புதுதில்லி, மார்ச் 23-

வெள்ளை ஏகாதிபத்தியத்தால் எண்பத்தேழு ஆண்டுகளுக்கு முன்பு தூக்கிலிடப்பட்ட பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோருக்கு இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

மாநிலங்களவை இன்று காலை தொடங்கியதும், அவைத் தலைவர் வெங்கய்யா நாயுடு எழுந்து, அஞ்சலிக் குறிப்பை வாசித்தார். அதில் கூறியிருந்ததாவது:

“மாண்புமிகு உறுப்பினர்களே, எண்பத் தேழு ஆண்டுகளுக்கு முன்பு நம் விடுதலை இயக்கத்தின் மாபெரும் ஹீரோக்களான பகத்சிங், ராஜ குரு, சுகதேவ்  இதே நாளன்று தியாகிகளானது உங்கள் அனைவருக்கும் தெரியும். அவர்களின் தியாகம் 1947இல் இந்தியா சுதந்திரம் பெறும்வரை அதற்காகப் போராடியவர்களின் மத்தியில் உறுதியை அளித்திருந்தது. அவர்களின் நாட்டுப்பற்று, தாய்நாட்டின் மீது அவர்களுக்கிருந்த சமரசமற்ற அர்ப்பணிப்பு மற்றும் அவர்களின் சுயநலமற்ற அவர்களின் தியாகம் இறவாப் புகழ் பெற்று  என்றென்றும் நீடித்திருந்திடும்.

தாய்நாட்டுக்காக சுயநலமின்றி செயல்பட்ட அவர்களை உதாரணமாகக்கொண்டு உத்வேகம் பெற வேண்டியது, முன்னெப்போதையும்விட இப்போது தேவையாகும். இந்தத்தருணத்தில்  அவர்கள் எதற்காகத் தங்கள் உயிரைத் தியாகம் செய்தார்களோ அத்தகைய  நாட்டுப்பற்றின் உன்னதமான மாண்புகளை உயர்த்திப்பிடித்திட உறுதி எடுத்துக்கொள்வோம்.”

இதனைத் தொடர்ந்து அனைத்து உறுப்பினர்களும் தங்கள் இருக்கையிலிருந்து எழுந்துநின்று ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.

இதேபோன்று மக்களவையிலும் உறுப்பினர்கள் ஒருநிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.

(ந.நி.)

Leave A Reply

%d bloggers like this: