திரைப்படத் துறையினரின் வேலைநிறுத்தத்தில்  தலையிட்டு சுமூக தீர்வு காண தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கக் வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் முதல்வர் பழனிச் சாமிக்கு எழுதிய வி்பரம் பின்வருமாறு:
சில முக்கியமான கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கங்கள் கடந்த சில நாட்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தினை நடத்தி வருகின்றனர். இதன் விளைவாக, தமிழக திரையுலகமே ஸ்தம்பித்து இத்துறையில் நேரடியாக பணியாற்றும் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள், கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், மறைமுகமாக மேலும் சில லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், தமிழக மக்களும் திரையரங்கத்திற்கு சென்று திரைப்படம் பார்க்க இயலாமல் உள்ளார்கள்.
மத்திய அரசு திணித்துள்ள ஜி.எஸ்.டி. வரி 25 சதவிகிதம் உள்ள போது, 8 சதவித கேளிக்கை வரி வசூலிப்பது தங்களுக்கு கூடுதல் சுமையினை அளிப்பதாக போராடும் அமைப்பினர் தெரிவித்துள்ளார்கள். அண்டை மாநிலமான கேரளத்தில் ஜி.எஸ்.டி. வரி என்ற வரி மட்டுமே திரைத்துறை வழியாக வசூலிக்கப்படுவதையும், கேளிக்கை வரி தவிர்க்கப்பட்டிருப்பதையும் தமிழ்நாடு அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
கடந்த பத்தாண்டுகளாக தமிழ்த்திரை உலகம் கியூப், யூ.எப்.ஓ என புதிய தொழில்நுட்பம் சார்ந்து இயங்குவதை, சிலர் பயன்படுத்திக் கொண்டு பணம் சம்பாதிப்பது பெரும் பிரச்சினையை உருவாக்குகிறது என்பதைத் தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறோம்.
இத்தகைய காரணங்களால், திரைத்துறை என்பது பெரும் மூலதனம் படைத்தவர்களுக்கான துறையாக மாற்றப்பட்டுள்ளது. குறைந்த செலவில் படம் தயாரிப்பவர்கள், சினிமா துறையிலிருந்து வெளியேற்றப்படும் சூழ்நிலை நிலவுகிறது.
 தமிழ்த்திரை உலகம் மிகுந்த தொழில் நெருக்கடியில் சிக்கியிருப்பதால், கந்துவட்டிக் கடனால் தமிழ்த் திரைப்பட உலகம் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகியிருப்பதை கவனத்தில் கொண்டு, தயாரிப்பாளர்களுக்கு நியாயமான வட்டியில் கடன் கிடைக்க அரசு உதவ வேண்டும், இது சார்ந்த பிரச்சினைகளை கவனித்து தீர்வை எட்டுவதற்கான, தமிழ்நாடு திரைப்பட வளர்ச்சி கழகம் போன்ற அமைப்பை அரசு உருவாக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி கோருகிறது.
மக்களுக்கு மிகவும் முக்கியமான ரசனை துறையாக உள்ள சினிமாக்களை குடும்பத்துடன் திரையரங்கம் சென்று பார்ப்பதற்கு சிலநுhறு ரூபாய்களை செலவழிக்க வேண்டிய நிலையில், தமிழகத்தில் திரையரங்க கட்டணங்கள் தீர்மானிக்கப்பட்டுள்ளன. இதனால்,  திரையரங்குகளுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் குறைந்து வருவதாக விபரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, திரையரங்கு கட்டணங்களை   குறைவாகவும் ஓரே சீராகவும் இருப்பதை அரசு உறுதி செய்வதோடு, இதை மீறுபவர்கள் மீது அரசு விழிப்போடு இருந்து தடுத்திட வேண்டும்.
எனவே, தயாரிப்பாளர்கள், தொழிலாளர்கள், கலைஞர்கள், பொதுமக்கள் என பலதுறையினர் தொடர்புடைய  திரைத்துறை சார்ந்த இந்தப் பிரச்சினைகளில் தமிழக அரசு அவசரமாக  தலையிட்டு, பொருத்தமான தீர்வு காண வேண்டுமென வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.