்சியில் இருந்து உழைக்கும் வர்க்கத்தை பாதுகாத்திட வேண்டும். அதற்கு நாமும் அதே டிஜிட்டல் மையப்படுத்தப்பட்டிருக்கும் சமூக ஊடகத்தை பயன்படுத்திட வேண்டும். இது தேர்தல் போராட்டத்திற்கு மட்டுமல்ல, தத்துவ மற்றும் வர்க்க போராட்டத்திற்கும் வலுவாக பயன்படுத்திட வேண்டும்.

குறிப்பாக மத்தியில் பாஜக அரசு பதவியேற்றதில் இருந்து, ஒட்டுமொத்த ஊடகங்கள் மூலம் மக்கள் நலனுக்கு எதிரான கொள்கைகளை மக்களே விரும்பி ஏற்றுக்கொள்ளச் செய்யும் இசைவு உற்பத்தி நடைபெற்று வருகிறது. அதோடு மதத்தின் பெயரில் மதவெறியை தூண்டி மக்களை மோதவிட்டு, அதில் அரசியல் ஆதாயம் தேடும் இழிவான செயலும் அரங்கேற்றப்பட்டு வருகிறது. இதனை தடுத்திடவும், சமூக நல்லிணக்கத்தை பேணிடவும் களத்திலும், சமூக ஊடகத்திலும் நாமும் வலுவாக களமாட வேண்டும்.

தீக்கதிர் எண்ம பதிப்பு

கார்ப்பரேட் மற்றும் சமூக ஊடகங்களில் சோசலிச, கம்யூனிச தத்துவங்களுக்கு எதிராக திரிக்கப்படும் கருத்துகளை எதிர்கொள்ள நாம் தீக்கதிர் எண்ம( டிஜிட்டல் ) பதிப்பை துவங்கினோம். சுதந்திர போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான தோழர் சங்கரையா இந்த இணைய பதிப்பை 23.3.16ல் துவக்கி வைத்தார். ஒரு மிகச்சிறிய கட்டமைப்புடன் துவங்கியிருக்கிறோம். ஆனால்  நமது எதிரிகள் நாம் டிஜிட்டல் ஊடகத்தில் நிலைபெற்று விடக்கூடாது என்பதில் குறியாக செயல்பட்டு வருகின்றனர். இணைய பக்கத்தை எப்படியாவது முடக்கிவிட வேண்டும் என முயன்று வருகின்றனர். நிறுவன மயப்படுத்தப்பட்ட தாக்குதலையும் நாம் மீது தொடர்கின்றனர். எப்போதெல்லாம் சங்பரிவார் அமைப்புகளின் சதிகளை ஆதாரத்தோடு அம்பலப்படுத்துகிறோமோ அப்போதெல்லாம் நமது இணைய பக்கம் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. எல்லாவற்றையும் எதிர்கொண்டு நிலைபெறுவதே மிகப்பெரிய சவாலாக இருந்த சூழலிருந்து , தற்போது பல்வேறு முனைகளில் முன்னேறி வருகிறோம். கூடிய விரைவில் முழுப்பலத்தோடு எதிரிகளை எதிர்கொள்வோம்.

நமது இணையத்தில் வரும் கருத்துகளையும், செய்திகளையும் அவரவர் சொந்த முகநூல் உள்ளிட்ட சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்து கருத்துகளை பரப்பிட வேண்டும். நமது கருத்துக்கு எதிரான கருத்துகள் பின்னூட்டமாக வரும்போது, அதனை தக்க ஆதாரத்துடன் அம்பலப்படுத்தி எதிர்வினையாற்றிட வேண்டும். இன்றைய சூழலில் களப்பணிகளை விட கூடுதலான, கருத்துருவாக்க பணிகளையும் ஒருசேர செய்திட வேண்டும். அப்போதுதான் நாம் இலக்கை எட்டிட முடியும்.

இதுவரை தீக்கதிர் இணைய பதிப்பில் வரும் கருத்துகளையும், செய்திகளையும் பகிர்ந்தும், கருத்துகளை பரிமாறியும் வந்த அனைத்து வாசகர்களுக்கு தீக்கதிர் தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. மேலும் இணைய பதிப்பில் தொழில்நுட்ப கட்டமைப்பை மேம்படுத்திடவும், கருத்துகளை வலுப்படுத்திடவும் ஒத்துழைப்பு கொடுத்த அனைத்து தோழர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. தவறுகளை சுட்டி காட்டியும், நிறைகளை பாராட்டியும் வரும் வாசகர்கள் தொடர்ந்து தங்களது நல் ஆதரவை நல்கிட வேண்டும் என்று 3ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்நாளில் வாசகர்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

                                                                                                                                   – எம்.கண்ணன்
                                                                                                                                   பொறுப்பாசியர்

Leave a Reply

You must be logged in to post a comment.